
நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 2001ல், 9ம் வகுப்பு படித்த போது, பள்ளி சற்று தொலைவில் இருந்தது. அன்று மிதிவண்டியில் சென்றிருந்தேன். பள்ளி நேரம் முடிந்ததும், அதை நிறுத்தியிருந்த பகுதிக்கு தோழியருடன் வந்தேன்.
மிதிவண்டி சாவியை தவறவிட்டதால் தேடிக்கொண்டிருந்தோம். அங்கு வந்த கணித ஆசிரியர் ராமசாமியும் எங்களுடன் சேர்ந்து தேடினார். கிடைக்காததால், 'சைக்கிள் பழுது நீக்கும் கடை எதுவும் இல்லையே... எப்படி வீட்டுக்கு செல்வாய்...' என கேட்டு, வகுப்பறையில் தேட சென்றார்.
எங்கு தேடியும் கிடைக்காத போதும் பதற்றம் இன்றி தோழியருடன் சிரித்து பேசியபடி இருந்தேன். சிறிது நேரத்தில் திரும்பிய ஆசிரியர், 'பூட்டை உடைத்தால் தான், நீ வீட்டுக்கு செல்ல முடியும்...' என்றார். தயங்காமல், 'உடைத்து விடலாம் ஐயா...' என்றேன்.
வியப்புடன், 'இது போன்ற சூழலில் அழுது புலம்புவோரை தான் பார்த்திருக்கேன். ஆனால், பதற்றத்திலும் மகிழ்ச்சியாக இருக்கிறாயே...' என்றார்.
நிதானமாக, 'பதற்றம் ஏற்பட்டால் எதுவும் நடக்காது; வீடு செல்ல தாமதம் தான் ஆகும்...' என கூறினேன். பிரச்னையை சமாளிக்கும் என் மன உறுதியை மெச்சி, 'நடந்ததை எண்ணி கலங்காமல் தீர்வை தேடுவதே சிறந்தது. அது, வாழ்க்கையை உயர்த்தும்...' என்று பாராட்டி அனுப்பினார்.
என் வயது 35; இல்லத்தரசியாக இருக்கிறேன். அந்த ஆசிரியர் தந்த அறிவுரை, குடும்பத்தில் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிக்க உதவுகிறது. என் திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்தவரிடம் கற்றதை எண்ணி மகிழ்கிறேன்!
- ந.தென்றல், பெங்களூரு.
தொடர்புக்கு: 89709 30907