/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - ஒளியில் கவிதை எழுதிய பெண்!
/
அதிமேதாவி அங்குராசு - ஒளியில் கவிதை எழுதிய பெண்!
PUBLISHED ON : டிச 09, 2023

சுதந்திர போராட்ட காலத்தில், நம் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்கள் எடுத்து புகழ் பெற்றவர், ஹோமி வியர்வலா. குஜராத் மாநிலம், நவ்சாரியில் டிசம்பர் 9, 1913ல் பிறந்தார். வித்தியாசமான துறையை தேர்ந்தெடுத்து வாழ்வில் சாதித்துள்ளார். இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்பட கலைஞர் என புகழ் பெற்றுள்ளார்.
வசதி, வாய்ப்புகள் பற்றி கவலைப்படாமல், 1933ல் பத்திரிகை புகைப்படத் துறையைத் தேர்ந்தெடுத்தார் ஹோமி. மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் கருத்துான்றி பணி செய்ததால் வெற்றி நடைபோட்டார்.
பள்ளியில் படித்தபோது, 13ம் வயதில், 'பிக்னிக்' என்ற உள்ளூர் சுற்றுலாவில் கலந்து கொண்டார். அப்போது, சில புகைப்படங்கள் எடுத்தார். வகுப்பாசிரியர் அவற்றை, 'பாம்பே கிரானிக்கல்' என்ற பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அத்தனையும் பிரசுரமாகி தக்க சன்மானம் கிடைத்தது. பாராட்டும் வந்தது.
தொடர்ந்து, படிப்பில் கவனம் செலுத்தி, பொருளாதார பாடத்தில் பட்டம் பெற்றார். கற்பனை வளம் நிறைந்த புகைப்படக் கலையில் முறையாக பயிற்சி பெற்றார். அதையே தொழிலாக தேர்வு செய்தார்.
அந்த காலத்தில், புகைப்படம் எடுக்க, பெரிய கேமரா கருவியை சுமந்து செல்ல வேண்டும். மிதிவண்டியில் தான் பயணிக்க வேண்டும். இதுபோல் கடினமான சூழலிலும் வித்தியாசமான கோணங்களில் படங்கள் எடுத்தார்.
பலருக்கு இவரது பணி வேடிக்கையாக தெரிந்தது. கடும் விமர்சனங்கள் எழுந்தன. எதையும் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாக செயல்பட்டார். அவர் எடுத்த புகைப்படங்களை, பிரபல பத்திரிகைகள் போட்டி போட்டு பிரசுரித்தன. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் அப்போதைய ராணி எலிசபெத், அமெரிக்க அதிபர் கென்னடி போன்ற பிரமுகர்களின் இந்திய வருகை நிகழ்வுகளை பல கோணங்களில் படம் பிடித்தார்.
நம் நாடு சுதந்திரம் பெற்றபோது நள்ளிரவில் நடந்த வைபவம், கங்கை நதிக்கரையில் நடக்கும் கும்பமேளாவில் வினோத காட்சிகள் என, துணிச்சலுடன் எடுத்திருந்த புகைப்படங்கள் அவரை புகழின் உச்சியில் ஏற்றின.
நீண்டகால உழைப்பில் உருவான புகைப்பட ஆல்பம், நம் நாட்டின், 50 ஆண்டு சரித்திர முக்கியத்துவத்தை எடுத்து காட்டுகிறது. காலத்தின் கண்ணாடியாக விளங்குகிறது.
இந்திய சுதந்திரப் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில், நாட்டுக்காக உழைத்த தலைவர்களை நினைவு கூர்ந்து, அவர் எடுத்திருந்த புகைப்படங்கள் தொகுப்பாக்கப்பட்டது. அதை, 'சரித்திரம் மறந்த சாதனையாளர்' என்ற தலைப்பில் ஆல்பமாக வெளியிட்டு கவுரவித்துள்ளது மத்திய அரசு.
ஹோமியின் அயராத பணியை பாராட்டி, பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. கடினப் பணியை பயிற்சியால் சிறப்பாக செய்து புகழ் பெற்றார். பத்திரிகை புகைப்பட பணியில் இந்தியாவின் முதல் பெண் என போற்றப்படுகிறார். வியத்தகு சாதனைகள் புரிந்த ஹோமி, ஜனவரி 15, 2012ல், 99ம் வயதில் மறைந்தார்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.