PUBLISHED ON : மார் 31, 2017

அழகர்புரம் என்னும் ஊரில், பெருஞ்செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரண்மனை போன்ற பெரிய மாளிகை ஒன்று இருந்தது. அந்த மாளிகை யின் அறைகள் எல்லாம், விலை உயர்ந்த சலவைக் கற்கள் பதிக்கப் பட்டு, தரை எங்கும் கம்பள விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தன. காணும் இடமெங்கும் செல்வச் செழிப்பு வெளிப்பட்டது.
அவன் கருவூலத்தில் விலை உயர்ந்த பொன்னும், மணியும், முத்தும் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அவ்வளவு செல்வமும் அவனுக்கு நேர்மையான வழியில் வரவில்லை. ஏழைகளை கசக்கிப் பிழிந்து, அவர்களுக்கு போதுமான ஊதியம் தராமல் சேர்த்த செல்வம் அது.
அவன் மாளிகை வாசலில், கடைக்கோடி ஓரமாக ஒரு ஏழைப் பிச்சைக்காரன் அமர்ந்திருந்தான். அவன் உடலெங்கும் சொறி, சிரங்கு நிறைந்திருந்தது. சொறிந்து, சொறிந்து அவன் உடலெங்கும் சீழ் வடிந்து கொண்டிருந்தது. எழுந்து நடமாட முடியாமல் அங்கேயே விழுந்து கிடந்தான்.
செல்வந்தனின் மாளிகையி லிருந்து எச்சில் இலைகள் அவன் அருகில் விழும். அதில் உள்ளதை அவன் உண்பான். பல நாட்கள் அவனுக்கு முன் தெரு நாய்கள் எச்சில் இலைகளில் உள்ளதை உண்டு விடும். இதனால், அவன் அரைப் பட்டினி, முழுப் பட்டினியாக பல நாட்கள் இருந்திருக்கிறான்.
அவன் பசி, பட்டினியால் துடிக்கும் பல நாட்களில், அந்த மாளிகையில் விருந்தும், கேளிக்கையும் அமர்க்களப்படும். ஆனால், ஒருநாளும் அந்த பணக்காரன் தன், வீட்டு முன் அமர்ந்திருக்கும் ஏழை பிச்சைக்காரன் மீது இரக்கம் காட்டியதே இல்லை. கந்தல் ஆடை அணிந்திருந்த பிச்சைக்காரன், பட்டினியால் வாடி, குளிருக்கு நடுங்கி, ஒருநாள் இறந்துபோனான்.
அவன் உடலை அடக்கம் செய்ய யாரும் இல்லை. நாயைப் போல அவன் உடலை தூக்கிச் சென்று, வேலைக்காரர்கள் அடக்கம் செய்தனர். ஆனால், தேவ தூதர்கள், அவன் உயிரைச் சொர்க்கத்தில் சேர்த்தனர். அங்கே அவன் பசி, தாகம் ஏதுமின்றி எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தான். இனிய இன்னிசையைக் கேட்டபடி மகிழ்ச்சியாக இருந்தான்.
சில நாட்களுக்குப் பின், அந்த பெருஞ் செல்வந்தனும் இறந்தான். அலங்கரிக்கப்பட்ட பெரிய பல்லக்கில், அவன் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அவன் உடலில் மலர்களை தூவி பலவகையாகப் புகழ்ந்து அடக்கம் செய்தனர். சலவைக் கற்களால் அங்கே கல்லறை அமைத்தனர். ஆனால், அவன் உயிரை எம தூதர்கள், நரகத்தில் கொண்டு சேர்ந்தனர்.
அங்கே அவனை தீயில் போட்டு வாட்டி எடுத்தனர். அவனைச் சூழ்ந்து எப்போதும் பாம்பும், தேளும் நடமாடின. 'ஐயோ! ஐயோ!' என்ற அவனுடைய வேதனைக் குரல் கேட்டபடியே இருந்தது.
தாகத்தால் துடித்த அவனுக்கு, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. பூவுலகில் தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து, அவன் கண்ணீர் கடலில் மூழ்கினான்.
தன் கண்களால் வானுலகத்தை பார்த்தான். தன் மாளிகையின் வெளியே புழுவிலும் கீழாக மதிக்கப்பட்ட பிச்சைக் காரன், அங்கே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்தான்.
“இறைவனே! எரியும் நெருப்பில் சிக்கித் துன்பப்படுகிறேன். தண்ணீர் தாகம் தாங்க முடியவில்லை. நீர் என் மீது இரக்கப்பட்டு, பிச்சைக்காரனின் விரல் நுனியில் தண்ணீரைத் தோய்த்து இங்கே அனுப்பு. அந்தத் தண்ணீரைப் பருகினால் என் வேதனையில் சிறிதளவு குறையும்,” என்று மன்றாடினான்.
“நீ பூவுலகில் உயிரோடு இருந்த போது, அங்கே இன்பங்களை எல்லாம் சொர்க்கம் போன்று அனுபவித்தாய். ஆனால், ஏழை பிச்சைக்காரனோ துன்பங்களை தான் அனுபவித்தான். அவனுக்கு நீ சிறிதும் உதவி செய்யவில்லை. இப்போது அவன் பட்ட அந்தத் துன்பங்களுக்கு, ஆறுதல் பெறுகிறான். நீ அந்த இன்பங்களுக்கு வேதனைப்படுகிறாய். இதுதான் நீதி. இதில் எந்த மாற்றத்திற்கும் வழியில்லை,” என்றார் இறைவன்.
தான் பூலோகத்தில் இருக்கும் போது, யாருக்கும் நல்லது செய்யாமல், தான் மட்டுமே சுகபோக வாழ்வு வாழ்ந்தோம். அதனால் தனக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினான் பெருஞ்செல்வன்.
