
சென்னை, பல்லாவரம், மறைமலை அடிகளார் பள்ளியில், 1967ல், 4ம் வகுப்பில் படித்தபோது, மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த நண்பன் உடன் படித்தான். அவன் தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி.
ஓட்டல் நடத்தி வந்தார் என் தந்தை. பள்ளி செல்லும் போது, செலவுக்காக, 1 ரூபாய் கொடுப்பார்; அந்த காலத்தில் அதன் மதிப்பு அதிகம். அதில், 50 காசுக்கு மிட்டாய் வாங்குவேன். மீதியிருக்கும் காசை நண்பனுக்கு தருவேன். அதை சேமித்து புத்தகம், நோட்டுகள் வாங்குவான். மிகவும் சிக்கனமாக செயல்படுவான்.
கேட்டால், 'பெற்றோரை சிரமப்படுத்தாமல் படிக்க வேண்டும். பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது...' என்பான். அதன் மூலம் வறுமையில் வாடுவோருக்கு உள்ள சிரமங்களை தெரிந்து கொண்டேன்.
நன்றாக படித்து முடித்து, அதே பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தான் அந்த நண்பன். ஒருமுறை சந்தித்தபோது, 'நீ காட்டிய கருணையால் தான், இந்த நிலைக்கு வந்துள்ளேன்... ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு முடிந்தளவு உதவிகள் செய்து வருகிறேன்...' என, கரங்களை பற்றிக்கொண்டான். எனக்கு புல்லரித்தது.
தற்போது, என் வயது, 65; நான் படித்த பள்ளிக்கு, மேஜை, நாற்காலி, மின்விசிறிகளை நன்கொடையாக வழங்கி மகிழ்வுடன் வாழ்கிறேன்.
- எம்.பாஸ்கரன், மதுரை

