
திண்டிவனம், சிங்கனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 1999ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
அன்று மதிய உணவுக்கு பின், சமூகவியல் பாட ஆசிரியர் ஜெயச்சந்திரன், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான தேர்வு நடத்தினார். பக்கத்தில் இருந்தவன் விடைத்தாளை பார்த்துக் கொண்டிருந்தேன். இதை கண்காணித்து அருகில் வந்தார். அவரே விடைகளை கூறி எழுதச் சொன்னார்; உற்சாக மிகுதியால் எழுதி சமர்பித்தேன். அன்று மாலையே திருத்தி, எனக்கு, ஜீரோ மதிப்பெண் போட்டிருந்தார்.
நடுங்கியபடி விளக்கம் கேட்ட போது, 'பாடம் நடத்துவதே படித்து, முன்னேறுவதற்கு தான். படித்தால், எவர் தயவும் இன்றி சுயமாக தேர்வு எழுதி, முழு மதிப்பெண் பெறலாம்... உனக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவே விடைகளை தவறாக கூறினேன். மற்றவர் தயவை எப்போதும் எதிர் பார்க்காதே. சொந்த காலில் நிற்க முயற்சி செய்...' என அறிவுரைத்தார். அதை ஏற்று நல்லமுறையில் படித்து பாராட்டு பெற்றேன்.
தற்போது எனக்கு, 37 வயதாகிறது; நியூ இந்தியா காப்பீடு நிறுவனத்தில், முகவராக பணியாற்றுகிறேன். சுயமாக உழைத்து சொந்த காலில் நிற்க வழிகாட்டிய ஆசிரியரை போற்றுகிறேன்.
- ரா.ராஜ்மோகன், விழுப்புரம்.