PUBLISHED ON : மே 13, 2016

நான் பத்தாவது பொதுத்தேர்வில் 387 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தேன். எனக்கு ஒரு தங்கையும், தம்பியும் உண்டு. அப்போது என் தந்தை கூலி வேலை பார்த்து எங்களை காப்பாற்றி வந்தார். குடும்ப வறுமை காரணமாக, என்னை பள்ளிக்கு செல்ல வேண்டாம். தம்பி, தங்கை மட்டும் படிக்கட்டும் என்றார். நானும் அதை புரிந்து கொண்டு சம்மதித்தேன். அதோடு, எனக்கு திருமணப் பேச்சும் நடைபெற்றது.
இதற்கிடையே நான் பிளஸ் 1 வகுப்பில் சேராமல் இருந்ததை அறிந்த என் தோழிகள், எங்கள் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். விஷயத்தை, நான் படித்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியையிடம் தெரிவித்தனர்.
மறுநாளே, அந்த ஆசிரியை எங்கள் வீட்டிற்கு வந்து, 'படிப்புச் செலவு அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் மகள் நன்றாகப் படிக்கக் கூடியவள். அவள் எதிர்காலத்தை நீங்களே கெடுத்து விடாதீர்கள்!' என்று கூறி, 500 ரூபாய் பணத்தை என் அம்மாவின் கையில் திணித்தார்.
மேலும், அவர் கூறியது போல, புத்தகங்கள், சீருடை வாங்கிக் கொடுத்து பள்ளி கட்டணத்தையும் கட்டினார். அதோடு, என் அம்மா வீட்டில் சிறுதொழில் செய்யவும் ஏற்பாடு செய்து தந்தார். நான் தொடர்ந்து பள்ளிக்கு சென்றேன். பிளஸ் 2 வகுப்பில், 981 மதிப்பெண்கள் எடுத்தேன். பிறகு, 'பிசிஏ' பட்டப்படிப்பு முடித்து இன்று ஒரு தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியையாக பணிபுரிகிறேன். கணவர், இரு குழந்தைகள் என நிறைவோடு வாழ்கிறேன்.
இன்று நானும், என் கணவரும் எத்தனையோ ஆயிரங்களை சம்பாதித்தாலும், அன்று அந்த ஆசிரியை செய்த உதவி இந்த ஆயிரங்களுக்கு ஈடாகாது. அவர் மட்டும் எனக்கு உதவி செய்து, ஆலோசனைகள் வழங்காமலிருந்தால் என் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
எனக்கு உதவி செய்த அந்த ஆசிரியை இன்று உயிரோடு இல்லை. அவர் நினைவாக, நானும் கூட சில ஏழைக் குழந்தைகளுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்!
- ஆர்.கவிதா, மதுரை.