PUBLISHED ON : செப் 05, 2020

சிங்கம், புலி, ஓநாயுடன் ஒற்றுமையாக உறவைப் பேணியது கழுதை.
கோணல் கால், அவலட்சண காது, உலர்ந்த உடலுடன் காணப்பட்ட கழுதையை, 'வாழத் தெரியாதவன்' என்று பழித்து மனதில் சிரித்தன விலங்குகள்.
காலையில் அழுக்கு துணி மூட்டையை சுமந்து, ஆற்றுக்குச் செல்லும் கழுதை. துவைத்து, உலர்த்தி கட்டிய துணி மூட்டையை சுமந்து, மாலையில் மவுனமாக வீடு திரும்பும். இடையே உள்ள நேரத்தில் சுதந்திரம் அனுபவிக்க சலுகை கொடுத்திருந்தான் கழுதைக்காரன்.
இந்த நேரத்தில் தான், புல் மேய்ந்தபடி, காட்டில் நண்பர்களை சந்தித்து உரையாடி மகிழும் கழுதை. சரியாக வேலை செய்யாவிட்டால், தடி உடையும் வரை அடித்து நொறுக்கி விடுவான் கழுதைக்காரன். கண்ணீர் வழிய அதைப் பொறுத்துக் கொள்ளும்.
விடுமுறை, விருந்து என்பதை எல்லாம் அறிந்ததேயில்லை கழுதை.
மற்ற மிருகங்களுக்கு, கழுதையின் கஷ்டங்கள் நன்றாகத் தெரிந்திருந்தது. அதை மீட்க எண்ணுவதேயில்லை. அது தேவையற்ற வேலை. 'துன்பத்தை சுமக்க வேண்டியது கழுதையின் தலை எழுத்து' என்று ஒதுங்கிக் கொண்டன.
பரம்பரை பரம்பரையாக, ராஜவம்சத்தில் பிறந்த காரணத்தால், எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை என எண்ணியது சிங்கம். பசித்த போது, கண்ணில் தென்பட்ட பிராணியை வேட்டையாடி தின்றது. கம்பீரமாக சுற்றி திரிந்து, சட்டம், ஒழுங்கு, அமைதியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டது. மற்ற நேரங்களில் குகையில் நிம்மதியாக துாங்கியது.
அதை கேள்வி கேட்பாரில்லை.
புலி இருக்கிறதே அது சாமான்யமானதா... சிங்க ராஜாவின் மந்திரி அல்லவா...
காட்டில், எல்லா பிராணிகளும் ஒழுங்காக வேலை செய்கிறதா என கண்காணித்தது. அதே சமயம் பரிபூரண சுதந்திரத்தையும் அனுபவித்தது. பசித்த போது, எந்த பிராணி எதிரே வந்தாலும் அடித்து ஆகாரமாக்கிக் கொண்டது.
ஓநாய்க்கு வேலை ஒன்றும் கிடையாது. சிங்கம், புலியின் வேட்டையில் விழும் எச்சிலை தின்றது. வாலை சுருட்டி, அடக்கியபடி பணிவைக் காட்டி வாழ்ந்தது. சிங்கத்துக்கும், புலிக்கும் ஆலோசனை சொல்வதாக, மற்ற விலங்குகளிடம் பெருமையடித்தது. சிங்கம், புலியுடன், ஓநாய்க்கு நெருங்கிய உறவு இருப்பதாக நம்பிய, சிறு பிராணிகள் பயந்து வாழ்ந்தன.
பருவநிலை மாற்றத்தால் அந்த காட்டுப் பகுதியில், திடீர் பஞ்சம் ஏற்பட்டது. மழையின்றி ஏரி, குளங்கள் எல்லாம் வறண்டன. வெப்ப மிகுதியால் மரங்கள் பற்றி எரியத் துவங்கின. சிறிய உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பஞ்சத்தால் எல்லா மிருகங்களும் தவித்து வாடின.
பஞ்ச நிலை குறித்து ஆராய சிங்கம் தலைமையில் கூட்டம் நடந்தது. புலி, ஓநாயுடன் கழுதையும் பங்கேற்றது. அவற்றுக்கு உணவு கிடைத்து, பல நாட்கள் ஆகி இருந்தது.
முதலில் யோசனை கூறியது ஓநாய்.
'நம்மிடையே யாரோ கடும் பாவம் செய்துள்ளனர். அது யார் என்று தெரிய வேண்டும். அந்த பாவம் செய்தவரை மட்டும் ஒழித்து விட்டால், காடு மீண்டும் சுபிட்சம் அடைந்துவிடும்...'
ஓநாயின் கருத்தை ஒப்புக் கொண்டன மிருகங்கள்.
'கருவுற்றிருந்த மானைக் கொன்றேன்; செய்த தவறுகளில் இதுதான் கடுமையானது...' வருந்தியது சிங்கம்.
'கன்றுக்குட்டியை கதற கதற இழுத்து வந்து அடித்து தின்று, பசி தீர்த்தேன். இதை, பெரிய பாவமாக கருதினால், தண்டனை கொடுங்கள்...'
பச்சாதாபத்துடன் சொல்லியது புலி.
'நொண்டியபடி சென்ற முயலை, பாய்ந்து கொன்றது தான், நான் செய்த குற்றங்களில் பெரிது...'
புளுகியது நயவஞ்சக ஓநாய்.
கழுதைக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. எந்த குற்றமும் செய்ததாக அதன் மனம் உறுத்தவில்லை. ஏதாவது சொல்ல வேண்டுமே என தவித்தது. இறுதியாக வாயை திறந்தது.
'சரியாகப் புல் தின்று, 10 நாள் ஆகிறது. துணி மூட்டை சுமையுடன் தள்ளாடியபடி, நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில், வைக்கோல் வண்டி ஒன்று சென்றது. பசி ஆசையை துாண்டியதால், அதில் ஒரே ஒரு வைக்கோல் துணுக்கை கவ்வினேன்...'
கழுதை சொல்லி வாயை மூடும் முன் -
'பயங்கர திருடன்...'
'கொள்ளைக்காரன்...'
'கள்ளத்துரோகி...'
'இந்த மகா பாவியால் தான் மழை பெய்யாமல், பஞ்சம் வாட்டுகிறது...'
கூச்சல் போட்டன மிருகங்கள்.
'அடி...'
உறுமியது புலி.
'உதை...'
அதட்டியது ஓநாய்.
'ஒழித்துக் கட்டு...'
உத்தரவிட்டது சிங்கம்.
மறுகணம், பிணமாக விழுந்தது கழுதை.
சிங்கம், புலி, ஓநாய் நாக்கிலிருந்து, கழுதையின் ரத்தத் துளி வழிந்தது.
இதை பார்த்துக் கொண்டிருந்த ஆந்தை, 'மனுஷங்களின் இயல்பு தான் ஏமாற்று புத்தி என எண்ணியிருந்தேன். அது மிருகங்களிடமும் வந்து விட்டதே' என எண்ணியபடி, பொந்தில் பதுங்கியது.
குட்டீஸ்... நேர்மையான வாழ்க்கை என்பது கரடுமுரடான பாதையில் நடப்பது போன்றது. அதில், கிடைக்கும் அனுபவங்கள் நல்ல பாடங்களை கற்றுக் கொடுக்கும். நேர்மை பாதையில் நடை போட துவங்கிவிட்டால், சிறு சபலத்துக்கும் உள்ளாகக் கூடாது. விழிப்புடன் நல்ல நட்புகளுடன் சேர்ந்து ஞானத்துடன் வாழ வேண்டும்!
