
முன்கதை: கல்வி சுற்றுலாவுக்கு தஞ்சை பெரியகோவில் வந்தாள் மாணவி கீதா. செவ்வாய் கிரக சிகப்பழகி, சுரங்க பாதைக்குள் அவளை அழைத்து கடத்த முயன்றாள். பின் தொடர்ந்த மாணவன் குகனிடம் செவ்வாய் கிரகத்தில் நடந்த நிகழ்வை விவரித்து உதவ முன்வந்தாள், சின்னசிட்டு. இனி -
செவ்வாய் கிரக விவகாரங்களை மாணவன் குகனிடம் விவரித்துக் கொண்டிருந்தாள், சின்னசிட்டு.
'எங்கள் கிரகத்தின் வழக்கப்படி தலைவராக நான் பதவி ஏற்றேன். பின், ஆளும் உரிமை மற்றும் பொறுப்புகளை புதபகவானிடம் கொடுப்பதாக அறிவித்தேன். கிரக வாசிகள் அதை வரவேற்றனர்; ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
'புதபகவான் பொறுப்புகளை ஏற்றார்... செவ்வாய் நாதர் அடுத்த மாளிகைக்குள் பிரவேசிக்கும் முன், எனக்கு அற்புத சக்திகள் கொடுத்து வாழ்த்தினார்...
'புதபகவான் அனைத்தையும் புரிந்து கொண்டார்; அவர் ஆசியும் எனக்கு கிடைத்தது. எல்லாவற்றையும் உன்னிடம் கூறி விட்டேன். உடனே, சிறுமி கீதாவை காப்பாற்ற வேண்டும்...
'பூமியில் இன்னும் பலரை கடத்த உள்ளாள் சிகப்பழகி. எனவே, உடனே கீதாவை காப்பாற்று. என்ன தான், நான் சக்தி பெற்றவளாக இருந்தாலும், பூமியில் உங்கள் பலமே அதிகமாக இருக்கும்...' என்றாள் சின்னசிட்டு.
பதறிப் போனான் குகன். அவள் கூறியதை முழுதும் புரிந்து கொண்டான்.
''அழகிய சிறுமியே... இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பலமில்லை என்றால், கீதா தன் முயற்சியால் தப்ப முடியாதா...'' என்று கேட்டான் குகன்.
'நல்ல கேள்வி... நாங்கள் நேர்மையானவர்கள்; உங்கள் கிரகத்துக்குள் நுழையும் போது, பூமியின் சக்திக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது தான் எங்கள் தலைவரின் கட்டளை.
'அந்தந்த கிரகத்துக்கு செல்லும் போது, அந்த கிரக தலைவருக்கு, தலை வணங்கி, கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதனால், என் சக்தியை முழுதும் இங்கு காட்ட மாட்டேன். ஆனால், தீயாள் மந்திரவாதியின் எடுபிடி. மந்திரவாதிக்கு சுயநலம் தான் முக்கியமே தவிர, அடுத்த கிரகத்துக்கு மரியாதை தருவதல்ல...
'அதனால், அவன் யாருக்கும் பணிய மாட்டான்; எனவே, தீயாளிடம் முழு சக்தி இருக்கும். அவள் எளிதாக கீதாவை மடக்கி, மந்திர கிரகத்துக்கு அழைத்து சென்று விட வாய்ப்பு உள்ளது. அதற்காக கவலைப்படுகிறேன்...' என்றாள் சின்னசிட்டு.
''கீதாவை இழக்க முடியாது. உடனே காப்பாற்ற வேண்டும்; இப்போது, என்ன செய்யலாம்...''
ஆவேசத்துடன் கேட்டான் குகன்.
'முதலில், சுரங்கப் பாதையினுள் பிரவேசிக்க வேண்டும். கீதாவை இழுத்துச் செல்லும், அந்த சிகப்பழகி தீயாளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இது மிகவும் கடினமான செயல். ஆனால், அது உன்னால் நிச்சயம் முடியும். பின், ஒவ்வொன்றாக முடிவெடுக்கலாம்...' என்றாள் சின்ன சிட்டு.
வேண்டாம் என்பது போல தலையசைத்தான் குகன்.
'ஏன்... என்னாச்சு...' என்றாள் சின்ன சிட்டு.
''என்னை காணாமல் ஆசிரியர் பதறி போவாரே... எங்கள் இன்ப சுற்றுலா, துக்கம் நிறைந்ததாக மாறி விடுமே என, பயமாக உள்ளது...''
'கவலையை விடு... அதற்கு மாற்று ஏற்பாடு செய்கிறேன்...' என்ற சின்னசிட்டு, கைகளை மாறி மாறி சுழற்றி வீசினாள்.
அப்போது, குகனின் நிழல் வேகமாக சென்றது. ஆசிரியர் நம்பெருமாள் அருகே நின்றது.
இப்போது, அந்த அதிசயத்தை குகனே பார்த்தான்.
ஆம்... அந்த நிழல் நிஜமாகி, குகனாகவே நின்றது.
''ஓ... கிரேட்... மாற்று கீதாவுக்கு ஒரு மாற்று குகன். சின்னசிட்டுவே... உன் சக்தி ஆச்சரியமாக இருக்கிறது. அது சரி... பூமியில் தான் மக்கள் அடித்துக் கொள்கின்றனர் என்றால், அது உங்கள் கிரகத்திலுமா நடக்கிறது... நம்ப முடியவில்லையே...'' என்றான் குகன்.
'இறைவன் படைப்பில் அனைத்தும் சமமே... நல்லவையும் இருக்கும்; தீயவையும் இருக்கும். தீயவற்றை அழிக்கும் சக்தியையும், இறைவன் கொடுத்திருப்பது தான் படைப்பின் ரகசியம்... பேசி காலத்தை வீணாக்க வேண்டாம்; உடனே, கீதாவை காப்பாற்றும் வழியை தேடுவோம்...' என்றபடி சுரங்கப்பாதை அருகில் வந்தாள் சின்னசிட்டு.
சுரங்கக் கதவு தானாக திறந்தது. இருவரும் பிரவேசித்தனர்.
அப்போது சுரங்கத்தில் தீயாளுடன் பேசிக்கொண்டிருந்தாள் கீதா.
''ஆ... என்ன நறுமணம்... என்ன சுகந்த வாசம்; உள்ளத்தை கொள்ளை கொள்ளுதே... என் அருமை சிகப்பழகியே... உன்னிடம் கூட இப்படி ஒரு சுகந்த வாசம் வீசவில்லையே. இது என்ன... எங்கிருந்து வருகிறது...''
ஆர்வம் மற்றும் படபடப்புடன் கேட்டாள் கீதா.
'மாபெரும் மன்னர் ராஜராஜ சோழன் என்றால் சும்மாவா... அப்படி இருக்க, அவர் அமைத்த நந்தவனம் வாசம் வீசாமல் இருக்குமா...'
சிகப்பழகி கூறவும், அதிர்ந்து போனாள் கீதா.
''அப்படியென்றால்...'' என்று இழுத்த கீதாவின் கண்கள், ஆச்சரியத்துடன் விரிந்தன.
'இதில், ஒளிவு மறைவு என்ன இருக்கிறது கீதா. ராஜராஜன் அரண்மனை நந்தவனத்தை அடைய இருக்கிறோம். அதை பார்த்தால், நீ எப்படி ஆகிவிடுவாயோ என்று அஞ்சுகிறேன்...' என்றாள் சிகப்பழகி.
கீதாவின் ஆர்வம் மேலோங்கியது.
- தொடரும்...
ஜி.சுப்பிரமணியன்

