
மதுரை, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 9ம் வகுப்பு படித்தேன். விஞ்ஞான பாட ஆசிரியராக இருந்த ஹெச்.பாலசுப்ரமணியன், பாட வேளையில் கண்டிப்பாக இருப்பார்; மற்ற நேரம் கலகலப்பாக பழகுவார். அனைத்து பாடம் மற்றும் திருப்புதல் தேர்வை முடித்த பின், 'ஏதேனும் பொது அறிவு வினா இருந்தால், தயங்காமல் கேட்கலாம்...' என்றார்.
அன்று, திடீரென இடி, மின்னலுடன் மழை பொழிந்திருந்தது. ஒருவன், 'மழை பெய்யும் போது, இடியும், மின்னலும் ஏற்படுகிறது. முதலில் தெரிவது எது...' என்றான்.
மிக எளிமையாக, 'காலாண்டுத் தேர்வில், 80 மதிப்பெண்ணும், அரையாண்டில், 60 மதிப்பெண் எடுத்து, தந்தையிடம் காட்டுகிறாய். உடனே, அவர் கண்கள் சிவக்கும். இதை மின்னல் எனலாம். தந்தை கூறுவதை இடியாக எண்ணிக்கொள். புரிந்ததா... ஒளி வடிவிலான மின்னல் முதலில் தெரியும். ஒலியான இடி பின் தொடரும்; ஒளி வேகம், ஒலியை விட அதிகம்...' என்றார். கரகோஷம் எழுப்பி விளக்கத்தை போற்றினோம்.
தற்போது, என் வயது, 70; மின்னல், இடி ஏற்படும் போதெல்லாம் அந்த அறிவார்ந்த ஆசிரியர் முகத்தை மனத்திரையில் கண்டு வணங்குகிறேன்.
- கு.கணேசன், மதுரை.
தொடர்புக்கு: 99526 82637