PUBLISHED ON : ஆக 23, 2013

இதுவரை: கச்சேரியில் கிடைத்த தோழியின் வீட்டுக்குச் சென்று வயலின் வாசித்தாள் வனிதா. இனி -
வனிதாவின் வயலின் வாசிக்கும் திறமையை கண்டு குருமூர்த்தி வியந்து போனார்.
''குழந்தே! உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீ இங்கு வரலாம். வயலின் சாதகம் பண்ணலாம். எனக்குத் தெரிந்ததை நான் உனக்கு மகிழ்ச்சி யோடு சொல்லித் தருகிறேன்,'' என்று கூறினார் குருமூர்த்தி.
அவருடைய அன்பான, ஆதரவான பேச்சு வனிதாவுக்கு ரொம்ப இதமாக இருந்தது. தனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று நம்பினாள். பரசுராமின் கடையிலிருந்து தன் வயலினை குருமூர்த்தியின் வீட்டில் கொண்டு வந்து வைத்தாள். அடிக்கடி பத்மாவைத் தேடி அவள் வீட்டுக்குப் போனாள்.
குருமூர்த்தி அனேகமாக, வீட்டில் இருப்பார். அவர் இருந்தால் வனிதாவிற்கு வயலின் பாடங்களை நடத்துவார். அவர் இல்லாவிட்டால், வனிதா தன் வயலினில் சாதகம் செய்வாள். இப்படி குருமூர்த்தி வீட்டுக்குப் போக நிறைய சந்தர்ப்பங்களைத் தானே உருவாக்கிக் கொண்டாள்.
தொடர்ந்து சாதகம் செய்ய வாய்ப்புக் கிடைத்ததினால், பள்ளியில் சங்கர்லால் முன்பு திறமையாக வயலினை இயக்கி அவர் பாராட்டையும் பெற்றாள். வனிதாவிடம் சங்கர்லாலுக்கு ஏற்பட்டிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாயிற்று. குருமூர்த்தி வனிதாவை தன்னுடன், சிறு சிறு நிகழ்ச்சிகளுக்கு கூட்டிப்போனார். ஆனால், அவளை வரும்படி வற்புறுத்தவில்லை.
''உனக்கு விருப்பமானால் வா... இன்று பெருமாள் கோயிலில் ஒரு பஜனை. கூட்டத்தின் முன்னால் வாசிக்க பழகிக் கொள்ள வேண்டாமா? நீ தனியாக உட்கார்ந்து வாசிப்பதை விட, நாலு பேர் முன்னால் வாசிக்கும்போது உனக்கு ஒரு தனி உற்சாகம் ஏற்படும். அந்த அனுபவம் வித்தியாசமானது,'' என்பார்.
கச்சேரிகளில் கலந்து கொண்டாள் வனிதா. அதுவே அவளுக்கு வினையாக முடிந்தது.
ஒருநாள் லீலாவின் தோழி அவளிடம், ''லீலா, நேற்று எங்கள் தெருவிலுள்ள பஜனை மடத்தில் ஒரு நிகழ்ச்சி. அங்கு ஒரு அதிசயத்தை கண்டேன்!'' என்றாள்.
''பஜனை மடத்தில் அதிசயத்தை கண்டாயா?'' என்றாள் லீலா.
ஆமாம்... உன் வீட்டில் ஒரு பெண் வளருகிறாளே... அதாண்டி, உன் மாமா பெண் வனிதான்னு பெயர் இல்லே? அவளை பஜனை மடத்தில் பார்த்தேன். எல்லாரும் அவளைப் புகழோ புகழ்ன்னு புகழ்ந்தாங்க!'' என்றாள் தோழி.
லீலா சுவாரஸ்யம் காட்டினாள்.
''வனிதாவா? அவள் எங்கே அங்கே வந்தாள். புகழும் படியாக அப்படி என்ன செய்தாள்... சுண்டல் வினியோகம் செய்தாளா?''
லீலாவின் தோழி கலகலவென்று சிரித்து விட்டாள்.
''ஏய்! பஜனை என்றால் சுண்டலைத் தவிர வேறு எதுவும் உன் நினைவுக்கு வராதா? வனிதா அங்கு நிகழ்ந்த பஜனையிலே வயலின் வாசிச்சா... பஜனைப் பாடல்களுக்கு அவள் அந்தக் கோஷ்டியோடு இணைந்து வயலின் வாசிச்சதைதான் எல்லாரும் பாராட்டினாங்க,'' என்றாள்.
இப்போது லீலாவுக்குப் புரிந்தது... புரியாததும் சில இருந்தது.
''அப்படியா சேதி?'' என்று கறுவிக் கொண்டாள் மனதுக்குள். வனிதாவைப் பிறர் பாராட்டுவதாவது? அதுவும் அவளுடைய இசைக்காக? அவளால் சகித்துக் கொண்டிருக்க முடியாத விஷயமாயிற்றே அது.
அன்று குருமூர்த்தியின் வீட்டிலிருந்து நிறைந்த மனத்துடன் திரும்பிக் கொண்டிருந்த வனிதாவுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டி ருந்தது. காமாட்சியின் கண்களில் வெறுப்பும், கோபமும் உள்ளே நுழைந்த வனிதாவை தகித்தன.
அதன் வெம்மையில் நடுங்கிப் போனாள் வனிதா. அம்மாவின் அருகே உதடு சுழிக்க குரோதம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தாள் லீலா.
''பள்ளிக்கூடத்தில் இருந்து நேரே வீட்டுக்கு வராமல் எங்கே போய்விட்டு வருகிறாய்?'' என்று கேட்டாள் காமாட்சி.
ஏதோ விபரீதம் என்பதைப் புரிந்து கொண்டாள் வனிதா. தாயையும், மகளையும் மிரட்சியுடன் பார்த்தாள். நிஜத்தைக் கூறலாமா? என்ன நடக்கும் என்று தயங்கியபோது, லீலா எடக்காக பதில் கூறினாள்.
''உனக்கு தெரியாதா அம்மா! நேற்று பஜனை மடத்தில் கச்சேரி. இன்று பிள்ளையார் கோயிலில் விசேஷ அபிஷேகம். தினமும் குமாரி வனிதா வின் வயலின் திறமையைக் காண கூட்டம் கரகோஷம் பாராட்டுக்கள்! அவர்களிடமிருந்து விடுபட்டு வீட்டுக்கு வரவேண்டி இருக்கிறதே, என்று சங்கடப்பட்டுக் கொண்டு வருகிறாள் பாவம்!''
வனிதா தலைகுனிந்தபடி நின்று கொண்டிருந்தாள். அவள் உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. 'இதெல்லாம் இவளுக்கு எப்படித் தெரிந்தது? கொஞ்ச நாளாக இவர்களுடைய அடக்குமுறை இல்லாமல் இருந்ததே... அதற்கு ஆபத்து வந்து விட்டதே!'
''என்னடீ, பதிலையே காணோம்? பொம்மை மாதிரி நிக்கறே?'' என்று சீறினாள் காமாட்சி.
அதற்கும் லீலாவே தான் பதில் கூறினாள்.
''அவள் என்ன பதில் சொல்லுவா? எப்படிச் சொல்லுவா? பிரபல வயலின் வித்வாம்சினியாக தன்னை உருவாக்கிக் கொள்ள பஜனை மடங்களிலும், தெருவோரத்தில் துண்டை விரித்தும் வயலின் வாசிக்க ஆரம்பித்திருக்கும் வயலின் மேதையிடமிருந்து நீ என்ன பதிலை எதிர்பார்க்கிறாய்?'' என்று விஷயத்தைக் கக்கியவள், வனிதாவை சுட்டெரிப்பது போல பார்த்து, ''தூ! வெட்கமாக இல்லை உனக்கு? ஆர்க்கெஸ்ட்ராவில் பங்கு கொள்ள விரும்பிய நீ, பஜனை மடத்தில் சுண்டலுக்கு வாசிக்கிறாயே அவமானம்,'' என்று முத்தாய்ப்பு வைத்தாள். வனிதாவின் கவுரவத்தைக் காப்பாற்றுவதில் அக்கறை உள்ளவள் போலப் பேசினாள்.
''உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். அந்த வயலினை தொடக் கூடாதென்று. அடங்காப்பிடாரி. பஜனை கோயில் கச்சேரி... அது, இதுன்னு இனி போனே... நடக்கிறதே வேற. காலை ஒடிச்சுப் போட்டுடுவேன். உன் படிப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுவேன். போனால் போறதுன்னு விட்டா, வர வர ரொம்ப துளுத்துப் போச்சு. மரியாதையா பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு வந்து சேரணும், ஆமா... போ போ... என் முன்னாலே நிக்காதே போய்த் தொலை!'' என்று வெறுப்போடு கூறிவிட்டு எழுந்து போனாள் காமாட்சி.
வனிதா ஊமையாக மனதுக்குள் அழுதபடி தன் அறைக்குப் போனாள்.
'இப்படி எந்தப் பக்கம் போனாலும் தோல்வியும், ஏமாற்றமும் எதிர்கொள்ளக் காத்திருக்கிறதே... இது ஏன்?' என்று புரியாமல் குழம்பி போனாள் வனிதா.
'கதைகளில் வருமே சாபம் அப்படியல்லவா இருக்கிறது. தன்னை வயலின் வாசிக்க விடாமல் ஏதோ ஒரு சக்தி தான் தடுக்கிறது. அந்த சக்திக்கு ஏன் இந்தக் கெட்ட எண்ணம்? என் அப்பா எனக்கு எவ்வளவு ஆசையோடு, எதிர்பார்ப்புகளோடு வயலின் கற்றுக் கொடுத்தார். அவர் தெய்வமாக இருந்து என்னை ஏன் காப்பாற்றக் கூடாது? அப்பாவுக்கு என் மீது என்ன கோபம்? நான் என்ன தவறு செய்தேன்?
'இல்லே இருக்காது. என் அப்பாவுக்கு என் மீது கோபமில்லை; அவர் என் மீது கோபப்பட்டதே இல்லை. அம்மாவையே பார்த்திராத எனக்கு அம்மாவாகவும் இருந்து அன்பு காட்டியவர் அப்பா. தன்னைப் போலவே தன் குழந்தையும் வயலின் வாசிப் பதில் புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அப்பா. அவர் ஆசையை கனவை நிறைவேற்றுவேன்; எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சகித்துக் கொள்ளுவேன். தடைகளைக் கடந்து என் லட்சியத்தை எட்டிப் பிடிப்பேன்' என்று உள்ளத்திலே உறுதியை வளர்த்துக் கொண்டாள் வனிதா.
வெகு நேரத்துக்குப் பின் அவளை அறியாமல் தூங்கிப் போனாள்.
இப்போதெல்லாம் அவள் வயலினைத் தொடுவதே இல்லை. அத்தை காமாட்சியின் கண்காணிப்பு இறுகியது. பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்குப் போனாள். அவள் வருகைக்காக காத்திருப்பாள் காமாட்சி. அவளுக்காகவே வீட்டு வேலைகளை திட்டமிட்டு வைத்திருப்பாள். பள்ளியிலிருந்து வந்ததும் அவற்றை முடிக்கும் படி ஆணையிடுவாள். பொறுமை, சகிப்புத்தன்மை இவற்றுக்கு உதாரணமாகத் திகழ்ந்தாள் வனிதா.
அவள் பரசுராமின் கடைக்குப் போவதில் ஒரு ஆறுதல் இருந்தது. அதுவும் போய் விட்டது. வேலைக்காரியைப் போல் வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, பொழுதிருக்குமானால், வெளியே 'வாக்' போவாள். நாலைந்து தெருக்களில் நடந்து செல்வாள். அத்தை காமாட்சி, அவள் பெண் லீலா இவர்களின் உறுத்தல்களிலிருந்து விடுதலை கிடைப்பது இந்த வேளைகளில்தான். குருமூர்த்தியின் வீட்டிற்குப் போய் எத்தனையோ நாளாயிற்று. அவளுடைய வயலின் அவர் வீட்டிலேயே இருந்தது. இருக்கட்டும், அங்கே இருப்பதே அதற்குப் பாதுகாப்பு.
இசையில் ஈடுபாடுள்ள அவர் வீட்டில் இருப்பதில் என் வயலினும் திருப்திப்படும். அதை நான் என் இஷ்டப்படி வாசிக்க ஒரு காலம் வரும். அதுவரை பொறுமையாக காத்திருப்பேன் என்று எண்ணிக் கொள்ளுவாள். குருமூர்த்தி நான் வராமல் போனதை தவறாக நினைப்பாரோ?
ஒருநாள் அவர் வீட்டிற்குப் போக நேரம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தன் நிலைமையை அவரிடம் விளக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள். அதற்கான சந்தர்ப்பமும் அவளுக்கு சீக்கரமே வாய்த்தது. குரு மூர்த்தியை சந்திக்க அல்ல... அவர் வீட்டிலிருந்து தன் வயலினை எடுத்து வாசிக்க.
- தொடரும்.
