
மதுரை மாவட்டம், திருமங்கலம், பி.கே.என்.பெண்கள் பள்ளியில், 1969ல், 7ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியை பிரேமா, வாழ்க்கை கல்வியையும் போதித்தார்.
மாணவியர் மனம், உடல் நலத்தில் பெரிதும் அக்கறை செலுத்துவார். தனித்திறனை வளர்க்க ஊக்கப்படுத்துவார்.
ஒரு ஆண்டு தான் அவரிடம் படிக்க முடிந்தது. என் தந்தையின் பணி மாறுதல் காரணமாக திருச்சி செல்ல வேண்டியதாயிற்று. அங்கு, 11ம் வகுப்பு படித்த போது, அந்த ஆசிரியை நினைவு அடிக்கடி எழுந்தது. பள்ளி முகவரியில் அவர் பெயரை குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதினேன்.
உடனே, பதில் அனுப்பியிருந்தார். அதில், 'நல்ல மதிப்பெண் பெறுவதற்கான உழைப்பு உன்னிடம் உள்ளது. மனதிடத்துடன் தேர்வை எதிர்கொள். உண்மையான உழைப்புக்கு பலன் கிடைக்கும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
அந்த கடிதம் தந்த உற்சாகத்தில் தேர்வு எழுதினேன். அவரது ஆசியுடன், 600க்கு, 516 மதிப்பெண் பெற்று, பள்ளி முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன்.
மிக்க நெகிழ்வுடன் நன்றி கடிதம் எழுதினேன். பதிலாக, 'அனுமன் பலம் அவருக்கே தெரியாது என்பது போல் நீ இருக்கிறாய். இந்த சாதனையை செய்யுமளவு அறிவும், மன உறுதியும் உள்ளதே... இதுவே வாழ்க்கையில் துணை நிற்கும்...' என குறிப்பிட்டிருந்தார்.
அந்த வரிகள் உயிரில் கலந்து இன்றும் உற்சாகம் தருகிறது.
என் வயது, 65; இன்றும் அந்த ஆசிரியையுடன் தொடர்பில் இருக்கிறேன்; ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று அவரிடம் ஆசி பெறுவதை, வழக்கமாக கொண்டுள்ளேன்.
- காந்திமதி சுப்ரமணியன், மதுரை.
தொடர்புக்கு: 94421 40755