PUBLISHED ON : டிச 21, 2019

தஞ்சாவூர் மாவட்டம், துாய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
சனிக்கிழமை தோறும், ஐந்து பாடவேளை தான் நடக்கும். அதனால், யாரும் மதிய சாப்பாடு எடுத்து வருவதில்லை.
நான், வழக்கத்துக்கு மாறாக, மூன்றடுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்து செல்வேன். அனைவர் கண்ணும், என் மீதே இருக்கும். எங்கே, எப்படி சாப்பிடுகிறேன் என அறிய ஆர்வம் காட்டுவர். இது வேடிக்கையாக இருக்கும்.
மதிய சாப்பாட்டுக்கு, மணி அடித்தவுடன், பள்ளி அருகே ஆலய வளாகத்தில் உள்ள ஆதரவற்றோர் விடுதிக்கு செல்வேன்.
அங்கு, என்னுடன் படித்த மூன்று பேர் தங்கியிருந்தனர். அவர்களுக்கு, பெற்றோர், உறவினர் இல்லை. வீட்டுச் சாப்பாட்டை விரும்பிக்கேட்டதால், ஒரு வருடமாக கொடுத்து வந்தேன்.
தேர்வு முடிந்து, பிரியாவிடை பெற்றோம். அந்த மூன்று பேரும், என் கரம் பற்றி, நன்றி பெருக்குடன் கண்ணீர் வடித்தனர். மனம் நெகிழ்ந்தேன்.
எனக்கு, 55 வயதாகிறது. சனிக்கிழமை என்றால், அந்த மாணவியர் நினைவு வந்து விடுகிறது. உணவின் அருமையை உணர்ந்த நாட்கள் அவை. இன்றும், சிறு துணுக்கு உணவையும் வீணாக்குவதில்லை.
- இந்திராணி தங்கவேல், சென்னை.
