தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குறைந்த விலை மாம்பழம்!

குறைந்த விலை மாம்பழம்!

குறைந்த விலை மாம்பழம்!


PUBLISHED ON : செப் 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணலூர் என்னும் ஊரில், வைரமணி என்ற கஞ்சன் இருந்தான். காசு, பணம் என்றால் பேயாய் அலைவான். வரவு என்றால் வாயெல்லாம் பல்லாகச் சிரிப்பான்; செலவு என்றால் முகத்தையே அடுப்பாக்கி எரிந்து விழுவான். ஒரு காசு செலவு செய்ய நேரிட்டால் கூட, உயிரே போய் விட்டது போலத் துடித்துப் போய் விடுவான்.

அந்தக் கருமியின் சொத்துபத்துக்கு, ஒரு குறையும் இல்லை. அதனால், பெரிய பணக்காரர், தன் ஒரே மகள் வைரமணியை அவனுக்கு மணமுடித்து வைத்தார். அந்தப் பெண் மிகவும் உத்தமி. கணவனின் மனமறிந்து, மிகவும் சிக்கனமாகவே குடும்பத்தை நடந்தினாள்.

மனைவி தன்னை அனுசரித்து நடந்து கொண்டதில், வைரமணிக்கு மிகுந்த திருப்தி. மனைவியைப் பற்றி எல்லாரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டான்.

சில மாதம் சென்றதும், அவனுடைய மனைவி கர்ப்பமானாள். எல்லா கர்ப்பிணிப் பெண்களை போல, அவளுக்கு, மாங்காய் மீதும், மாம்பழத்தின் மீதும் அடங்காத ஆசை ஏற்பட்டது.

ஆனால், கணவனோ உலக மகாக் கருமியாக இருந்ததால். அவனிடம் மாம்பழம் கேட்டால், என்ன சொல்வாரோ என்ற அச்சத்திலேயே, சில நாட்கள் வரை ஆசையை அடக்கி இருந்தாள்.

இருந்தாலும் ஆசையை அதிக நாட்கள் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒருநாள்-

அவன் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தபோது, ''எனக்கு ஒரு மாம்பழம் வேண்டும்,'' என்றாள்.

''சரி வாங்கித் தருகிறேன்!'' என்று கூறி, மாம்பழ மண்டியை அடைந்து, ஒரு பழத்தை எடுத்து விலை கேட்டான்.

''உங்களுக்கு எவ்வளவு பழம் வேண்டும்?'' என்றார் மண்டியில் இருந்தவர்.

''நீங்கள் ஒரு பழத்துக்கு விலை சொல்லுங்கள். அதன் பிறகு நான் எவ்வளவு பழம் வாங்குவதென்று முடிவு செய்கிறேன்,'' என்றான் வைரமணி.

கடைக்காரன் அவன் மொத்தமாக வாங்குவான் என்று எண்ணி, ''ஒரு பழம் மூன்று ரூபாய்!'' என்றான்.

''இதற்கும் குறைவாக வேறு எங்காவது கிடைக்குமா?'' என்று கேட்டான் வைரமணி.

மண்டிக்காரர் அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு, ''இங்கிருந்து கொஞ்சதூரம் போனால், ஒரு பெரிய மாந்தோப்பு இருக்கிறது. அங்கே, ஒரு ரூபாய்க்கே மாம்பழம் கிடைக்கும்,'' என்றார்.

அவருக்கு நன்றி கூறி, மாந்தோப்பை நோக்கி நடந்தான். நடந்து நடந்து, அவனுக்கு கால் வலித்தது. இருந்தாலும், 'குறைந்த விலைக்கு வாங்கப் போகிறோமே' என்ற மகிழ்ச்சியில், வியர்க்க விறுவிறுக்க மாந்தோப்பை அடைந்தான் வைரமணி.

மாந்தோப்பு உரிமையாளரிடம், ''ஒரு மாம்பழம் என்ன விலை?'' என்று கேட்டான்.

அவரும் இவன் யாரோ ஒரு மாம்பழ மண்டிக்காரன் என்று எண்ணி, ''ஒரு ரூபாய்க்கு, ஒரு மாம்பழம் வீதம் விற்கிறோம். நிறைய வாங்கினால், 75 காசுக்கே தரலாம்,'' என்றார்.

''அதற்கும் குறைவாக மாம்பழம் கிடைக்க ஏதாவது வழி இருக்கிறதா?'' என்று கேட்டான் வைரமணி.

மாந்தோப்புக்காரருக்கு எரிச்சலாகிவிட்டது.

''நீங்கள் இங்குள்ள மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து போட்டால், 50 காசுக்கு மாம்பழம் தருகிறேன்,'' என்றான்.

மரத்தில் ஏறிய வைரமணி, மளமளவென்று மாம்பழங்களைப் பறித்துப் போட்டான். உச்சிக் கிளையில் ஒரு பெரிய மாம்பழம் தொங்கியது. அதைப் பறித்து நம் பங்குக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்த வைரமணி, உச்சிக்கிளைக்கு ஏறினான். அந்தப் பெரிய மாம்பழத்தைப் பறிக்கக் கையை நீட்டிய போது, அவனுடைய கால் வழுக்கியது. உடனே, கைக்கு எட்டிய ஒரு பெரிய கிளையைப் பிடித்தவாறு தொங்கினான்.

அவன் தொங்கிக் கொண்டிருந்த இடத்துக்குக் கீழே ஒரு பெரிய கிணறு இருந்தது. கையை விட்டால் இந்தப் பாழும் கிணற்றில் விழுந்து, கை, கால்களை உடைத்துக் கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை என்று தோன்றியது வைரமணிக்கு.

'காசை மிச்சப்படுத்த நினைத்து, இப்படி ஆபத்தில் மாட்டிக் கொண்டோமே' என்று எண்ணிய வைரமணி, ''யாராவது காப்பாற்றுங்களேன்!'' என்று கூச்சலிட்டான்.

அவன் போட்ட கூச்சல், அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த யானைப் பாகன் ஒருவனின் காதில் விழுந்தது. அவன் யானையோடு தோப்பில் புகுந்து, வைரமணி தொங்கிக் கொண்டிருந்த மரத்தடியில் சென்று நின்று அண்ணாந்து பார்த்தான்.

''ஐயா உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்'' என்றான்.

''நூறு ரூபாய் தருவாயா?'' என்றான் யானைப் பாகன்.

''தருகிறேன்; முதலில் என்னைக் காப்பாற்றுங்கள்,'' என அலறினான்.

உடனே, யானையை கிணற்றோரமாக நிறுத்தி விட்டு, அதன் மேல் ஏறி நின்று வைரமணியின் காலைப் பிடித்தான் யானை பாகன்.

அப்போது, திடீரென்று யானை அந்த இடத்தைவிட்டு நகர, யானைப் பாகன் வைரமணியின் காலை கெட்டியாகப் பிடித்தவாறு தானும் அந்தரத்தில் தொங்கினான்.

கீழே உள்ள பாழுங்கிணற்றைப் பார்த்தபோது, வயிற்றில் புளியைக் கரைத்தது. 'நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு, பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டோமே' என்று வருந்தினான் யானைப் பாகன்.

மேலே இருக்கும் வைரமணி கையை விட்டுவிட்டால், கிணற்றில் விழுந்து நொறுங்க வேண்டியதுதான் என்பது அவனுக்குப் புரிந்தது.

அதனால், வைரமணியைப் பார்த்து, ''அப்பா கையை நழுவ விடாமல் கெட்டியாப் பிடித்துக் கொள். நம்மை யாராவது வந்து காப்பாற்றுகிற வரையில் நீ இப்படியே மரக்கிளையை பிடித்துக் கொண்டிருந்தால், எனக்குத் தருவதாகச் சொன்னாயே, 100 ரூபாய், அதை நீ தர வேண்டாம். அதற்குப் பதிலாக நான் உனக்கு, 200 ரூபாய் தருகிறேன்,'' என்றான்.

கஞ்சன் வைரமணிக்கு மகிழ்ச்சி பொங்கியது. கை வலிப்பதையும், பொருட்படுத்தாமல், 200 ரூபாய் கிடைப்பதை பற்றி கற்பனையில் மூழ்கினான்.

யானைப் பாகன் மட்டும், ''யாராவது வந்து எங்களை காப்பாற்றுங்களேன்,'' என்று கூவினான்.

சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த வழியாகப் சென்ற ஒரு குதிரைக்காரனின் காதில் கூச்சல் விழுந்தது. அவன் தோப்பில் புகுந்து கிணற்றுக்குப் பக்கத்தில் சென்று நின்றான். மரத்தை பிடித்து தொங்கிய வைரமணி, ''ஐயா! எங்களை காப்பாற்றுங்கள்! நான் உங்களுக்கு, 100 ரூபாய் தருகிறேன்,'' என்றான்.

உடனே யானைப் பாகன், ''நானும், 100 ரூபாய் தருகிறேன்,'' என்றான். 200 ரூபாய்க்கு ஆசைப்பட்ட குதிரை வீரன், குதிரையின் மேல் நின்று யானைப்பாகனின் காலைப் பிடிக்க, குதிரை அங்கிருந்து அப்பால் நகர, அவனும் பாகனின் காலைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கினான்.

வைரமணியின் காலை யானைப் பாகனும், பாகனின் காலைக் குதிரைக்காரனும் பிடித்தவாறு தொங்கினர்.

வைரமணி இரண்டு பேரின் பளுவையும் சேர்த்துத் தாங்க வேண்டியிருந்ததால் அவனுடைய கைகள் அதிகமாக வலித்தன.

''என்னால் வலியைத் தாங்க முடியவில்லை. கையை விட்டுவிடப் போகிறேன்,'' என்றான் வைரமணி.

அதைக் கேட்ட யானைப் பாகன், ''ஐய்யய்யோ நீ கையை விட்டால், நாம் மூவருமே கிணற்றில் விழுந்து எலும்பு நொறுங்கி செத்துப் போவோம்,'' என்று அலறினான்.

''கையை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டிருந்தால் நான் உனக்கு, 500ரூபாய் தருகிறேன்,'' என்று அலறினான் குதிரைக்காரன்.

அதைக் கேட்ட வைரமணிக்கு அந்த நிலையிலும் மகிழ்ச்சி தாளவில்லை.

'இவன், 200 ரூபாய் அவன், 500 ரூபாய் ஆக மொத்தம், 700 ரூபாய்! இன்று யார் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லையே' என்று எண்ணிய வைரமணி, கைவலிப்பதைக் கூட மறந்து விட்டான்.

''யானைப் பாகனும், குதிரை வீரனும், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்!'' என்று தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தனர்.

ஆனால், வைரமணி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், 700 ரூபாய் தன் கைக்கு வந்து விட்டதாகவே எண்ணி கற்பனையை மேய விட்டான்.

'ஒரு ரூபாய் நாணயங்களாக, 700 ரூபாய் கொடுத்தால் அது நம் இரண்டு கையிலும் அடங்குமா... அடங்காதா... இவ்வளவு இருக்குமா?' என்று எண்ணியவாறே, கிளையைப் பிடித்திருந்த இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து பிடியை விட்டான்.

அடுத்த நிமிடம், மூவரும் ஆவென்று அலறி பாழுங் கிணற்றில் விழுந்தனர்.

யார் எலும்பு எது என்று தெரியாமல், மூவரின் உடல்களும் சிதைந்து நொறுங்கி விட்டன.

ஐம்பது காசுக்கு கருமித்தனம் பண்ணி உயிரையே விட்டான் கஞ்சன் வைரமணி. அவனால் மற்ற இருவரும் உயிரை விட நேர்ந்தது.

குட்டீஸ்... கஞ்சத்தனமாக இருக்காதீங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us