தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கிரீடம் சூட்டு!

கிரீடம் சூட்டு!

கிரீடம் சூட்டு!


PUBLISHED ON : செப் 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டில் நரி ஒன்று பசியுடன் அங்குமிங்கும் திரிந்தது. அப்போது அது ஒரு முடிவுக்கு வந்தது...

'எப்போது பார்த்தாலும் இம்மாதிரிப் பசியுடன் அலைந்து திரிந்து கால் வயிறு, அரை வயிறு சாப்பிடுவதை விட, ஒரு பெரிய விலங்குடன் கூட்டுச் சேர்ந்து வயிறாரச் சாப்பிடலாமே' என்று நினைத்த நரி, ஓரிடத்தில் அமர்ந்து யோசித்தது.

'சிங்கத்தின் நட்பைப் பெற்று விட்டால் காரியம் எளிதாக முடிவடைந்து விடும்!' என்று நினைத்த நரி, சிங்கத்தின் குகைக்குச் சென்று பணிவுடன் வணங்கியது.

''என்ன நரிக்குட்டி, அதிசயமாக இருக்குதே. காரணமில்லாமல் நீ என்னைத் தேடி வரமாட்டாயே... என்ன விஷயம் சொல். என்னால் ஏதாவது உதவியாக வேண்டுமா?'' என்று கனிவுடன் கேட்டது சிங்கம்.

''ஆம் மஹாராஜா! இந்த உதவி எனக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் நன்மை விளைவிக்கும்!'' என்றது நரி.

''எனக்கும் நன்மையைத் தருமா, விளக்கமாகச் சொல்!'' என்றது சிங்கம்.

''இனி நீங்கள் இரையைத் தேடி எங்கும் அலையக் கூடாது. இரையே உங்களைத் தேடி வர வேண்டும். அதை நீங்கள் அடித்துச் சாப்பிட வேண்டும் என்பதே என் கோரிக்கை!''

''இரை என்னைத் தேடி வருமா?'' என்று ஆச்சரியமாகக் கேட்டது சிங்கம்.

''ஆம் கண்டிப்பாகத் தேடி வரும். இரையை அழைத்து வருவது என்னுடைய வேலை. அதை அடித்துக் கொல்வது உங்கள் பொறுப்பு!'' என்றது நரி.

''சரி. இதனால் உனக்கு என்ன லாபம்?'' என்று கேட்டது சிங்கம்.

''ஒரு பெரிய இரையை முழுவதுமாக நீங்கள் சாப்பிட மாட்டீர்கள். மீதி இரையைச் சேர்த்து வைத்து சாப்பிடும் வழக்கமும் உங்களிடம் இல்லை. அவ்வப்போது சுடச்சுட அடித்து புத்தம் புதிதாகத்தான் உண்ணுவீர்கள்.

''அப்போது மீதியுள்ள உணவு என் பசியைப் போக்கும் அல்லவா? மேலும், தங்களைப் போன்ற ராஜ உணவை என் ஆயுளில் நான் கண்டவன் இல்லை. என் ஆகாரம் சின்னச் சின்ன குழி முயல்கள் மட்டும்தான். அதைச் சாப்பிட்டு சாப்பிட்டு சலித்துப் போன எனக்கு, பெரிய விலங்குகளின் இறைச்சி அற்புத விருந்தாக இருக்குமல்லவா? அதனால்தான்!'' என்றது நரி.

சிங்கம் சிரித்தது.

''சரி, உன் விருப்பம் போலச் செய்!'' என்று அனுமதி அளித்தது.

''வேலையை இப்போதே ஆரம்பிக்கட்டுமா?'' என்று கேட்டது நரி.

''சரி!'' என்றது சிங்கம்.

வெளியே சென்ற நரி, ஒட்டகச்சிவிங்கி ஒன்றைச் சந்தித்தது.

''உனக்கு விவரம் தெரியாதா? நம்முடைய சிங்கராஜா வாழ்க்கையை வெறுத்து சன்னியாசி ஆக போகிறார். அதற்கு முன் தன்னைப் போன்ற கொடிய விலங்கு ஏதாவது காட்டின் அரசனாக ஆகி விடக் கூடாது என்று கருதி, சாதுவான கருணையுள்ள விலங்கை அழைத்து வர எனக்குக் கட்டளை இட்டுள்ளார்.

''அநேகமாக அடுத்த காட்டுராஜா பதவி உனக்குத்தான். ஏனென்றால், அவர் உத்தரவிட்டு அரைமணி நேரத்துக்குள்ளாகக் கண்ணில் பட்ட முதல் சாது நீதான். வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்!'' என்று ஆசை வார்த்தை காட்டியது நரி.

பதவி என்றவுடன் பல்லிளித்து, நரியின் பின்னால் சென்றது ஒட்டகச்சிவிங்கி. சிங்கத்தின் குகை அருகே செல்லும் போது தூரத்திலிருந்து அவற்றைப் பார்த்த சிங்கம் அதன் மேல் பாய்ந்தது.

இதை எதிர்பாராத ஒட்டகச்சிவிங்கி, மிரண்டு தலை தெறிக்க ஓடியது.

நரி மிகவும் கவலைப்பட்டது.

''என்ன மஹாராஜா அதைக் கஷ்டப்பட்டு கூட்டி வந்தேன். இப்படிச் செய்து விட்டீர்களே!'' என்று அங்கலாய்த்தது.

சிங்கம் தன் செயலை எண்ணி நாணியது.

''நீ போய் வேறு விலங்கை அழைத்து வா. இம்முறை எச்சரிக்கையாக அதை ஒரே அடியில் கொன்று போடுகிறேன்,'' என்று ஆறுதல் கூறியது.

நரி உடனே, ''வேறு மிருகம் எதற்கு? அந்த ஒட்டகத்தையே மறுபடியும் அழைத்து வருகிறேன்,'' என்றது.

''திரும்ப வருமா?'' என்று சந்தேகத்துடன் கேட்டது சிங்கம்.

''மூளையற்ற விலங்களுக்கு ஒருமுறை பட்டால் கூடப் புத்தி வராது. அதை வரவழைப்பது என் பொறுப்பு!'' என்று கூறி திரும்பிச் சென்றது நரி.

ஒட்டகச்சிவிங்கி ஓரிடத்தில் புல்மேய்ந்து கொண்டிருந்தது.

''என்ன ஒட்டகச்சிவிங்கி அண்ணே, இப்படிப் பயந்து போய் ஓடிவந்து விட்டீர்கள்!'' என்று கேட்டது நரி.

''பதவி தருவதாக ஆசை காட்டி என்னைக் கொல்லவா திட்டம் போட்டாய் வஞ்சக நரியே!'' என்று சீறியது ஒட்டகச்சிவிங்கி.

நரி கலகலவென்று சிரித்தது.

''அண்ணே, அரசர் உன்னை கட்டித் தழுவி கிரீடம் வைக்க வந்ததையா, கொல்லத் திட்டம் தீட்டியதாகச் சொன்னாய்? சீ... உன் புத்தி இவ்வளவு தானா? நல்லவேளை, நீ புத்திசாலி இல்லை என்று முதலிலேயே நிரூபித்து விட்டாய். உனக்கு மட்டும் காட்டரசர் பதவி தந்திருந்தால் மிருகங்கள் எல்லாம் சிரமப்பட்டிருக்கும்.

''நன்றி அண்ணே... உன்னை இனங்காட்டிக் கொண்டதற்கு... வரட்டுமா? மிகச் சிறந்த அறிவாளியான எவரையாவது கூட்டிக் கொண்டு போகிறேன். உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்,'' என்று கூறி விட்டு நகர அடி எடுத்து வைத்தது நரி.

இவ்வார்த்தைகளைக் கேட்டு வருந்தியது ஒட்டகச்சிவிங்கி.

''நரி தம்பி, நான் தப்புச் செய்து விட்டேன்... நானும் புத்திசாலிதான்... ஒரு எச்சரிக்கைக்காகத்தான் ஓடினேன்!'' என்றது.

''அப்போதே அரசர் சொன்னார்... இந்த அளவு எச்சரிக்கை கண்டிப்பாக இந்தப் பதவிக்கு வேண்டும் என்று. அதனால் அவருக்கு உன்னைப் பிடித்து விட்டது. இப்போதாவது பதவி ஏற்க வருகிறாயா?'' என்று கேட்டது.

''சரி!'' என்று உற்சாகமாகத் தலையாட்டியது ஒட்டகச்சிவிங்கி.

ஒட்டகமும், நரியும் சிங்கத்தின் குகைக்கு வந்தன.

''வாருங்கள், ஒட்டகச்சிவிங்கியே!'' என்று அன்புடன் அழைத்தது சிங்கம்.

ஒட்டகச்சிவிங்கி சிரித்தவாறு சிங்கத்தின் அருகே சென்றது. சிங்கம் எழுந்து அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டது. பின் கழுத்தில் வாய் வைத்து முத்தமிடுவது போலப் பாவனை காட்டியது.

''அந்தக் கிரீடத்தை ஒட்டகத்துக்குச் சூட்டி காட்டரசர் ஆக்குங்கள்!'' என்று கண் கொட்டியவாறு கூறியது நரி.

கிரீடத்தைப் பெற ஒட்டகச்சிவிங்கி தலை தாழ்த்தியது. இதை எதிர்பார்த்த சிங்கம் ஓங்கி அதன் தலையில் அறைவிட்டது. கழுத்திலிருந்து தலை சுழன்று மண்டை உடைந்து கீழே விழுந்தது. சிங்கம் பீறிட்டு வரும் ரத்தத்தை குடிக்க ஆரம்பித்தது.

ஒட்டகச்சிவிங்கியின் பிளந்த மண்டையிலிருந்த மூளையை ஒரு வினாடியில் சாப்பிட்டு விட்டு எதுவும் நடக்காதது போல மூலையில் போய் உட்கார்ந்திருந்தது நரி. சிங்கம் ரத்தம் குடித்த போதையில், ''இந்தப் பதவி ஆசை பிடித்த ஒட்டகச்சிவிங்கியின் மூளையைக் கொடு சாப்பிட வேண்டும்!'' என்றது.

மூளையற்ற அதன் மண்டையைக் கொண்டு வந்து சிங்கத்தின் முன் வைத்தது நரி. சிங்கம் அதைக் கண்டு சீறியது.

''எங்கே இதன் தலையில் இருந்த மூளை?''

''ஒருமுறை இதை நாம் கொல்ல முயற்சி செய்தோம். தப்பி விட்டது. இரண்டாவது முறை வந்து உயிரிழந்தது என்றால், இந்த ஒட்டகத்துக்கு மூளை இருக்குமா? மூளையுள்ளவர்கள் செய்வார்களா இக்காரியத்தை?'' என்று கேட்டது நரி.

சிங்கம் யோசித்தது.

''உண்மைதான்... நீ சொல்வது சரி. நான் இதை உணராமல் போனேன்!'' என்று பதில் கூறியது. அதன் பிறகு சிங்கம் சாப்பிட்டு எஞ்சியதையும் தின்று தீர்த்தது நரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us