
தேனி மாவட்டம், பெரியகுளம், வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நடுநிலைப் பள்ளியில், 1968ல், 1ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
வகுப்பாசிரியர் சேவுகப்பாண்டியன், பாடம் நடத்துவதில் மட்டுமல்ல, ஓவியம் வரைதல், பெரிய உருவ பொம்மைகள் செய்ய பயிற்சி அளிப்பதில் வல்லவர். தனித்துவத்துடன் உருவாக்கவும் செய்வார். சேட்டை செய்வோரை தண்டிப்பதில், வினோத முறைகளை கையாளுவார்.
ஒருமுறை, குறும்பு செய்த மாணவன் சிக்கிக் கொண்டான். சட்டையில் பட்டன் போடும் ஓட்டையில், வகுப்பறை கதவில் போட்டிருந்த பூட்டை எடுத்து மாட்டிவிட்டார். பாரம் தாங்காமல், சட்டையை இழுத்தபடி தொந்தரவு தந்தது; அழுதபடி மனம் வருந்தி, 'இனி, தவறு செய்ய மாட்டேன்...' என, மன்னிப்புக் கேட்டான். பின் பூட்டை திறந்து விடுவித்தார்.
ஒருநாள், வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவி சட்டையில் பூட்டு போட்டார். அழுதபடி நின்றவள், இடைவேளையில் பாட்டியை அழைத்து வந்து நியாயம் கேட்டாள். சமாதானப்படுத்தி, பூட்டை திறந்து விட்டார் ஆசிரியர்.
இப்போது என் வயது, 57; தனித்துவம் மிக்க அந்த ஆசிரியர் தந்த தண்டனை இன்றும் ஆச்சரியப்படுத்துகிறது.
- சி.ஜானகிராமன், தேனி.
தொடர்புக்கு: 94435 67878