
முன்னொரு காலத்தில், ஒரு பெரிய பணக்காரன் இருந்தான்; அவனிடம் பல அடிமைகள் இருந்தனர். அந்த அடிமைகளில் ஒருவன் மிகவும் அப்பாவி; நோஞ்சானாகவும் இருந்தான். அவனை மற்ற அடிமைகள் நையாண்டி செய்வர். ஆனால், அந்த அப்பாவி அடிமை, யாருடனும் சண்டை போட மாட்டான்.
ஒருசமயம், பணக்காரன், வியாபார விஷயமாக நெடுந்தூரம் செல்ல வேண்டி இருந்தது. இன்றைய நாட்களைப் போல் போக்குவரத்துச் சவுகரியங்கள் கிடையாது. மூட்டைகளை, அடிமைகள்தான் சுமந்து செல்வர். ஆகவே, பணக்காரன் தன் அடிமைகளில், 20 பேரை தேர்ந்தெடுத்தான்.
''இந்தப் பயணம் பல நாட்கள் நீடிக்கும். ஒவ்வொருவரும், ஒவ்வொரு மூட்டையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும். நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் மூட்டையை எக்காரணங்கொண்டும் வழியில் மாற்றிக் கொள்ளக் கூடாது. இதோ, 20 மூட்டைகள் உள்ளன. அவரவர் விரும்பியதை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று ஆணையிட்டான் பணக்காரன்.
உடனே, அடிமைகளிடையே பெரிய அடிதடியே ஏற்பட்டது. ஒவ்வொருவரும் மிகச் சிறிய மூட்டையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதற்காக, முட்டி மோதிக் கொண்டனர். இவர்களுடைய போட்டா போட்டியில், நோஞ்சான் அடிமை மட்டும் கலந்து கொள்ளவில்லை; ஒதுங்கி ஓரமாக நின்றான்.
எல்லாரும் அவரவர்களுடைய மூட்டையைப் எடுத்ததும், அந்தச் சின்ன அடிமை மெள்ள நகர்ந்தான். அங்கு மிஞ்சி இருந்தது ஒரே ஒரு மூட்டைதான். ஆனால், அதுதான் அங்கிருந்த மூட்டைகளிலேயே மிகப் பெரியது.
அந்த அப்பாவி அடிமையை விடப் பெரிதாக இருந்தது அது. தனக்கு இத்தனை பெரிய மூட்டையை அவர்கள் விட்டு வைத்ததற்காக அவன் ஆத்திரப்படவில்லை; அலுத்துக் கொள்ளவும் இல்லை. மவுனமாக அதைத் தூக்கித் தலையில் வைத்து, தன் சகாக்களைத் தொடர்ந்தான். அதைக் கண்ட மற்ற அடிமைகள் உரக்கச் சிரித்தனர்.
''உன்னைப் போல் அடி முட்டாளைப் பார்த்ததே இல்லை. மிகப் பெரிய மூட்டையை எடுத்திருக்கிறாயே... பயணம் முழுவதும் நீ இத்தனை பெரிய மூட்டையை எப்படிச் சுமந்து வரப்போகிறாய்? மடையன்!'' என்று கேலியாக நகைத்தனர்.
மூட்டையின் கனம் அழுத்த தள்ளாடியபடி நடந்த சின்ன அடிமை, புன்முறுவலுடன் கூறினான்.
''இந்த மூட்டையையும் யாரேனும் ஒருவர் தூக்கித்தானே ஆக வேண்டும்? தவிர இந்த மூட்டைக்கு ஒரு மாய சக்தி உண்டு. 'இதை முதலிலேயே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளாமல் போனோமே, என்று நீங்கள் பின்னால் வருத்தப்பட்டாலும் படலாம்... யார் கண்டனர்?'' என்றான்.
இதைக் கேட்ட, 19 அடிமைகளும் சிரித்தனர்.
''அப்படி வேறு நீ கனவுகாண வேண்டாம். அசட்டுப் பயலே! நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கு ஏற்ற சரியான மூட்டையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம்,'' என்று பரிகசித்தனர்.
நோஞ்சான் அடிமை பதில் ஒன்றும் சொல்லவில்லை.
நாட்கள் நகர்ந்தன-
பயணம் நீண்டு கொண்டே போயிற்று. கரடு முரடான மலைப் பாதைகளில், நோஞ்சான் அடிமையின் பெரிய மூட்டையில் ஏற்படும் வினோதமான மாறுதலை மற்ற அடிமைகள் கவனித்தனர். அந்த நோஞ்சான் அடிமை கூறியதுதான் உண்மை! அந்தப் பெரிய மூட்டை நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே வருகிறதே! உண்மையிலேயே அது மாய சக்தி வாய்ந்ததுதானோ?
நாளாக நாளாக, அது பருமனைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, மற்றவர்களின் மூட்டைகளை விடச் சின்னதாகிவிட்டது.
உடல் வலிமையிலும், உருவத்திலும் பெரியவர்களாக இருந்த சோம்பேறி அடிமைகள் அப்போதுதான் தாங்கள் எத்தனை பெரிய முட்டாள்கள் என்பதை புரிந்து கொண்டனர். தங்களால் கொடுமை செய்யப்பட்ட இளைத்த உடலைக் கொண்ட அடிமை, அறிவால் எப்படி உயர்ந்தவன் என்பதையும் அவர்கள் அறிந்தனர்.
அது சரி, அத்தனை பெரிய மூட்டை உருமாறிச் சுருங்குவானேன்? நிஜமாகவே அதில் ஏதாவது மாயமந்திரம் இருந்ததா?
இல்லவே இல்லை. அந்தப் பெரிய மூட்டையில் அந்த நீண்ட நெடுநாள் பயணத்துக்கு, அத்தனை பேருக்குமான உணவுப் பொருள் இருந்தது.
ஒவ்வொரு உணவு வேளையிலும், அந்த மூட்டையிலிருந்துதான் உணவுப்பொருள் எடுத்து எல்லாருக்கும் வினியோகிக்கப்பட்டது. ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும், அந்த நோஞ்சான் அடிமையுடைய மூட்டையின் கனம் குறையத்தானே செய்யும்?
பயணத்தின் முடிவில், அந்தச் சின்ன அடிமை காலிச் சாக்கைத் தோள்மீது போட்டு கையை வீசியபடியே நகரத்துக்குள் நுழைந்தான். தாங்கள் சுமக்கும் மூட்டையை எப்போது கீழே இறக்கப் போகிறோம் என்று மற்றவர்கள் தவிப்புடன் இருந்தனர். அவர்கள் அத்தனை பேர் தூக்கி வந்த மூட்டைகளிலும், வியாபாரப் பொருள்கள் இருந்தன. அவை அந்தப் புதிய நகரத்தில் விற்கப்பட வேண்டியவை.
அப்பாவியும், அழகற்றவனும், பலம் இல்லாதவனுமான அந்தச் நோஞ்சான் அடிமை தன்னுடைய பொறுமையிலும், புத்திசாலித்தனத்திலும் எல்லாருடைய அன்புக்கும் பாத்திரமானான். ஆரம்பத்தில் அவனைக் கேலி செய்த தோழர்கள் கூட அவனிடம் அன்பும், மதிப்பும் காட்டினர். அந்த நோஞ்சான் அடிமைக்கு விடுதலை வழங்கினார் பணக்காரன்.
அவனுக்குச் சுதந்திரம் கிடைத்ததில், மற்ற அடிமைகளுக்கு ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியானாலும், தங்களை விட்டு அவன் பிரிந்து போகிறானே என்று அவர்கள் வேதனைப்பட்டனர். அவனோடு வேலை செய்யும் போதும், பயணம் செய்யும் போதும் யாருக்கும் அலுப்போ, களைப்போ ஏற்படாது. ஏனென்றால், அந்தச் சின்ன அடிமை வழியெல்லாம் அழகழகான கதைகள் சொல்லி எல்லாரையும் மகிழ்விப்பான்.
சின்ன அடிமையும், தனக்கு விடுதலை கிடைத்ததில் மகிழ்ச்சி கொள்ளவில்லை. நினைவு தெரிந்ததிலிருந்து அடிமையாக இருந்த அவனுக்கு, உழைப்பைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.
ஆகவே, எப்படிப் பிழைப்பது? வேலை செய்வதைத் தவிர அவனுக்குத் தெரிந்த ஒரே கலை, கதை சொல்லுவதுதான். ஆகவே, அந்த அப்பாவி அடிமை கடை வீதிகளிலும், நான்கு சாலைகள் கூடுமிடங்களிலும் சந்தைகளிலும் நின்று கதைகள் கூறித் தன் உணவுக்கு வழி தேடினான். அவன் கூறும் குட்டிக் கதைகளைக் கேட்க மக்கள் வந்து கூடினர்.
அவன் சிரிக்கச் சிரிக்கச் கதைகளைச் சொன்னான். கதை கேட்டவர்களைச் சிந்திக்க வைத்தான். அவன் கூறும் கதைகளின் புகழ், அந்த நாட்டின் மூலை முடுக்குகளிளெல்லாம் பரவியது. அந்நாட்டு மன்னர் அவனை வரவழைத்தார். அவையில் அவனுக்கு ஒரு பதவியைக் கொடுத்தார்.
என்ன பதவி தெரியுமா?
தினமும் அவர் முன்னிலையில், அவன் கதைகள் சொல்ல வேண்டும்!
அந்தச் சின்ன அடிமையின் வறுமை ஓடியது. நடுங்கும் குளிரில் அடைத்திருக்கும் வீட்டுக் கதவுகளின் அடியில் முடங்கிக் கொண்டு துயர் மிகுந்த இரவுகளை அவன் நினைத்துக் கொண்டான். ஒரு கவளம் உணவைப் பெறப் புதிய கதைகளை உருவாக்க மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டதை எண்ணிப் பார்த்தான். அன்று, அப்படியெல்லாம் தான் கஷ்டப்பட்டதனால்தான் இன்று மன்னரின் அவையில், கதை சொல்லும் மகிமை, தனக்குக் கிடைத்திருக்கிறது, என்பதை அவன் மறக்கவில்லை.
தன் சின்னச் சின்னக் கதைகளால் மன்னரையும், அவையோரையும் மகிழ்வித்தான் சின்ன அடிமை. அவன் கதைகளில் மிருகங்களும், பறவைகளும் மனிதர்களைப் போலவே பேசும்; சிரிக்கும். ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதியும், படிப்பினையும் பொதிந்திருக்கும். அந்த அடிமை கூறிய நூற்றுக்கணக்கான குட்டிக் கதைகளைக் கேட்ட மக்களுக்கு அலுப்பே ஏற்படவில்லை. அப்படிப்பட்ட சிரஞ்சீவியான அற்புதக் கதைகளைக் கூறினான் அந்த அழகற்ற நோஞ்சான் அடிமை.
அவனுக்கு எழுதத் தெரியாது; படிக்கத் தெரியாது. கதை மட்டுமே சொல்லத் தெரியும். அவன் கூறிய கதைகளைக் கேட்ட மக்கள், பிற்காலத்தில் அதைத் தங்கள் குழந்தைகளுக்குக் கூறினர். அவர்கள் அதைத் தங்கள் சந்ததிகளுக்குச் சொன்னார்கள்.
இப்படியே வாய்மொழியாகவே பரவிய இக்கதைகளை, பின்னால் சிலர் சேகரித்து எழுதி வைத்தனர். பிற்காலத்தில், இந்த அற்புதமான நீதிக்கதைகள் புத்தகங்களாக வெளிவந்தன. அந்த சின்ன அடிமையின் கதைகள், அவன் மறைந்த பின், எத்தனையோ நூற்றாண்டுகளான பிறகு, இன்றும் போற்றிப் புகழப்படுகிறது.
இவ்வளவு பிரபலமான அந்த அடிமையின் பெயர் என்ன தெரியுமா?
ஈசாப். புராதன கிரேக்க நாட்டில் வாழ்ந்த அடிமைதான் இந்த ஈசாப். இவரது நீதிக்கதைகள் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. நம்முடைய பஞ்ச தந்திரக் கதைகள், கீதோபதேசக் கதைகள் ஆகியவற்றுக்கும், ஈசாப்பின் நீதிக்கதைகளுக்கும் ஒற்றுமை இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
கீழை நாடுகளிலிருந்து வந்த வியாபாரிகளிடம் கேட்டறிந்துதான், ஈசாப் தன் கதைகளை உருவாக்கி இருக்க வேண்டும் என்பது சில ஆராய்ச்சியாளரின் முடிவு. நாம் அந்தக் காலத்திலேயே கடல் கடந்து வாணிபம் செய்ய மேலை நாடுகளுக்குப் போயிருக்கிறோமே? எப்படியானாலும் ஈசாப்பின் நீதிக் கதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. நீங்கள் அவசியம் படிக்க வேண்டியவை.