
ஆதி காலத்தில் மனிதர்கள் குகைகளிலும், மரத்தின் அடியிலும் வசித்தனர் என்பது உங்க எல்லாருக்கும் தெரியுமே குட்டீஸ்!
இயற்கையில் கிடைத்த காய், கனி, கிழங்கு, இறைச்சி ஆகியவற்றைப் பச்சையாக உண்டனர்; ஆடைகள் கட்டிக்கொள்ளாமல், இலைகளையும், தழைகளையும் இடுப்பில் சுற்றிக் கொண்டனர். தங்கள் விரல்களில் நகத்தை நீள நீளமாக வளர்த்துக் கொண்டனர்.
ஒரு பருவத்தில் மூங்கில் காட்டில் ஏதோ ஒருவகை நோய் பரவி, மரங்கள் முழுவதும் காய்ந்து விட்டன; அப்படிக் காய்ந்த மரங்கள் ஒன்றுடன் ஒன்று காற்றில் உரசியபோது, அதனால் நெருப்புப் பொறி உண்டாகி, மூங்கில் காடு முழுவதையும் எரித்து விட்டது. அப்போது தீயில் சிக்கிக் கொண்ட ஒரு மானும், முயலும் வெந்து மாண்டு போயின. அந்த விலங்குகளை நீண்டிருந்த தங்கள் நகங்களால் கீறி, வெந்திருந்த இறைச்சியை மனிதர்கள் சாப்பிட்டுப் பார்த்தனர்; மிகவும் சுவையாக இருந்தது.
இதன்மூலம் விலங்குகளை நெருப்பில் வேக வைத்து, உண்டால் சுவையாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டனர்.
அதிலிருந்து, மூங்கில் கோல்களை உராய்ந்து நெருப்பு உண்டாக்க கற்றுக் கொண்டான் மனிதன். பிறகு, அந்த நெருப்பில் தேவையான உணவுப் பண்டங்களையும், இறைச்சியையும் சமைத்துச் சாப்பிடத் தொடங்கினர். அதன் பிறகு, கீரை வகைகளையும், தானிய வகைகளையும் வேகவைத்துச் சாப்பிட்டனர்.
ஒரு சமயம் -
காட்டில் நல்ல மழை பெய்தது. களிமண் மீது அவர்கள் நடந்து சென்ற போது, பிசுபிசுவென்று மனிதர்கள் கால்களில் மண் ஒட்டிக் கொண்டது. அத்துடன் அவர்கள் வீட்டுக்கு வந்து நெருப்பு அருகே உட்கார்ந்து குளிர் காய்ந்த போது, அவர்களின் கால் விரல்களுக்கு இடையே இருந்த களிமண், காய்ந்து, ஐந்து விரல்களும் பதிந்தநிலையில், கட்டியாகக் கீழே விழுந்தது.
இதைப் பார்த்ததும், மனிதர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
ஆகவே, தங்களுக்குத் தேவையான பாத்திரத்தைக் களிமண்ணால் செய்து, நெருப்பில் சூளை போட்டால், களிமண் பாத்திரம் காய்ந்து கெட்டியாகிவிடும் என்பதை தெரிந்துகொண்டனர்.
அன்றிலிருந்து சட்டி, பானைகள் செய்யவும், அவற்றில் இறைச்சி, காய்கறிகள் ஆகியவற்றை வேகவைத்துச் சாப்பிடவும், தெரிந்துகொண்டான் மனிதன்.
ஒரு சமயம் பானையில் தண்ணீர் வைத்துக் கொதித்ததும், அது பொங்கி வழிந்து நெருப்பை அணைத்து விட்டது. அதன் மூலம் தண்ணீரைக் கொண்டு நெருப்பை அணைக்கலாம் என்பதையும் தெரிந்து கொண்டனர்.
தேவைப்படும் பொழுது நெருப்பை உண்டாக்கவும், தேவைப்படாதபோது அதை அணைக்கவும் கற்றுக் கொண்டனர் மனிதர்கள். இப்படித்தான் ஒவ்வொன்றாகக் கற்று, இன்று இத்தனை ரெசிபிகள், விதவிதமான வீடுகள், அலங்காரங்கள் என வாழ தெரிந்து கொண்டான் மனிதன்.