PUBLISHED ON : ஆக 23, 2013

குஜராத்தின் அகமதாபாத் ஷாலிபாக் நகரில் மோதிஷாகி மகால் உள்ளது. இதை கட்டியவர் முகலாய மன்னர் ஷாஜகான்.
ஆமாம்! மன்னர் ஆவதற்கு சில வருடங்களுக்கு முன் குஜராத் பகுதியின் கவர்னராக இருந்தவர். அப்போது அவர் விரும்பி கட்டியக் கட்டடம்தான் இது. 1618-1622ம் ஆண்டுகளிடையே இதை கட்டினார். இதனை சுற்றி தோட்டம் உண்டு.
அடுத்து முகலாய மன்னர்களிடமிருந்து இந்த கட்டடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு மாறியது. சுதந்திரம் அடைந்த பின் 1960ம் ஆண்டிலிருந்து 1978ம் ஆண்டு வரை இந்த மாளிகையில் கவர்னர் வசித்தார். அதனால், 'ராஜ்பவன்' என அழைக்கப்பட்டது.
சர்தார் வல்லபாய் படேலின் நூற்றாண்டு விழா 1975ம் ஆண்டு வந்தது. அப்போது குஜராத்திய படேல் சார்பாக ஒரு நினைவகம் அமைக்க இந்த இடத்தை தேர்வு செய்தது. 1980ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி நினைவகம் திறக்கப்பட்டது.
ஷாஜகானைப் பொருத்தவரை பின்னாளில் தாஜ்மகால் கட்ட இந்த கட்டடம் தான் முன்னோடி. இந்த நினைவகத்தின் கீழ்தளத்தின் மையமண்டபத்திலும், சுற்றிலும் உள்ள நான்கு அறைகளிலும் நினைவகம் அமைந்துள்ளது.
உண்மையில் இங்கு சர்தார் வல்லபாய் படேல்... மகாத்மா காந்தி மற்றும் ரவீந்தரநாத் தாகூர் ஆகிய மூவருக்கும் நினைவகம் உள்ளது என்றுதான் கூற வேண்டும்.
தாகூரின் உறவினர், இந்த பகுதி முதன்மை மேஜிஸ்டிரேட்டாக இருந்தபோது, இங்குதான் தங்கினார். அப்போது தாகூர் இங்கு வந்து தங்கியுள்ளார்.
அது சமயம்தான் அவருடைய ஒரே பேய் கதையான, 'த ஹங்க்ரி ஸ்டோன்' என்ற கதையை எழுதினார். அவ ருடைய முதல் கவிதையும் இங்குதான் பிறந்தது. தாகூர் 1878ம் ஆண்டு இங்கு தங்கியிருந்தார். ஆக, அவர் சார்ந்த நினைவுப் பொருட்கள், சிலைகள், படைப்புகள், ஓவியங்கள் ஆகியவை இந்த கட்டடத்தின் முதல் மாடியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குஜராத் என்றால் காந்திக்குதான் முதலிடம். அவருக்கும், வல்லபாய் படேலுக்கும் இடையே கடைசி வரை சுமுக உறவு இருந்தது. ஆக, சர்தார் நினைவகத்தில் அவருக்கும் கீழ் தளத்தில் தனி இடம் உண்டு. அங்கு காந்தியின் நினைவு புகைப்படங்கள்... அவர் உதிர்த்த முத்து மொழிகள்... காந்தி பற்றிய புத்தகங்கள் என அனைத்தும் உண்டு.
கீழ்தளத்தின் மைய மண்டபம் மற்றும் இரு அறைகள் முழுவதும் சர்தார் சார்ந்த தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
படேல் வாழ்விலிருந்து காட்சிகள், அவருடைய சொந்த பயன்பாடு பொருட்கள், பத்திரிகைகளில் அவர் காலத்தில் சர்தாரை சம்பந்தப்படுத்தி வரையப்பட்ட கார்டூன்கள், இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
1930ல் காந்தியுடன் ஏற்பட்ட நட்பு... கல்லூரி படிப்பு, வழக்கறிஞராக பணிபுரிந்தது. பிறகு மத்திய மந்திரி சபையில் உள்துறை அமைச்சராக பணிபுரிந்தபோது, பல மன்னர் களின் பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தது. அவர் பயன்படுத்திய ஷூக்கள், ஸ்லிப்பர் கள்... இளம் வயதில் அவர் அணிந்த ஐரோப்பிய பாணி ஆடைகள்.
1930-31ல் இந்திய நேஷனல் காங்கிரஸ் ஒரு கொடியை அறிமுகப்படுத்தியது. அந்த கொடி, படேலுள்ள குடும்ப புகைப்படங்கள்... நண்பர்கள்... சுதந்திர போராட்டத்தில் அவருடன் பங்கு கொண்டவர்கள்... சர்தாரின் சிலைகள் என அனைத்தையும் இங்கு பார்க்கலாம்!
தரை தளத்தின் பெரிய அறை மற்றும் பிரிவு ஹாலில் நர்மதா நதியில் கட்டப்பட்டு வரும் அணை சார்ந்த சர்தார் சரோவர் பிராஜக்ட் பற்றிய ஆரம்பம் முதல், இன்று வரையான அனைத்து தகவல்களையும் இங்கு காட்சிகளாக காணலாம். இந்த அணையை ஒட்டி ஹைடிரோ எலெக்டிரிக் பவர் ஸ்டேஷன் அமைத்துள்ளனர். அதுபற்றிய தகவல்களையும் இந்த நினைவகத்தில் காணலாம்!
ராஜிராதா பெங்களூரு
