தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புரட்சி வீரன்!

புரட்சி வீரன்!

புரட்சி வீரன்!


PUBLISHED ON : ஆக 23, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பகத்சிங் உடல் தேறிய பின்பு, மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. சில நாட்கள் நீதிமன்றம் சென்றனர். சிறைக்காவலாளிகள் இவர்களைத் துன்புறுத்தினர். அதனால், நீதிமன்றம் செல்ல மறுத்து விட்டனர்.

1929ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடர்ந்த வழக்கு, 1930ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சரியாக நடைபெறவில்லை. ஆங்கில அரசு, 'எதிரிகள் நீதிமன்றத்திற்கு வராவிட்டாலும் மிக விரைவில் வழக்கை முடிக்க வேண்டும்' என்று விரும்பி ஐகோர்ட்டிடம் முறையிட்டது.

'அவ்வாறு செய்வது சட்ட விரோதச் செயல்' என்று ஐகோர்ட் அதற்கு உடன்படவில்லை. அதேபோன்று, சட்ட சபையினரிடம் கேட்டது ஆங்கில அரசு. 'அவ்வாறு செய்வது அறத்திற்கு விரோதமானது!' என்று சட்டசபையும் மறுப்பு தெரிவித்துவிட்டது.

அதன்பின்பு, ராஜ பிரதிநிதி, 'தனி விசாரணை சபை'யை ஏற்படுத்தி, அதற்கு மூவரை நீதிபதிகளாக நியமித்து விசாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது ஆங்கிலேய அரசு.

'புரட்சி ஓங்குக! ஏகாதிபத்தியம் ஒழிக' என்ற வழக்கமான கோஷங்களுடன் விசாரணை சபைக்குச் சென்றனர். பகத்சிங்கும், அவரது கூட்டாளிகளும், விசாரணையில் ஒழுங்காக நடக்கவில்லை என்று சிறைக் காவலர்கள் தடியால் அடித்ததோடு, அவர்களுடைய கைகளுக்கும் விலங்கிட்டனர்.

இந்தக் கொடுமைக்குப் பின்பு, பகத்சிங் கூட்டாளிகள் விசாரணை சபைக்குச் செல்லவில்லை. எதிரிகள் இல்லாமலேயே வழக்கு நடந்தது. அவர்களுக்காக வக்கீலும் வாதம் செய்யவில்லை. அரசாங்கச் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவும் இல்லை. அந்த வழக்கு, சிறைச் சாலைக்குள்ளேயே நடந்து ஒரு முடிவுக்கு வந்தது.

1930ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள் தீர்ப்பு கூறப்பட்டது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 24 பேர். ஒருவர் உயிரிழந் தார். தலைமறைவான ஐந்து பேர் போக, உள்ளதை உரைக்கும் உளவாளிகளாக ஏழு பேர் போக, எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை போக, மீதமுள்ள பகத்சிங், சுகதேவ், ராசகுரு ஆகிய மூன்று பேரையும் அக்டோபர் 27ம் நாள் தூக்கிலிட விசாரணை சபை உத்தரவிட்டது.

'புரட்சி ஓங்குக! ஏகாதிபத்தியம் ஒழிக!' என்று வீரமுழக்கமிட்ட பகத்சிங் நண்பர்கள், மகிழ்வோடு தண்டனையை ஏற்றுக்கொள்ள சம்மதித்தனர்.

மூவரும் ஒருவர் முகத்தோடு ஒருவர் ஒற்றி மகிழ்ந்து, 'அடுத்த பிறவியில் புரட்சி வீரர்களாகப் பிறந்து ஏகாதிபத்தியத்தைத் தகர்த்தெறிவோம். இன்றையப் பிரிவு, இப்பிறப்பின் இறுதிப் பிரிவு' என்று கூறிக்கொண்டு சிறைக்குள் சென்றனர்.

'தூக்குத் தண்டனை தீர்ப்பு' காந்தீயத் தொண்டர்களிடையே கலக்கத்தை தோற்றுவித்தன. புரட்சி வீரர்கள் உள்ளம் கொதித்தனர்; பொதுமக்கள் வருந்தினர். 'அவர்களைத் தூக்கிலிட வேண்டாம்' என்று ராஜப் பிரதிநிதிக்குத் தந்திக்கு மேல் தந்திகளை அனுப்பினர்.

பகத்சிங்கின் தந்தை கிருஷ்ண சிம்மனும் கருணை மனு செய்தார். இதற்கிடையில், தூக்குத் தண்டனை வழங்கும் நாளென தீர்ப்பில் கூறப்பட்ட அக்டோபர் 27ம் நாளன்று தூக்கிலிடாததால், 'விசாரணை சபையின் தீர்ப்பு இனி செல்லாது. மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று லாகூர் ஐகோர்ட்டில் மனு செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அடுத்து, 1931ம் ஆண்டு மார்ச் 23ம் நாளில் தூக்கிலிட நாள் குறித்தனர். காந்தியடிகள் அதைத் தடுக்க முயன்றார். ராஜப் பிரதிநிதிகளுடன் அந்தரங்கமாகப் பேசினார். அதில் பயனில்லாமல் போயிற்று. அதனால், அந்தரங்கக் கடிதம் ஒன்றை எழுதியனுப்பினார்.

அதைப் பொருட்படுத்தாத நிலையில், இரவு 7.15 மணிக்கு, தூக்குக் கயிற்றின் முன்னே மூவரையும் நிறுத்தினர். பகத்சிங் எதற்கும் அஞ்சாத நிலையில் நீதிபதியைப் பார்த்தார். 'நாட்டின் விடுதலைக்குப் பாடுபடும் சுதந்திர வீரர்கள் எவ்வாறு தூக்கு மேடையைத் தழுவுவர் என்பதை நீங்கள் சிறிது நேரத்தில் பார்ப்பீர்கள். நாங்கள் தழுவிக் காட்டப் போகிறோம்' என்று, எவ்வித மரண பயமும் இன்றி சிரித்துக் கொண்டே கூறினார்.

அதைக் கேட்ட நீதிபதியும் சற்று கண்கலங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும், கடமையை நிறைவேற்றுவதில், நீதிபதி உறுதியுடன் இருந்தார். சிறைக்குள் இருந்த மூன்று வீரர்களையும் கொண்டு வரச் செய்தார்.

'புரட்சி ஓங்குக, ஏகாதிபத்தியம் ஒழிக!' என்று முழக்கமிட்டவாறே, சிறைக்கு வெளியே வந்தனர்.

தூக்கு மேடைக்கு அருகில் மூவரையும் கொண்டு சென்றதும், தூக்கு மேடை மீது தாவி ஏறினர். அதிகாரிகள் அவர்களைத் தடுத்து உயிர் வாங்குவதற்கு வேண்டிய சிறைச்சாலை சடங்குகளைச் செய்தனர்.

அதன்பின்பு மூவரும் தூக்கு மேடையில் துணிவுடன் ஏறினர். ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். மகிழ்ச்சி கொண்டனர். நடுவில், 'பகத்சிங்' நின்று மகிழ்ந்தார். அவரது வலப்பக்கத்தில் ராசகுரு நின்று சிரித்தார். இடப்பக்கத்தில் சுகதேவ் நின்று மகிழ்ந்தார்.

அவர்களுடைய இளம் கழுத்துகளில், முரட்டுத் தூக்குக் கயிறுகள் மாட்டப்பட்டன. அவர்கள் அக்கயிறுகளை முத்தமிட்டு மகிழ்ந்தனர்.

பகத்சிங்கையும், ராசகுருவையும் ஆழமான பார்வையில் நோக்கிய சுகதேவ், 'நாம் ஒரு கணம் பிரிந்திருப்போம். மறுகணம் ஒன்று சேர்வோம். சேர்ந்து நம் புரட்சிக் கட்சியினராகிய பகவதி சரணர், ஆசாத் யதீந்திரதாசர் போன்றோர் இருக்கும் விண்ணுலகத்திற்குச் செல்வோம். சென்று, ஏகாதிபத்தியத்தைத் தகர்க்கத் திட்டம் வகுத்துத் திரும்ப இவ்வுலகுக்கு வந்து திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அதைக் கேட்டு பகத்சிங்கும், ராசகுருவும் சிரித்துக்கொண்டிருக்கும் போதே, தூக்கிலிடும் அதிகாரிகள், தூக்குப் பலகையைத் தட்டி விட்டனர். அந்நிலையில், மூவரின் உடல்களும், துடித்துச் சிறிது நேரத்தில் தொங்கின.

இரவு 7.15 மணிக்கு தூக்கிலிடப்பட்ட மூவரது உடல்களையும், எட்டு மணிக்கு இறக்கி, எட்டரை மணிக்கு மோட்டரில் ஏற்றித் தகனத்திற்குக் கொண்டு சென்றனர்.

நூறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சட்லஜ் நதிக்கரையில், இரவு பதினொன்றே முக்கால் மணிக்கு மூவரின் உடல்களும் தீயிடப்பட்டது.

ராஜப் பிரதிநிதியால் இரவு 9 மணிக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில், 7.15 மணிக்கே தூக்கிலிடப்பட்ட விவரம் குறிப் பிடப்பட்டிருந்தது. அதுகண்ட காந்தியடிகள் பெருந்துயர் கொண்டார். மவுனமாகத் தலைகுனிந்த அவர், 'என் அருமைச் செல்வங்களே! நீங்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகு சென்றுள்ளீர். பாரதத் தாய் உங்களுக்கு சாந்தி அளிப்பாள்' என்று கூறி கண்ணீர் வடித்தார்.

1931ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் நாளில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், மூவர் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'புரட்சி ஓங்குக...'

இவ்வாசகம், ஒவ்வொருவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

முற்றும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us