PUBLISHED ON : செப் 30, 2016

தேசிய ரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 1ல் கொண்டாடப்படுகிறது. விபத்தால் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மருத்துவதுறையில் அதிக ரத்தம் தேவைப்படுகிறது. அதனால், அனைவரும் முடிந்த அளவு ரத்த தானம் செய்யுங்கள்.
ரத்த தானம் செய்வதால் எவ்வித பின்விளைவுகளும் ஏற்படாது. எடை குறைந்து விடுமோ என அஞ்சுவதும் சரியல்ல. ரத்த தானம் செய்வதன் மூலம், புதிய ரத்தம் மீண்டும் உற்பத்தியாகி விடுவதால், மேலும் உடல் நலத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.
எந்தவிதமான நோய் பாதிப்பையும் ஏற்படுத்தாத ரத்தமே பாதுகாப்பான ரத்தம். இந்த ரத்தமே ஒருவரின் உயிரை காக்கும். பாதுகாப்பாற்ற ரத்தம் உயிர்கொல்லியாக மாறிவிடும். 18 வயது முதல், 60 வயது வரையுள்ள ஆரோக்கியமான ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்யலாம்.
குறிப்பாக, உடல் எடை, 45 கிலோகவும், அதற்கு மேல் உள்ளவர்களும், ரத்த தானம் செய்யலாம்.
எந்த நோய் ரத்தம் மூலமாக பரவும்?
ரத்தத்தின் மூலமாக, எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ், ஹெப்படிடிஸ், 'பி' வகை மஞ்சள் காமாலை, ஹெப்படிடிஸ், 'சி' வகை மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள், மலேரியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற இடங்களில் ரத்ததானம் அளிக்கலாம். இந்த மையங்களில் மருத்துவர், ஆலோசகர், ஆய்வக நுட்புறர் போன்றவர் இருப்பர். இந்த மையங்களில் ரத்ததானம் அளிக்க விரும்பினால் முதலில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பின், அதற்கான விண்ணப்பதை பூர்த்தி செய்து, ரத்ததானம் அளிக்கலாம்.
ரத்தானத்திற்கு முன், எடை சரிபார்த்தல், ஹீமோகுளோபின் அளவிடுதல், ரத்த அழுத்தச் சோதனை, இதயதுடிப்பு சோதனை, கல்லீரல் மற்றும் நுரையீரல் நிலை ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன.
பொதுவாக, எல்லா இடங்களிலும் ஒரு நபரிடம் இருந்து, 350 மி.லி., ரத்தம் மட்டும் எடுக்கப்படும். 90 நாட்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். ஒருவர் ரத்தம் அளிப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் சிற்றுண்டி எடுத்து கொள்வதற்கும், மொத்தம், 20 நிமிடமே தேவைப்படுகிறது. 30 நிமிட இடைவெளிக்கு பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம். தொடர்ந்து மற்ற பணிகளில் ஈடுபடலாம். ரத்த தானம் செய்ய ஒவ்வொருவரும் சமூக நல நோக்குடன் முன்வர வேண்டும்.
ரத்த ஓட்டம், இதயதுடிப்பு போன்றவை, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சற்று சரிவர இருக்காது என்ற காரணத்தால் ரத்ததானம் செய்ய அனுமதிப்பதில்லை.
ரத்ததானம் செய்பவருக்கு சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்ளையே பயன்படுத்துவதால் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை.
ரத்ததானத்திற்கு பின் அரிதாக சில கொடையாளர்களுக்கு மயக்கம் ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம், ரத்த தானம் அளித்ததும் உடனே, மற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவது தான்.
ரத்த தானம் அளித்தபின் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஓய்வெடுப்பது சிறந்தது.
இந்தியாவில் ஆண்டுக்கு, 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், கிடைப்பது என்னவோ, அதில் பாதி தான். இன்னும் ஒரிரு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடி யூனிட் வரை ரத்தம் தேவைப்பட வாய்ப்பு உள்ளது.
அந்த அளவிற்கு ரத்தம் கிடைப்பது விடை காண முடியாத புதிராக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் ரத்த தேவையை சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகளும், ரத்த வங்கிகளும் திணறிக் கொண்டு இருக்கிறது.
விபத்தில் சிக்கி போராடுகிறவர்களுக்கும், அவசர சிகிச்சை அளிப்பதற்கும் ரத்தம் கிடைப்பது சிரமமாக உள்ளது. ரத்தம் கிடைக்காததால் பலர் மரணமடைவது துர்பாக்கியமானது. ஆகையால், இந்நிலை தொடராமல் இருக்க, ஜாதி, சமய, மொழி, இன பாகுபாடின்றி ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் ரத்ததானம் கொடுக்க முன்வர வேண்டும்.
மக்களிடையே ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூகவியல் அறிஞர்கள் மூலம், அரசு புதிய திட்டங்களை தீட்டி, மக்களிடையே ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பூமிதானம், அன்னதானம் என தானங்களில் பல வகைகள் உள்ளன. பிறர் உடலில் கலந்து உயிரைக் காப்பதால், ரத்ததானம் ஒன்றே சிறந்தது. ரத்ததானம் செய்வோம் உயிர்களை காப்போம் என உறுதிமொழி எடுப்போம். இன்றே புறப்படுவோம்.
ரத்த தானம் செய்வதை எப்போது தவிர்க்க வேண்டும்?
* மது அருந்தியவர்கள், 24 மணி நேரத்திற்கு ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஆறு மாதங்கள் வரை, சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மூன்று மாதங்கள் வரையும் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* கருச்சிதைவு கொண்ட பெண்கள் ஆறுமாதங்கள் வரை ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கருவுற்றிருக்கும் போதும், தாய்ப்பால் ஊட்டும் போதும், தாய்மார்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* பால்வினை நோய், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப் பட்டு சிகிக்சை பெற்றவர்கள் ஓராண்டு வரை ரத்த தானம் செய்யக்கூடாது.
* காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், ஐந்து ஆண்டுகள் வரை ரத்த தானம் செய்யக்கூடாது.
* ரத்தம் ஏற்றிக்கொண்ட நபர்கள் ஓராண்டு வரை ரத்த தானம் செய்யக்கூடாது.
* எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நபர்கள் ஓராண்டு வரை ரத்த தானம் செய்யக்கூடாது.
* இதயநோய், சிறுநீரக நோய், தைராய்டு மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்கள், போதை ஊசிப்பழக்கம் உள்ளவர்கள் ரத்த தானம் செய்ய கூடாது.
