தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பேசும் சிறுத்தை!

பேசும் சிறுத்தை!

பேசும் சிறுத்தை!


PUBLISHED ON : ஆக 16, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு சிறுத்தைப் புலி கிராமத்துக்கு அருகே உள்ள காட்டில், ஒரு வேடனால் வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் விழுந்துவிட்டது. அதனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. தான் அமைத்த பொறிக்குள் சிறுத்தை சிக்கியதைக் கண்ட வேடனுக்கு மகிழ்ச்சியாக யிருந்தது. பொறியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆனந்த நடனமாடினான்.

''ஹா, ஹா! சிறுத்தையே! என் வலைக்குள் விழுந்தாயா? சின்னப் புத்தி சிறுத்தையே! நீ எத்தனை முட்டாளாக இருந்தால், இவ்வளவு இலகுவாக வந்து மாட்டிக் கொண்டிருப்பாய்!'' என்று கொக்கரித்தான் வேடன்.

சிறுத்தை பதில் சொல்லிற்று, ''என் முட்டாள்தனம்தான் என்னை இங்கே சிறையாக்கி இருக்கிறது. உன் புத்திசாலித் தனம் உன்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது போலும்!''

வேடனுக்கு வியப்போ வியப்பு. 'சிறுத்தை பேசுகிறதே! இதுவரையில் பேசும் சிறுத்தையை யாரும் பிடித்ததே இல்லை. நான்தான் அந்தச் சாதனையைச் செய்துள்ளேன்' என்று குதூகலப்பட்டுக் கொண்டே கிராமத்துக்கு ஓடினான்.

''நான் பேசும் சிறுத்தையைப் பிடித்திருக்கிறேன்!'' என்று கூவினான்.

எல்லாரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். தன்னுடன் சிறுத்தை பேசிய விந்தையைக் கூறினான். ஆனால், யாரும் அவனை நம்பவில்லை.

''பொய், சிறுத்தையாவது பேசுவதாவது?'' என்றனர் ஊரார்.

''உண்மைதான். மற்ற சிறுத்தைகள் பேசாதிருக்கலாம். இது பேசுகிறது!''

''சிறுத்தைகள் மனித பாஷை பேசுவதாவது? முழுப் பொய்!''

''நான் சொல்வது பொய்யானால், நான் இனிமேல் காட்டிலே வசிக்கிறேன். கிராமத்துப் பக்கமே வரமாட்டேன்? போதுமா'' என்று சவால் விட்டான் வேடன்.

''நீ உன் வார்த்தையை மீறக்கூடாது. நினைவிருக்கட்டும். உன்னால் நிரூபிக்க முடியாவிட்டால், நீ காட்டுவாசியாகி விட வேண்டியது தான்,'' என்று உறுதி செய்துகொண்டு எல்லாரும் அவனுடன் காட்டுக்குப் போயினர். பொறிக்குள் விழுந்திருக்கும் சிறுத்தையிடம் அழைத்துப் போனான் வேடன்.

''சின்னபுத்திச் சிறுத்தையே! உன் முட்டாள்தனத்தால் வந்து மாட்டிக் கொண்டாயில்லையா?'' என்று கேட்டான்.

சிறுத்தை பதிலே சொல்லவில்லை.

''ஏ, புள்ளி போட்டுக் கொண்ட மிருகமே! நீ இங்கே வந்து சிக்கிக் கொண்டது, உன் முட்டாள்தனம் தானே?'' கத்தினான்.

சிறுத்தை மவுனமாக முடங்கிக் கிடந்தது. ஒரு குச்சியை எடுத்து அதைக் குத்தி மறுபடியும் அதேபோல் கத்திக் கூக்குரலிட்டான். ம் ஹும்! சிறுத்தை வாயே திறக்கவில்லை! கூட வந்தவர்கள் சிரித்தனர்.

''போய்யா, சிறுத்தை எங்காவது பேசுமா? நீதான் முட்டாள். உன் சபதபடி இனி நீ வாழ வேண்டிய இடம் இது தான். புரிந்ததா? இனி கிராமத்துக்கு வராதே. இங்கேயே உன் குடிசையை அமைத்துக்கொள்,'' என்று கூறிப் போய்விட்டனர்.

வேடனுக்கு வேதனையான வேதனை. ஆத்திரத்துடன் சாதுபோலப் படுத்திருக்கும் சிறுத்தையைப் பார்த்து, ''ஏ முட்டாள் மிருகமே! ஏன் நீ பேசவில்லை? முதலில் என்னிடம் மட்டும் பேசினாயே. நான் சாட்சிகளை அழைத்து வந்த போது ஏன் உன் வாய் அடைத்துப் போயிற்று?'' என்று கத்தினான்.

சிறுத்தை நிதானமாகப் பதில் சொல்லியது. ''என்னுடைய முட்டாள்தனம் என்னை இங்கே சிறைப்படுத்தியிருக்கிறது. உன்னுடைய புத்திசாலித்தனம் உன்னைக் காட்டுவாசியாக்கியிருக்கிறது. நம்மில் ஒருவர் ரொம்ப புத்திசாலி; மற்றவர் அடி முட்டாள். இப்படியே நாம் இருவரும் நம் வாழ்நாளை இங்கு முடித்துக் கொள்ளுவோம்.''

அதிபுத்திசாலியும், அடி முட்டாளும் சகோதரர்கள் என்ற பழமொழி வழங்குகிறது ஆப்பிரிக்காவில். அது இதனால் தானாம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us