
முன்கதை: வரலாறு பாடத்தில் தெளிவு ஏற்படுத்த, மாணவ, மாணவியரை தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா அழைத்து சென்றார், சரித்திர ஆசிரியர். அங்கு, மன்னர்கள் பயன்படுத்திய சுரங்கப்பாதையை தேடினாள் மாணவி கீதா. இனி -
'இதோ சுரங்கப்பாதை... இது தான் ராஜராஜ சோழன் அமைத்தது...'
உற்சாகத்தில் அதன் அருகில் சென்றாள் கீதா.
மீண்டும் சுகந்தமாக வீசியது காற்று. மனம் மயங்கியது.
'அரண்மனைக்கு அழைத்துச் செல்லும் வழிதான் இந்த சுரங்கம்; அங்கு, மன்னரின் சிம்மாசனம் இருக்கும். இளவரசி, மகாராணி குளிப்பதற்கு தடாகமும் இருக்கும். ஆஹா... வழி தெரிந்து விட்டது' என எண்ணியபடி, ஆர்வ மேலீட்டால் உற்று நோக்கினாள்.
அப்போது, 'நான் இங்கு இருக்கிறேன் வா...' என சிறுமியின் குரல் அழைத்தது.
ஒன்றும் புரியாமல், ''யார் நீ...'' என அங்கும் இங்கும் பார்த்தாள் கீதா.
'உள்ளே வந்தால், என்னை தெரியும்...' என்றது அந்த குரல்.
''எங்கு இருக்கிறாய்...''
அவசரமாகக் கேட்டாள் கீதா.
'சுரங்கப் பாதைக்குள் நன்றாக பார்...'
உற்று பார்த்தபடி, 'ஆஹா அற்புதம்... என் எண்ணம் நிறைவேறப்போகிறது! ராஜராஜனின் அழகிய சிம்மாசனம், அரண்மனை, அழகிய நந்தவனத்தை பார்க்கலாம். ராஜராஜனின் மனைவி மகாராணியார் வானமா தேவியாரும், மன்னரின் சகோதரி குந்தவை நாச்சியாரும் குளித்த அழகிய தடாகத்தையும் பார்க்கலாம். ஆனால், எப்படி உள்ளே போவேன். சுரங்க வழி மூடியிருக்கிறதே' என, ஏக்க பெருமூச்சு விட்டாள் கீதா.
'இதோ நீயும் வரலாம்; அதற்கு ஏற்பாடு செய்கிறேன்...'
குரல் மட்டும் சுரங்கத்தில் இருந்து கேட்டது.
கல்வி சுற்றுலா வந்ததை சுத்தமாக மறந்திருந்தாள் கீதா.
இப்போது, சுகந்த காற்று மீண்டும் பலமாக வீசியது.
அப்போது, அந்த அதிசயம் நிகழ்ந்தது.
சுரங்கப்பாதை திடீரென திறந்தது. அதற்குள், ஆர்வத்துடன் பிரவேசித்தாள் கீதா.
தொடர்ந்து, வந்த குகனும் அதற்குள் செல்ல முயன்றான். ஆனால், கதவு மூடிக்கொண்டது. பலமுறை தட்டியும் திறக்க முடியாததால், பெரும் குரல் கொடுத்தான் குகன்.
உஹும்... எந்த பயனும் இல்லை.
உடனே, ஆசிரியரிடம் விஷயத்தை தெரிவிக்க ஓடினான்.
சுரங்கப்பாதைக்குள் சென்ற கீதாவின் கையை பிடித்தாள், சிறுமி. மிக அழகாக காட்சியளித்தாள். அவளை, 'சிகப்பழகி' என அழைக்க தோன்றியது.
மென்மையாக கரங்களைப் பற்றி சுரங்கத்தில் அழைத்து சென்றாள் சிகப்பழகி.
''ஆஹா... உன் அழகு மயக்குகிறதே... நீ, இந்த நாட்டு பெண்ணாக இருக்க முடியாது...''
மயக்கத்துடன் கூறினாள், கீதா.
தலையசைத்து சிரித்தாள் சிகப்பழகி.
''அப்படி என்றால்...'' இழுத்தாள் கீதா.
''அவசரப்படாதே... சகலத்தையும் தெரிந்து கொள்ளலாம். உன் சுற்றுலா எத்தனை நாள்...'' கேட்டாள் அழகிய சிறுமி.
''ம்... ஐந்து நாட்கள். நான், இங்கு எப்படி வந்தேன். உடன் வந்த மாணவ, மாணவியர் எங்கே... சரித்திர சுற்றுலா அல்லவா வந்தேன்... சுரங்கப்பாதையை தேடிய போது சுகந்த மணம் வீசியதே...அதே நறுமணம் உன்னிடமும் உள்ளதே; அப்படியென்றால், என்னை அழைத்தது நீயா...
''பூட்டியிருந்த சுரங்கம் எப்படி திறந்தது... நீ எப்படி உள்ளே வந்தாய்; உன் உருவம் மிக மிக அழகாகவும், மாறுபட்டும் இருக்கிறதே. நீ யார்... மாய சிறுமியா... சொல்... நான் உடனே, வெளியில் போக வேண்டும். ஆசிரியர் எனக்காக காத்திருப்பார். உடன் வந்தவர்கள் என்னை காணாமல் பரிதவிப்பர்...'' என, கவலை தொனிக்க புலம்பினாள் கீதா.
''சற்று அமைதியாக இரு...''
கீதாவின் தலையை மெதுவாக தடவினாள் சிறுமி.
உடனே அமைதியில், ''நீ யார்...'' என மீண்டும் கேட்டாள் கீதா.
''நான், இந்த நாட்டை சேர்ந்தவளும் இல்லை. இந்த கிரகத்தை சேர்ந்தவளும் இல்லை...''
''என்ன சொல்கிறாய் நீ...''
பயத்துடன் கேட்டாள் கீதா.
''பொறுமை... பொறுமை...''
சிகப்பழகி, மீண்டும் தலையை தொடவும் அமைதியாகி, ''எதற்காக இங்கு அழைத்து வந்தாய். நீ சிறுமிகளை உண்ணும் பிரும்ம ராட்சசியா... சொல்...'' என குரலை உயர்த்தினாள் கீதா.
இருண்ட சுரங்கப்பாதையின் நடுவில் அப்போது பெரும் ஒளி வெள்ளம் பாய்ந்தது. சிகப்பழகிதான் அதை உருவாக்கினாள்.
ஆச்சரியத்தால் விரிந்தன கீதாவின் கண்கள்.
திடீரென இரண்டு சிம்மாசனங்கள் தோன்றின.
''இதில் உட்கார்ந்து பேசலாம்...''
ஒன்றில் அமர்ந்தாள் சிறுமி.
தயங்கியபடி, ''இந்த சிம்மாசனம் எப்படி வந்தது...'' என, அச்சம் கலந்து கேட்டாள் கீதா.
''நீ தானே மன்னன் ராஜராஜன் சிம்மாசனம் பார்க்க விரும்பினாய்... மகாராணி வானமா தேவியார் மற்றும் ராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் நீராடிய அழகிய தடாகத்தையும் காண விரும்புகிறாய் அல்லவா...''
இதைக் கேட்டதும், அதிர்ந்து விட்டாள் கீதா.
'என் மனதில் உள்ளது இவளுக்கு எப்படி தெரியும்' குழப்பத்துடன் பார்த்தாள் கீதா.
- தொடரும்...
ஜி.சுப்பிரமணியன்

