PUBLISHED ON : செப் 21, 2018

தருங்காபுரி அரசன் சுரேந்திரவர்மன் மகன் மகேந்திரன்; அறிவாற்றல் மிக்கவன்; நாட்டை ஆளப் போகும் அடுத்த வாரிசு. கல்வியிலும், வேட்டையிலும் சிறந்து விளங்கினான். கொடிய மிருகங்களிடம் இருந்து, மக்களைக் காப்பாற்றி, அவர்கள் அன்பைப் பெற்றிருந்தான்.
ஒரு சமயம் -
அவன், வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். வெற்றிகரமாக வேட்டையாடித் திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் ஒரு யோகி, மரத்தடியில், ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான்.
'இவர் சாது மாதிரி, சுகமா கண்ணை மூடிட்டு பாசாங்கு செய்றார்' என்று நினைத்தவன், வேட்டையின் போது பிடித்த ஒரு ஆமையை, விளையாட்டுத் தனமாக, சாதுவின் மீது விட்டு, களிப்புற்றான்.
தவம் கலைந்த யோகி, வெகுண்டு, ''அற்பனே... நீ ராஜ வம்சத்தை சேர்ந்தவன் என்றாலும், அடாத செயலால், என் தியானத்தை கலைத்து விட்டாய்; நீ ஒரு ஆமையாக மாறி, ஜனசந்தடியே இல்லாத கடலுக்கடியில், இருக்கக் கடவாய்...'' என்று சபித்தார்.
''சுவாமி... தங்கள் தியானத்தின் மகிமை அறியாமல், விளையாட்டாக தவறு செய்து விட்டேன். என்னை சாபத்தில் இருந்து காப்பாற்றுங்கள்...'' என்று, அவர் பாதங்களைப் பற்றி, கதறினான். அவன் உடன் வந்த வீரர்களும், யோகியிடம் மன்னிப்புக் கேட்டு, இளவரசன் செயலைப் பொறுத்தருள வேண்டினர்.
சற்று சினம் தணிந்த யோகி, ''உன் தந்தை மிகவும் நல்லவர்; அவர் மகனான நீ, இப்படி செய்தது மாபெரும் குற்றம்... நீ ஆமை வடிவத்தில் இருக்கும் போது, மனிதர் யாராவது, உன்னைத் தொட்டால் சுயரூபத்தை அடையலாம்; கடவுள் நாமத்தை ஜெபித்தபடியே இரு; நல்லதே நடக்கும்...'' என கூறினார்.
அடுத்த நிமிடமே, ஆமையாக மாறி, கடலுக்கடியில் வீழ்ந்தான், மகேந்திரன். கவலையுற்ற படை வீரர்கள் நாடு திரும்பி, அரசன் சுரேந்திரவர்மனிடம் காட்டில் நடந்ததைக் கூறி வருந்தினர். அதிர்ச்சியில், ராஜகுருவிடம் நடந்ததைக் கூறி, பரிகாரம் செய்ய கேட்டான்.
''அரசே... கவலைப்படாதீர்கள்; முடிவில் எல்லாம் நன்மையாகும்...'' என்றார் ராஜகுரு.
நாட்கள் ஓடின -
ஒரு நாள், அண்டை நாட்டு இளவரசி அழகி, தோழிகளோடு படகில் உல்லாசப் பயணம் சென்றாள். ஆடிப்பாடி மகிழ்ந்து, கடலின் இயற்கை அழகை ரசித்தாள். அப்போது, எதிர்பாராமல் திடீரென்று, புயல் வீசியது. இளவரசி தவறி கடலில் விழுந்து மூழ்கினாள். அதைப் பார்த்து, தோழிகள் கதறினர். படகோட்டிகள் கடலில் குதித்து, இளவரசியைத் தேடினர்.
கடலில் மூழ்கிய இளவரசி, அந்த ஆமை மீது விழுந்தாள். யோகி சொற்படி, இளவரசியின் கை பட்டதும், ஆமை உருவத்தில் இருந்த மகேந்திரன், சுயரூபம் அடைந்தான். மயங்கி கிடந்த அழகியை, கைகளில் தாங்கியபடி, கடலின் மேல் மட்டத்தை அடைந்தான்.
படகில் சோகத்தோடு இருந்த தோழியர், இளவரசியை, ஒரு அழகான இளைஞன் துாக்கி வருவதைக் கண்டு, பெருமகிழ்ச்சி அடைந்தனர். பின், இளவரசிக்கு முதலுதவி செய்து, மூர்ச்சை தெளிவித்து நாட்டுக்கு திரும்பினர். காப்பாற்றிய இளவரசனுக்கு நன்றி கூறிய இளவரசி, தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைத்தாள்.
மகளை விபத்தில் இருந்த காப்பாற்றிய, இளைஞன் மகேந்திரனை, தக்க மரியாதையோடு வரவேற்றார் இளவரசியின் தந்தை. இளைஞன் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.
உடனே, துாதுவனை தருங்காபுரிக்கு அனுப்பி, மன்னன் சுரேந்திரவர்மனிடம், ''இளவரசர் மகேந்திரன் சவுக்கியமாக, என் அரண்மனையில் தங்கி உள்ளார். தாங்கள் குடும்பம், பரிவாரங்களோடு வருகை தந்து, என் மகள் அழகியை, இளவரசர் மகேந்திரனுக்கு திருமணம் செய்து அழைத்துப் போக வேண்டும்...'' என்று வேண்டுகோள் விடுத்தான்.
தன் மகன் சுயரூபம் அடைந்த விவரத்தைக் கேட்டு மகிழ்ந்த சுரேந்திரவர்மன், அந்நாட்டு இளவரசியை திருமணம் செய்ய ஒப்புதல் அளித்தான். பரிவாரங்களோடு சென்று, விமரிசையாக திருமணத்தை முடித்து, நாடு திரும்பினான்.
குட்டீஸ்... விளையாட்டுத் தனமான குறும்பு செயல், எப்படிப்பட்ட ஆபத்தை உண்டாக்கி விடுகிறது பார்த்தீர்களா... பெரியவர்களை அவமதிக்காமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
