PUBLISHED ON : செப் 21, 2018

இசைக்கு மயங்காதவர் அரிது; ஐந்தறிவு ஜீவன்கள் கூட, இசைக்கு மயங்குவது உண்டு. ஐரோப்பாவில் உள்ள, ஜெர்மனியை ஆண்ட, ஹரிட்லரும், இத்தாலியை ஆண்ட முசோலினியும் இணைந்து, உலக நாடுகளை கைப்பற்ற எண்ணினர். இந்த எண்ணம் தான், இரண்டாம் உலக மகா யுத்தமாக வெடித்தது.
ஆரம்பத்தில், உள் நாட்டில் தங்கள் எதிரிகளை கொன்றனர். அதன்பின், பிடிக்காத இனத்தவரைக் கொன்றனர்; இறுதியில், அண்டை நாடுகளை அபகரிக்க துவங்கி, மக்களை கொன்று குவித்தனர். இந்த மனித குல விரோதிகளை, எப்படி எதிர் கொள்வது என்று உலகமே திகைத்து கொண்டிருந்தது. இந்த சூழலில் தான், அந்த அதிசயம் நடந்தது.
இந்தியாவின் வட மாநிலங்களில், இசை மூலம், மிகப் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார் பண்டிட் ஓங்காரநாத் தாகூர். இவர் பிறந்தது, மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா அருகே கிராமம். ஆனால், இவரது இசைக்கு, நாடு, எல்லை கடந்த வரவேற்பு இருந்தது. இத்தாலியில் இசை நிகழ்ச்சி நடத்த, பண்டிட் ஓங்காரநாத்தை, அங்குள்ள இசை அன்பர் அழைத்தார்.
இதை ஏற்றவர், பல நகரங்களில் கச்சேரி நடத்தினார். மொழியை கடந்து, அவரது இசையைக் கேட்டு மகிழ்ந்தனர்; அன்பளிப்பு கொடுத்து வணங்கினர்; வீடுகளுக்கு அழைத்து, விருந்து கொடுத்து உபசரித்தனர்.
இத்தாலியில், இசைக் கச்சேரிகள் முடிந்தன. இந்தியா திரும்ப வேண்டிய நாள் நெருங்கியது. இத்தாலி நாட்டு தலைவர் முசோலினியைச் சந்திக்க, ஓங்காரநாத் விரும்பினார். விருப்பத்தை, நண்பர்களிடம் கூறினார். அவர்கள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
முசோலினியைச் சந்திக்கும் நாள் வந்தது. அரண்மனைக்கு, ஓங்காரநாத்தை அழைத்துச் சென்றனர். முசோலினியின் தனி அறையில் சந்திப்பு நடந்தது. இந்தியர் மீது, அவமரியாதை எண்ணம் கொண்டிருந்த முசோலினி, அப்போதும் அதே நிலையில் தான் இருந்தார். வேண்டா வெறுப்பாக, ஓங்காரநாத்தை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார்.
'இந்தியாவைப் பற்றியும், இந்திய இசையைப் பற்றியும் பலர் வியந்து பேசியிருக்கின்றனர். ஆனால், அத்தகைய எவரும் அதற்கான காரணங்களை விளக்கவில்லை. நீங்களாவது, மேற்கத்திய இசையை விட, இந்திய இசை எவ்வகையில் சிறந்தது என்று விளக்க இயலுமா...' என, ஏளனமாக கேட்டார் முசோலினி.
இந்திய இசையின் மரபு, தொன்மை, ராகங்களின் வகைகளை, ஓங்காரநாத் விவரமாக விளக்கிக் கொண்டிருந்தார்.
இடைமறித்த முசோலினி, 'இந்த கதை எல்லாம் வேண்டாம்; நேரடியாகவே கேட்கிறேன். உங்கள் சங்கீதத்தால், தனி மனிதனை துாங்க வைக்க முடியுமா...
'எனக்கிருக்கும் பிரச்னைகளால், பல நாட்களாக துாங்கவில்லை; துாங்க முயற்சித்தும் முடியவில்லை; உங்கள் இசையால் என்னை துாங்க வைக்க முடியுமா...' என்றார்.
'பிரச்னைகளை உருவாக்கி, பிரச்னைகளிலேயே உழன்று வாழும் உங்களை உறங்க வைப்பது எளிதல்ல; இருப்பினும் முயற்சிக்கிறேன்...' என்று கூறிய ஓங்காரநாத், தம்பூராவை மீட்டியபடி, ஒரு ராகத்தை கண்களை மூடி பாடினார்.
ஒரு மணி நேரம் பாடிய ஓங்காரநாத், கண்களை திறந்த போது, முசோலினி, விழிமூடி அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்தார். நேரம் கடந்தது... கண் விழித்த முசோலினி, 'இந்திய இசை வென்று விட்டது...' என்று, ஓங்காரநாத்தை கட்டிப் பிடித்து பாராட்டினார்.
ஆம்... எவராலும் வெல்ல முடியாது என்ற நிலையில், சர்வாதிகாரி முசோலினியை, இந்திய இசை வென்று காட்டியது!
