PUBLISHED ON : ஆக 15, 2020

மேலையூர் கிராம குளக்கரை மரத்தடியில், கூடியது ஊர் மன்றம். நடுநாயகமாக, அமர்ந்திருந்தார் தலைவர். ஊர்நலன் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர்.
நீதி கேட்டு வந்தான் சுரேஷ்.
'ஐயா... என் பக்கத்து வீட்டில் வசிக்கும் துரைக்கும், எனக்கும் முன்பகை உள்ளது; இது, முப்பாட்டன் காலத்தில் துவங்கியது; இன்று வரை தொடர்கிறது...'
முறையிட்டு நின்றான்.
நிதானமாக அவனை இடைமறித்த தலைவர், 'அனைவருக்கும் தெரியும் அந்த பகைமை! இப்போது உன் வழக்கை மட்டும் கூறு...' என்றார்.
மிகவும் பவ்யமாக 'ஒரு கழுதை வளர்க்கிறான் பக்கத்து வீட்டு துரை; அதை துாண்டி விட்டு, உதைக்க வைக்கிறான். அவனையும், கழுதையையும் தண்டிக்க வேண்டும்...' என்றான்.
துரையை அழைத்து வந்தனர் காவலர்கள். அவன், 'ஐயா... பழக்கிய ஆட்டை விட்டு, என்னை உதைக்க செய்கிறார். எனக்கு முன்பாக வேகமாக வந்து புகாருடன் நிற்கிறார்; எனக்கு நீதி வழங்க வேண்டும்...' என்றார்.
சுரேஷை பார்த்த தலைவர் சற்றே யோசித்தபடி, 'கழுதை எப்படி உன்னை உதைத்தது...' என்று கேட்டார்.
'ஆடு போல் முன்னங்கால்களைத் துாக்கி, என் மார்பில் பயங்கரமாக உதைத்தது...'
லாவகமாக சொல்லி முடித்தான் சுரேஷ்.
'நீ சொல்வது பொய்! கழுதை, பின்னங்கால்களால் தான் உதைக்கும்! எனவே, தண்டனை உனக்குத்தான்...' என தீர்ப்பு கூறினார்.
குழந்தைகளே... எதையும் விசாரித்து ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டும். அது தான் உண்மையை அறிய உதவும்.
