PUBLISHED ON : டிச 09, 2023

உயிரினங்களுக்கு ஓய்வு தேவை. வேலை செய்வதால் ஏற்பட்ட களைப்பை ஓய்வு போக்குகிறது. மரங்களும் இரவில் இலை குவித்து ஓய்வு எடுக்கின்றன. உடல், ஆரோக்கியமாக, திடமாக இருக்க, உறக்கம் மிகவும் அவசியம். உறங்கினால் மட்டுமே உடல் உறுப்புகள் சீராக வேலை செய்யும். மனமும் அமைதியாக இருக்கும்.
ஒரு இயந்திரம் தொடர்ந்து இயங்கினால் பழுது அடையும். அதுபோல், மனித வாழ்விலும் உறக்கம் இல்லையேல், இன்னல், இடையூறு ஏற்படும்.
பகலில், சூரிய ஒளியால் பூமி வெப்பமடைகிறது. இரவில் குளிர்கிறது. எனவே, இரவு உறங்குவதே சிறந்தது. பகலில் உழைப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் இரவில் உறங்குவதால் தணிந்து குளிர்ச்சியடையும்.
தலை முதல், கால் வரை போர்வையால் மூடி துாங்க கூடாது. அவ்வாறு துாங்கினால், சுவாசிக்கும் காற்று உள்ளேயே தங்கி விடும். மீண்டும் அசுத்த காற்றையே சுவாசிக்க நேரிடும். இதனால், சோர்வு ஏற்படும். மார்பு வரை மூடியபடி துாங்க வேண்டும்.
உடல் முழுதும் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்கிறது. இரவு, 11:00 மணி முதல் அதிகாலை, 3:00 மணி வரை, ரத்த ஓட்டம் கல்லீரலில் அதிகமாக நடக்கும். இரவு துாங்கா விட்டால், கழிவுகள் முழுமையாக வெளியேறாது. ரத்தம் அழுக்கானால் உடல் நலம் பாதிக்கும்.
துாக்கம் குறைந்தால், புத்தி தெளிவின்மை, ஐம்புலச்சோர்வு, உடல் இளைத்தல், மயக்கம், உடலில் வெப்பம் அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிகம் உறங்கினால், சோபை, தலை வலி, ரத்த நாளங்களில் அடைப்பு, மந்தம் ஏற்படும். எனவே துாக்கத்துக்கு சரியான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
துாங்குவதற்கு...
* இலவம் பஞ்சு, பருத்தி மெத்தை சிறந்தது
* தாழம்பாய், கோரை பாய், பிரப்பம் பாய் ஏற்றது
* படுக்கையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அலைபேசியை படுக்கை அறைக்குள் எடுத்து செல்லக்கூடாது. இதை செய்தாலே துாக்கமின்மை பிரச்னை சரியாகி விடும்.
- ஆர்.அமிர்தவர்ஷினி