தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (53)

இளஸ்... மனஸ்... (53)

இளஸ்... மனஸ்... (53)


PUBLISHED ON : மார் 31, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரி ஜெனிபருக்கு, வணக்கம்!

சிறுவர்மலர் இதழின் நீண்ட நாள் வாசகன். தற்போது தங்களது, இளஸ்... மனஸ் பகுதியின் தீவிர வாசகன். இந்தப் பகுதியை புத்தகமாக வெளியிட்டு, ஒவ்வொரு பள்ளி, கல்லுாரி, மாணவர்களும் படிக்கும்படி செய்யுங்கள் சகோதரி.

நம்முடைய இளைய தலைமுறையினர் சரியான வழிகாட்டி இல்லாமல், தவறான பாதையில் செல்கின்றனர். அவர்களுக்கு, நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் சென்று சேர்ந்தால், இந்த பதின்ம பருவத்தினர், நம்முடைய நாட்டிற்கு மிகுந்த ஆக்கப்பூர்வமான சக்தியாக விளங்குவர் என்பது என் எண்ணம்.

நான், சென்னையில் உள்ள மாநகரப் பேருந்தில், நடத்துனராக உள்ளேன். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குறிப்பாக, எட்டாவது படிக்கும் மாணவர்களில் இருந்து, 'புட் போர்ட்டில்' நின்று தொங்கியபடி, ஆபத்தான பயணம் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஆனால், இவர்களை காணும் போதெல்லாம் என் மனம் பதைபதைக்கும். இவர்களை கண்டித்தால் கோபப்படுவர்; அடங்க மாட்டார்கள். இன்னும் நம்மை வெறுப்பேத்துவது போல், கானா பாடல்களை பாடுவதும், சத்தமிடுவதுமாக இருப்பர். பெற்றோர், இவர்களை கண்டித்து அனுப்புவது இல்லை... ரொம்ப கோபப்பட்டு திட்டினால், அந்த ரூட்டில் அடுத்த நாள், நாங்கள் பயணம் செய்ய முடியாது.

சகோதரி, நீங்கள் இவர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுங்கள். அதைப் படிக்கும் ஒரு சில மாணவர்களாவது திருந்தினால், அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதுவேன்.

வணக்கம் சகோதரா! தங்கள் கருத்து மிக மிக உண்மை. இந்த காட்சிகளை நானும் பார்த்திருக்கிறேன்; அனுபவித்தும் இருக்கிறேன். பிள்ளைகள் பஸ்சில் பள்ளி, கல்லுாரிக்கு செல்கின்றனர் என்றால், அவர்கள் பஸ்சில் எப்படி செல்கின்றனர்; அவர்களது நடத்தை எப்படி உள்ளது என்பதை, பெற்றோர் மறைவாக பயணித்து கவனிக்க வேண்டும். அப்போது தான் அவர்களது வண்டவாளம் என்ன என்பது தெரியும். பெற்றோர்கள் தான், பிள்ளைகளை அடக்க வேண்டும்.

பதின்ம பருவத்தில் ஹார்மோன் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால், இவர்களது உணர்வுகள், கோபங்கள், எல்லாமே அதிகமாக இருக்கும். இவர்களை நல்வழிப்படுத்துவது நம் கடமை.

இந்த அட்வைஸ் பதின்ம பருவ மாணவர்கள் மற்றும் கல்லுாரி காளைகளுக்கு...

இந்த வயதில், 'புட்போர்ட்' அடிச்சி, 'ரிஸ்க்' எடுப்பது, 'ரஸ்க்' சாப்பிடுவது போல என்று சினிமா நடிகர் வசனம் பேசுவதை கேட்டு, நீங்களும் பேசுவது, கேட்பதற்கு என்னவோ ரொம்ப நல்லா இருக்கும். ஆனால், சினிமா நடிகர்களை, 'ரிஸ்க்' எடுக்க சொல்லுங்க. எடுக்க மாட்டார்கள். 'ரிஸ்க்' ஆன காட்சிகளில், 'டூப்' போட்டு தான் நடிப்பர். ஆனால், அவர்கள் பேசும் வசனங்களை கேட்டு, சண்டை போட்டு, பஸ்சில் தொங்கி சாகசம் செய்து நீங்கள் தான் ஏமாந்து போகிறீர்கள்.

உங்கள் பெற்றோர், உயிரை கொடுத்து உங்களை பெற்றெடுத்து வளர்க்கின்றனர்... அந்த உயிரை மதிக்க தெரிய வேண்டும். சும்மா பஸ் டயரில் அடிபட்டு, உடல் சின்னா பின்னமாகி சாவதற்கா உங்களை பெற்றார்கள்... ஒரு நிமிடம் யோசியுங்கள்.

எனக்கு தெரிந்த நபரின் மகன், இப்படித்தான், 'புட்போர்ட்' அடித்து கீழே விழுந்து கால் நசுங்கி போய், இன்று இடுப்புக்கும் கீழே செயல்படாத நிலையில், 'வீல்' சேரில் இருக்கிறான். தினம், தினம் கண்ணீரே வாழ்க்கையாகி விட்டது. அவனுடன் படித்த மாணவர்கள் எல்லாம், 'பைக்'கில் ஆபீஸ்க்கு பறக்கும்போது, இவன் தன் நிலையை எண்ணி வேதனைபடுகிறான். இந்த நிலை உங்களுக்கு தேவையா...

உங்களை ஒருவர் புகழ்ந்து விட்டால்... அப்படியே அவர்களை தூக்கி கொண்டு ஆடுவது, உங்கள் நலனில் அக்கறை கொண்டு, உங்களை கண்டித்தால், அவர்களை பரம எதிரியாக நினைப்பது இவையெல்லாம் உங்கள் முன்னேற்றத்தை தடை செய்யும் மாணவர்களே... நடத்துனர்களும் மனிதர்கள் தான்... அவர்கள் இடத்தில் நீங்கள் இருந்து பாருங்கள். அப்போது அவர்களது கஷ்டம் என்னவென்று உங்களுக்கு புரியும்.

இளைஞர்களே... இந்தப் பருவத்தில் தான் உங்களது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த முடியும். உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொணர்ந்து, ஆக்கப்பூர்வமான காரியங்களில் நீங்கள் ஈடுபட வேண்டிய பருவம் இது. அதன்பின், நோய், நொடிகள், முதுமை என கவலை தோய்ந்த பருவத்தில், உங்களால் எதுவுமே செய்ய முடியாது.

சமீபத்தில், நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்த நபரிடம், 'எப்படி உங்களால் இவ்வளவு தூரம் தாண்ட முடிந்தது... உங்களுக்குள் இருக்கும் இந்த சக்தியை, உங்களுக்கு புரிய வைத்தது யார்...' என்று கேட்டனர்.

'எனக்குள் இருக்கும் சக்தியை, எனக்கு புரிய வைத்தது தெரு நாய்கள் தான்' என்றார்.

'என்ன தெருநாய்களா...' என ஆச்சர்யத்துடன் கேட்டனர்.

'எங்கள் தெருவில் உள்ள சாக்கடையை தாண்ட, அதன் மீது நடந்து செல்ல ஒரு பெரிய கல்லை வைத்திருப்பர். அந்த கல்லு மேல பத்திரமாக கால வச்சி நடக்கணும்.

'ஒருநாள், இரவு கடைக்கு போயிட்டு, நடந்து வந்தேன். என்னை தெரு நாய்கள் துரத்தின. உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிய நான், என்னை அறியாமலேயே, உயிர் பயத்தில் ஒரே ஜம்பில், கல்லின் மீது காலை வைக்காமல், அப்படியே தாண்டி விட்டேன். பின், காலையில் நான் தாண்டிய தூரத்தை அளந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேன்... ஆசிரியரிடம் காட்டினேன். அன்று தான் எனக்குள் இருந்த இந்த திறமையை நான் அறிந்து கொண்டேன்' என்றார்.

அதே போல, உங்கள் ஒவ்வொருவருக் குள்ளும், பல திறமைகளை இறைவன் கொடுத்துள்ளார். திறமை என்பது இல்லாமல், எந்த மனிதரும் படைக்கப்படுவதில்லை. அது என்ன என்பதை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்து, நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேருங்கள். உங்களது உயிர், இந்த நாட்டிற்கும் முக்கியம். 'ஸோ நோ புட் மோர் போர்ட்!' ஓ.கே., போலாம் ரைட்.

உங்கள் நலனில் அக்கறை கொள்ளும்,

ஜெனிபர் பிரேம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us