தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆண்டவனின் கருணை!

ஆண்டவனின் கருணை!

ஆண்டவனின் கருணை!


PUBLISHED ON : ஏப் 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்ரவேல் கோத்திரத்திலே மூன்று மனிதர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் குஷ்டரோகி; மற்றொருவன் வழுக்கைத் தலையன்; இன்னொருவன் பார்வையற்றவன். அவர்கள் மூவரையும் இறைவன் சோதிக்க விரும்பினான். ஆகையால் அவர்களிடம் ஒரு தேவதூதனை அனுப்பினான்.

தேவதூதன் முதலில் குஷ்டரோகியிடம் சென்றார்; குஷ்டரோகியைப் பார்த்து, ''உனக்கு வேண்டிய முதன்மையான தேவை என்ன?'' என்று கேட்டார்.

அதற்குக் குஷ்டரோகி, ''நல்ல முக நிறமும், நல்ல தோலும் வேண்டும். மக்கள் என்னிடம் எதை அசுத்தம் என்று கருதுகின்றனரோ, என்னிடமிருந்து அது நீங்கிவிட வேண்டும்...'' என்று தன் விருப்பத்தைக் கூறினான்.

அதைக் கேட்ட தேவதூதன், அவன் மீது தம் கைகளை வைத்துத் தடவினார். அந்நிலையில் அவனது அசுத்தம் நீங்கியது. அவனுக்கு நல்ல முக நிறமும், நல்ல தோலும் உண்டாயிற்று.

தேவதூதன் அதன்பின் அவனை நோக்கி, ''உன்னுடைய வாழ்க்கைக்கு எதை மேலானதாக விரும்புகிறாய்?'' என்று கேட்டார்.

''ஒட்டகங்கள்!'' என்று கூறினான்.

அவனுக்கு உடனே பத்துமாதக் குட்டிகளுள்ள பெண் ஒட்டகங்கள் கொடுக்கப்பட்டன.

அதன் பின் தேவதூதன், அவனைப் பார்த்து, ''இதில் உனக்கு இறைவனுடைய ஆசீர்வாதம் உண்டாகட்டும்!'' என்று சொல்லிவிட்டு, அவனிடமிருந்து அகன்று விட்டார்.

தேவதூதன் அதன் பின் வழுக்கைத் தலையனிடம் சென்றார். வழுக்கைத் தலையனைப் பார்த்து, ''உன்னுடைய தேவைகளில் முதன்மையான தேவை எது?'' என்று கேட்டார்.

அதற்கு வழுக்கைத் தலையன், ''என் தலையில் அழகான மயிர் வேண்டும். மக்கள் என்னிடம் அசுத்தமாகக் கருதுவது, என்னிடமிருந்து நீங்குதல் வேண்டும்...'' என்று தன் தேவையைக் கூறினான்.

அதைக் கேட்ட தேவதூதன் உடனே, அவன் மீது தமது கைகளை வைத்துத் தடவினார். அவர் அவ்வாறு தடவிய அளவில், அவனுடைய அசுத்தம் நீங்கியது. அவனுடைய தலையில் அழகான மயிர் உண்டாயிற்று.

தேவதூதன் அதன் பின் அவனை நோக்கி, ''உன்னுடைய வாழ்க்கைக்கு மேலான பொருளாக எதை விரும்புகிறாய்?'' என்று கேட்டார்.

அதற்கு அவன், ''பசுக்கள்!'' என்று பதில் கூறினான்.

அவனுக்கு உடனே பெரிய கன்றுகளுள்ள, பசுக்கள் கொடுக்கப்பட்டன.

அப்போது தேவதூதன் அவனைப் பார்த்து, ''இதில் உனக்கு இறைவனுடைய ஆசீர்வாதம் உண்டாவதாக!'' என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து அகன்று விட்டார்.

தேவதூதன் அதன் பின் பார்வையற்றவனைப் பார்த்து, ''உனக்கு வேண்டியது என்ன?'' என்று கேட்டார்.

''இறைவன் என் கண் பார்வையை எனக்கு அளிக்க வேண்டும். நான் என் மக்களைப் பார்க்க வேண்டும்...'' என்று தன் விருப்பத்தைக் கூறினான்.

அதைக் கேட்ட தேவதூதன், உடனே அவனைத் தமது கைகளால் தடவினார். அந்நிலையில் இறைவன் அவனது கண் பார்வையை அவனுக்குக் கொடுத்தான்.

தேவதூதன் அதன்பின் அவனைப் பார்த்து, ''உன்னுடைய பிழைப்பிற்காக மேலான பொருளாக எதை விரும்புகிறாய்?'' என்று கேட்டார்.

அதற்கு அவன், ''ஆடுகள்!'' என்று கூறினான்.

அவனுக்கு உடனே ஆடுகள் கொடுக்கப்பட்டன. அவ்வாடுகள் பெருகின.

அம்மூன்று மனிதர்களுடைய ஒட்டகங்களும், பசுக்களும், ஆடுகளும் ஒரு சமவெளியில் நிறைந்திருந்தன.

சில காலம் சென்றன-

ஒருநாள் தேவதூதன் அந்தக் குஷ்டரோகியிடம் சென்றார்; அவனைப் பார்த்து, ''நான் ஓர் ஏழை. என் பயணத்தில் எல்லாப் பொருட்களையும் இழந்து விட்டேன். தாங்கள் அருள் செய்தாலொழிய நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாது.

''உனக்கு இந்த அழகான முகத்தோற்றத்தையும், அழகான தோலையும், சொத்தையும் கொடுத்த இறைவன் பெயரால், நான் ஊருக்குச் செல்வதற்காக, எனக்கு ஓர் ஒட்டகம் கொடுக்கும்படி மிகவும் கெஞ்சிக் கேட்கிறேன்...'' என்று கூறினார்.

அதைக் கேட்ட அவன், ''எனக்கு எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. எனக்கு எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. நான் இப்போதும் உம்மோடு பேசவும் நேரமில்லை...'' என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறவே, தேவதூதன் அவனைப் பார்த்து, ''நான் உன்னை அறிவேன். அசுத்தமுள்ளவன் என்று உன்னை மக்கள் வெறுக்கவில்லையா? நீ ஏழையாக இருந்தாய். ஆண்டவன் உனக்கு ஏராளமாகக் கொடுக்க வில்லையா?'' என்று கேட்டார்.

அதற்கு அவன், ''இந்தச் சொத்தெல்லாம் என் முன்னோர்களிடமிருந்து எனக்கு வந்ததாகும்...'' என்று பதில் கூறினான்.

அதைக் கேட்ட தேவதூதன், ''நீ பொய் சொல்லுகின்றாய். நீ முன்னிருந்த இழிநிலைக்கு ஆண்டவன் உன்னைக் கொண்டு வருவான்!'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

அதன் பிறகு வழுக்கைத் தலையனிடம் சென்றார்; அவனிடம் முதல் மனிதனிடம் கூறியவாறே கூறினார். அவ்விரண்டாம் மனிதனும் முதல் மனிதனைப் போன்றே பதில் கூறினான்.

அதைக் கேட்ட தேவதூதன், ''நீ சொல்வது பொய்யானால், நீ முன்னிருந்த நிலைமைக்கு உன்னை ஆண்டவன் கொண்டு வருவான்!'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

முதல் இரண்டு மனிதர்களையும் பார்த்து விட்டுச் சென்ற தேவதூதன், பின் பார்வையற்றவனிடம் சென்றார். அவனைப் பார்த்து, ''நான் ஓர் ஏழை. நான் ஒரு வழிப் பயணி. என் பயணத்தில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். ஆண்டவன் அருள் செய்தாலன்றி, நான் என் சொந்த ஊருக்குச் செல்ல முடியாது. உமக்குக் கண் பார்வை கொடுத்த ஆண்டவன் பெயரால், நான் என் ஊருக்குப் போவதற்காக, எனக்கு ஓர் ஆடு கொடுக்கும்படி உன்னை மிகவும் கெஞ்சிக் கேட்கிறேன்...'' என்று சொல்லிக் கேட்டார்.

''நான் முன்பு பார்வையற்றவனாக இருந்தேன். ஆண்டவன் எனக்குக் கண் பார்வை கொடுத்தருளினான். ஆகையால், உமக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, உமக்கு விருப்பமானதை எனக்காக விட்டுவிடுங்கள். ஏனென்றால், ஆண்டவன் ஆணையாக, நீர் இன்று ஆண்டவனுக்காக என்னிடமிருந்து கொண்டு செல்வதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நான் உம்மிடம் கேட்க மாட்டேன்...'' என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறவே, தேவதூதன் உடனே, ''உன்னுடைய பொருளை நீயே வைத்துக் கொள். ஏனென்றால், நான் உங்கள் மூவரையும் சோதிக்கவே இவ்வாறு செய்தேன். ஆண்டவன் உன் மீது இணக்கமாக இருக்கிறான். உன்னுடைய தோழர்கள்மீது கோபமாக இருக்கிறான்...'' என்று கூறிவிட்டு, அங்கிருந்து மறைந்து விட்டார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us