PUBLISHED ON : நவ 11, 2023

மந்திரபுரி நாட்டை மன்னர் நன்மாறன் ஆண்டு வந்தார். அமைச்சர்களை அழைத்து, 'பக்கத்து நாட்டு மன்னர்கள் அனைவரும் பகைவர்களாக உள்ளனர்; அவர்களை அழிக்க ஏதேனும் வழி உள்ளதா...' என்று கேட்டார்.
சிந்தித்தவாறே, 'அனைவரும் வலிமை வாய்ந்தவர்கள்; அவர்களை அழிக்க இயலாது...' என்றார் ஒரு அமைச்சர்.
அதை ஒப்புக்கொள்வது போல, அவை அமைதியாக இருந்தது.
'ம்... அந்த நாட்டை அழிக்க, உங்களுக்கு வழி தெரியவில்லை; நானே வழி கண்டுபிடிக்கிறேன்...' என்றார் மன்னர்.
சில நாட்களுக்குப் பின் -
மந்திரபுரி நாட்டு துாதர்கள் பக்கத்து நாடுகளுக்குச் சென்றனர்; அந்தந்த நாட்டு மன்னர்களை வணங்கினர்.
மன்னர் நன்மாறன் கொடுத்து அனுப்பிய ஓலையை தந்தனர்.
அதில் -
'மந்திரபுரி நாட்டில் கோடை விழா சீரும் சிறப்புமாக நிகழ உள்ளது; தாங்கள் அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெருமைப்படுத்த வேண்டும்' என்றிருந்தது.
அழைப்பை ஏற்ற மன்னர்கள் மந்திரபுரி நாட்டிற்கு வந்தனர். மிகுந்த ஆரவாரத்துடனும், சிறப்புடனும் வரவேற்றார் மன்னர் நன்மாறன்; பெருமையுடன் நடத்தினார். எந்த குறையும் ஏற்படாமல் கவனித்தார்.
'பகை மன்னர்களை எல்லாம் ஒன்றாக வரவழைத்து இருக்கிறாரே... சூழ்ச்சி செய்து, அவர்களை கொல்லப் போகிறாரே... இதனால், நாட்டிற்கு பெரும் பழி ஏற்படும்' என்ற கலக்கத்தில் இருந்தனர் அமைச்சர்கள்.
கோடை விழா இனிதே முடிந்தது.
விருந்தினர்களாக வந்திருந்த அண்டை நாட்டு மன்னர்கள் புறப்பட தயாராயினர். ஒவ்வொருவரையும், தனித்தனியே சந்தித்தார் நன்மாறன்.
'உங்கள் வருகையால், எங்கள் நாடே பெருமை பெற்றது; உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உதவி ஏதேனும் தேவையானால் தயங்காமல் கேளுங்கள்...' என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
விலை உயர்ந்த பொருட்களை அன்பளிப்பாக தந்து அன்புடன் கட்டி தழுவி வழியனுப்பி வைத்தார்.
அண்டை நாட்டு மன்னர்கள் மகிழ்ச்சியாகப் புறப்பட்டனர்.
அன்று அரியணையில் அமர்ந்து இருந்தார் நன்மாறன்.
'மன்னா... பகைவர்களை எல்லாம் அழிக்கப் போவதாக கூறினீர்; அது முடியாது என்று நாங்கள் கூறினோம். நாங்கள் கூறியது போல தானே நடந்தது...' என்றார் அமைச்சர்.
'இல்லை... கூறியது போல, பகை மன்னர்களை எல்லாம் அழித்து விட்டேனே...' என்றார் நன்மாறன்.
'எல்லாரையும் சிறப்பாக கவனித்து வழி அனுப்பி வைத்தீர்; அவர்களை அழித்து விட்டதாக சொல்கிறீர்... ஒன்றும் புரியவில்லையே...'
'அமைச்சரே... பகை மன்னர்கள் இங்கே வந்து தங்கினர்; அவர்கள் மீது அன்பு மழை பொழிந்தேன்; நம் மீதான பகையை உள்ளத்தில் இருந்து நீக்கி விட்டேன்; அவர்கள் இனி நமக்குப் பகைவர்கள் இல்லை அல்லவா...
'அன்பினால், நண்பர்களாக்கி விட்டேன்; இப்போது கூறுங்கள்; பகைவர்களை அழித்து விட்டேனா... இல்லையா...' என்றார்.
'உண்மை தான்... அன்பால் பகைமையை அழித்து விட்டீர்...' என்றது அரசவை.
குழந்தைகளே... அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
- கு.பிருந்தா
