PUBLISHED ON : டிச 21, 2019

சென்றவாரம்: தங்க உடமைகளை, மருமகள்களிடம் ஒப்படைக்க புறப்பட்ட முதியவர், வழியில், வினோ என்ற பெண் வீட்டுக்கு வந்தார். மருமகள்களின் குணத்தை அறிய ஒரு நாடகம் நடத்த வினோ முடிவு செய்தாள். இனி -
மறுநாள் முதியவரை, ஒரு அறையில் படுக்க வைத்தாள் வினோ. அவர் மீது வெள்ளைத் துணியைப் போர்த்தியபடி, 'பேச்சு மூச்சு இல்லாமல் படுத்திருங்கள். யார் என்ன சொன்னாலும் பொறுமையுடன் இருங்கள். உங்கள் மருமகள்கள் வருவர். அவர்களின் பேச்சை கவனமாக கேளுங்கள்...' என்றாள்.
சற்று நேரத்தில் வந்த முதியவரின் மருமகள்கள், 'யாரம்மா நீ... எங்களை ஏன், அவசரமாக வரச் சொன்னாய்...' என்று கேட்டனர்.
'உங்கள் மாமனார், உடல்நலம் குன்றியதால் நேற்றிரவு இங்கு வந்தார். மிகவும் பலவீனமான நிலையில் ஒரு உயில் எழுதி, நீதிபதியான என் கணவரிடம் கொடுத்தவர், இன்று காலை இறந்தார்...' என்றாள்.
மருமகள்கள் மூவரும், முதியவர் படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்து, 'தங்க ஒட்டியாணம், தங்க காசுகளுடன் வருவார் என எதிர்பார்த்தோம். அந்த உடமைகள் யாருக்கு சொந்தம் என்பதை எழுதி இருக்கிறாரா... உயிலைப் படியுங்கள்...' என்றனர்.
படித்தாள் வினோ. ஒட்டியாணம், தங்க காசுகளை அவ்வூர் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக அளிப்பதாக எழுதப்பட்டிருந்தது.
அதைக் கேட்ட மூத்த மருமகள், 'என்ன அநியாயம்; தங்க ஒட்டியாணம் கிடைக்கும் என்று மூன்று வேளையும் வாய்க்கு ருசியாய் சமைத்துக் கொட்டினேன்... என் ஆசையில் மண்ணைப் போட்டு விட்டாரே... இவரை பட்டினி போட்டு சாகடித்திருக்கலாம்...' என்று கத்தினாள்.
இரண்டாவது மருமகள், 'இவர் உடம்பு தேற வேளாவேளைக்கு மருந்து, மாத்திரை கொடுத்தேன். அதற்கு பதில் இப்படியா துரோகம் செய்வார். இப்படி செய்வார் என்று தெரிந்திருந்தால் விஷம் கொடுத்திருப்பேனே...' என்றாள்.
மூன்றாவது மருமகளோ, 'இவர் கை, கால் வலிக்கிறது என்றால், ஓடிப்போய் பிடித்து விட்டேனே... எனக்கு எதுவுமே கொடுக்க மாட்டார் என்று தெரிந்திருந்தால், கழுத்தை அமுக்கிக் கொன்றிருப்பேன்...' என்று புலம்பினாள்.
'அது சரி... உடலை எப்போது எடுத்து போகிறீர்கள்...' என்று கேட்டாள் வினோ.
'உடலை எடுத்துப் போவதா... இவருக்கு செய்ததெல்லாம் தண்டச் செலவு என்று, அவரது மகன்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் தான், ஒட்டியாணம், தங்க காசுக்காக பொறுமையாக இருக்கும்படி சொல்லி வந்தோம். ஈமச்சடங்கு செய்ய, ஒரு காசு கூட செலவு செய்ய முடியாது...' என்றபடி புறப்பட்டனர்.
அவர்கள் சென்றதும், அறையிலிருந்து வெளியே வந்தார் முதியவர்.
'உறவினர்களின் பாசத்தை பார்த்தீர்களா... இனியாவது, நகையையும், தங்க காசுகளையும் பத்திரமாக வைத்து இருங்கள். இனி, இந்தப் பத்திரத்திற்கு அவசியமே இல்லை... பாதுகாப்பாக வாழ வழி தேடுங்கள்...' என்றபடி பத்திரத்தை கிழிக்க முயன்றாள்.
'அதைக் கிழிக்காதே என்னிடம் கொடு... அதையும், இந்த தங்க காசுகளையும் முதியோர் இல்லத்தில் கொடுத்து அங்கேயே தங்கி விடுகிறேன். எனக்கு புத்தி புகட்டிய நீ ரெண்டு தங்கக் காசுகளை வைத்துக் கொள்...' என்று வற்புறுத்தி, வினோவின் கையில், திணித்தார். அவள் கண்கள் கலங்கின.
குழந்தைகளே... தாத்தா, பாட்டியை பரிவு மற்றும் அன்புடன் கவனியுங்கள்.
முற்றும்
