
இன்று இடத்தை விற்று பல லட்சங்களை பிரி.கே.ஜி.,க்கு கட்டணமாக செலுத்துகிறோம். அப்ளிகேஷன் வாங்கவே முதல் நாள் இரவு கியூவில் நிற்கிற பெற்றோருக்கு, நான் எப்படி பள்ளியில் சேர்ந்தேன் என்பதைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இன்றைய குட்டீஸ்சும்
தெரிஞ்சிக்கோங்களேன்.
கடந்த 1950களில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பொன்னுசாமிப் பிள்ளை ஆசிரியராகி, சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டி இலவசக் கல்வி வழங்கினார். நாகப்பட்டினம் அருகே, 1965ல் எங்கள் கிராமமான அந்தணப் பேட்டையில் உள்ள ஆறுமுக ஆதாரப் பள்ளியில், ஒரு சரஸ்வதி பூஜை திருநாளில், என்னை முதல் வகுப்பில் சேர்க்கும் வைபவம் நிகழ்ந்தது. உற்றார், உறவினர்களுக்கு கல்யாணம் போல சொல்லி திரளாக வந்திருந்தனர்.
எனக்கு புது டிரஸ் அணிவித்து, குறுக்கு மாலைகள் போட்டு, நாதஸ்வரக் கச்சேரியோடு, எங்கள் ஊரின் பிரதான கோவிலான அண்ணாமலை நாத சுவாமி கோவிலைச் சுற்றி ஊர்வலம் வந்து, வழிபாடு நடத்தி, பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆசிரியர் பொன்னுசாமி பிள்ளை என்னை மடியில் அமர்த்தி, முன்னே பரப்பியிருந்த நெற்குவியலில் என் விரலை பிடித்து, 'அ' என்று எழுத வைத்தார். பிறகு வீட்டிற்கு வந்து திருஷ்டி கழித்து, 'தடபுடல்' விருந்து நடந்தது.
ஆக, சல்லிப் பைசா பீஸ் கட்டாமல் ஒரு கொண்டாட்டமாக நடந்தது என முதல் வகுப்பு அட்மிஷன். அது மட்டுமா?
எஸ்.எஸ்.எல்.சி., என்ற பள்ளியிறுதி வகுப்பு படிக்கும் போது, அரசு தேர்வு எழுத, 60 ரூபாய் கட்டியது தான் என் பதினோரு வருட பள்ளிக் கல்விக்காக நான் செலுத்திய ஒரே கல்வி கட்டணத் தொகை. நம்ப முடிகிறதா செல்லூஸ்... அதை இப்போது நினைத்தாலும் அப்படியே கனவாகி கரைந்துப்போகிறது என் மனசு.
- அண்ணா அன்பழகன், சென்னை.