PUBLISHED ON : செப் 05, 2020

இன்று ஆசிரியர் தினம். கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, நன்றி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகள், வேறுபட்ட நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறது. விடுமுறை தினமாகவும் சில நாடுகள் கடைபிடிக்கின்றன.
நம் நாட்டின் இரண்டாவது இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளையே, ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
தமிழகத்தில் திருத்தணி அருகே சர்வபள்ளி கிராமத்தில், செப்.,5, 1888ல் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். பள்ளிக் கல்வியை, திருத்தணி, திருப்பதியில் கற்றார். சென்னை, சைதாப்பேட்டை, ஆசிரியர் பயற்சி பள்ளியிலும் படித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பேராசிரியராக பணிபுரிந்தார். பின், ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலையில் தத்துவத்துறை பேராசிரியராக பணியாற்றினார்.
ஆந்திரா, பனாரஸ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பதவி வகித்தார். பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டார். வாழ்வை உயர்த்தும் கல்வித் திட்டம், இந்தியாவில் உருவாக அரும்பாடுபட்டார். அவரது அறிவாற்றல், போதிக்கும் திறன், எளிய அணுகு முறை சிறந்த மாணவர்களை உருவாக்கியது.
இந்திய குடியரசு தலைவராக, 1962ல் உயர்ந்தார். ஐந்து ஆண்டுகள் அந்த பதவியை சிறப்பித்தார். சுய சிந்தனையுடன் செயல்பட்டார். அயல்நாடுகளுடன் மிகுந்த நல்லுறவை பேணினார்.
இந்தியாவின் மிக உயர்ந்த, பாரதரத்னா விருது பெற்றார். தத்துவம், கல்வி தொடர்பாக, 18 நுால்களை எழுதியுள்ளார்.
திருத்தணிப் பள்ளியில் ஆரம்ப கல்வி கற்றார். அது மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டு, அவரது பெயரிலே விளங்குகிறது. பள்ளி வளாகத்தில், அவரது ஆளுயர சிலையும் நிறுவப்பட்டு உள்ளது. அவர் வசித்த பூர்வீக வீடு, நுாலகமாகச் செயல்படுகிறது. அந்த தெருவுக்கும் அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அறிவுச் சுடராக விளங்கிய ராதாகிருஷ்ணன், ஏப்., 17, 1975ல் இவ்வுலகை பிரிந்தார். புகழ் இன்றும் நிலைத்திருக்கிறது.
சிற்பியும் ஆசிரியரும்!
ஒழுங்கற்ற பாறாங்கல்லை, உளியால் செதுக்கி, அழகிய சிற்பமாக மிளிர செய்கிறார் சிற்பி. அது போலவே, நற்போதனை என்ற உளியால், மாணவ-, மாணவியரை செதுக்கி நல்வழிப்படுத்தி, எழில்மிகு வாழ்க்கை சோலைக்கு அழைத்து செல்லும் பணியை செய்கிறார் ஆசிரியர்.
நல்ல புத்தகம், வாசிப்பவரின் வாழ்க்கையை மாற்றுகிறது. சிறந்த ஆசிரியரின் செயல்பாடு, மாணவரின் மனப்போக்கையே மாற்றியமைக்கும்.
சிறப்பான கற்பித்தல், அணுகுமுறை திறத்தால் ஒப்பற்றப் புத்தகமாக விளங்குகிறன்றனர் ஆசிரியர்கள். மாணவர்கள் சிறப்புடன் உருவாக உழைக்கின்றனர். அந்த உன்னதப் பணியை போற்றினால் பிரகாசிக்கலாம். நல் வழியில் நடைபோடலாம்.
கல்வியின் நோக்கம்
கல்வியின் உண்மை நோக்கம், அமைதியான வாழ்வை உருவாக்குவது என்றார் ராதாகிருஷ்ணன். அவர் விதைத்த கல்வி சிந்தனைகள்:
மனித சிந்தனையில் ஒளி பாய்ச்சுவது தான் கல்வி. மனதில் உலவும் குரங்கு தன்மையை அகற்றி, அன்பை வளர்த்து, உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்க வேண்டும் கல்வி.
அறிவியல், தொழில் நுட்பத்தை மட்டும் கற்பிப்பது, தொழில் நுட்பவியலாளனை மட்டுமே உருவாக்கும். அது, இயற்கையை வெற்றி கொள்ளவும், பூமியைச் சூறையாடவும் மட்டுமே உதவும்.
அமைதியாக, கூடி வாழும் திறனை வளர்ப்பது தான் உண்மை கல்வி. அது உடல், மனம் மற்றும் ஆளுமையை மேம்படுத்தும். சமூக நீதியையும், சுமூக உறவையும் பேணும் கலையாக விளங்கும்.
வாரந்தோறும் உறவுப்பாலம்!
ஆசிரியர் - மாணவர் உறவையும், நம்பிக்கையையும் மேம்படுத்தி வருகிறது, சிறுவர்மலர் இதழ். வாரந்தோறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியை வெளியிடுவதன் மூலம் இதை நிறைவேற்றுகிறது.
சிறுவர்மலர் இதழில் வெளியாகும், ஸ்கூல் கேம்பஸ் பகுதி...
* ஆசிரியர்களின் உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துகிறது
* கல்வி மீதான நம்பிக்கையை வளர்க்கிறது
* ஆசிரியர் - மாணவர் உறவை பெருமைப்படுத்துகிறது
* வகுப்பறையில் நடக்கும் அன்பு, அறிவு, அறம் சார்ந்த செயல்களை உலகறியச் செய்கிறது
* வகுப்பறையை தரம் உயர்த்தும், நுட்பத்தை வெளிப்படுத்துகிறது
* மாணவ, மாணவியரின் வகுப்பறை அனுபவத்தை உருக்கமாக பதிவு செய்கிறது
* ஆசிரியர் - மாணவர் உறவை வலுப்படுத்தி, நல்லெண்ணத்தை உயர்த்துகிறது.
ஆசிரியர்களை மேன்மைப்படுத்தி, வாரந்தோறும், 'ஆசிரியர்தினம்' கொண்டாடி மகிழ்கிறது, சிறுவர்மலர் இதழ்.
பொன்மொழிகள்!
இயற்கையுடன் இயைந்து கல்வி கற்கும் முறையை ஆதரித்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பொன்மொழிகள் ஒப்பற்றவை. வாழ்வை உயர்த்தும் வகையில் மிளிர்கின்றன.
அவற்றில் சில...
* விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்துவதே கல்வி
* செய்யும் பணியை சுதந்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும்
* வாழ்வதன் பொருளையும், நோக்கத்தையும் அறிவதே உன்னதம்
* வாழ்க்கை பயணத்தில் நோக்கம், திட்டம் இல்லாவிட்டால் அமைதி ஏற்படாது
* மகிழ்ச்சியுடன் வாழ, மற்றவரின் ஒத்துழைப்பும், இணக்கமும் அவசியம்
* தைரியம் இல்லாதவரிடம் நற்பண்பு நிலைக்காது
* லட்சியமும், நம்பிக்கையும் ஒரே கோட்பாட்டுக்குள் அமையாவிட்டால் சஞ்சலம் தான் மிஞ்சும். முயற்சியும், சக்தியும் வீணாகும். கோட்பாட்டால் வரும் நம்பிக்கை தான், உறுதியை வளர்க்கும். நல் வாழ்க்கையை அமைக்க உதவும்.
