PUBLISHED ON : செப் 21, 2018

சென்றவாரம்: வயலில் காவல் இருந்த போது, மேய வந்த குதிரையை, பிடித்தான் கதிர். அது, அவனிடம் மன்னிப்பு கேட்டு, உதவுவதாக கூறியது. இனி -
கதிர், வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், அவனது மூத்த சகோதரர்கள், 'முட்டாளே... கோதுமை வயலில் திருடன் புகுந்ததை கண்டாயா அல்லது குறட்டை விட்டு துாங்கினாயா...' என்று கிண்டல் செய்தனர்.
''திருடனை பிடித்தேன்; அது ஒரு குதிரை; நம் கோதுமை பயிருக்கு இனி சேதம் விளைவிப்பதில்லை என்று வாக்குறுதி அளித்தது. அதனால், விட்டு வந்து விட்டேன்...'' என்றான் கதிர்.
இதைக் கேட்ட சகோதரர்கள், ஏளனமாக சிரித்தனர்.
'துாங்கு மூஞ்சி... கனவு கண்டிருப்பான்; ஆனாலும், இப்படி ஒரு பொய்யை நாங்க இதுவரை கேட்டதேயில்லை...' என, கேலி செய்தனர்.
ஆனால், அன்று இரவுக்குப் பின், கோதுமை வயலில் சேதம் ஏற்படவில்லை. இந்த விஷயம் தெரிந்தும், இளைய சகோதரனை, முட்டாளாகவே கருதினர், மூத்த சகோதரர்கள்.
ஒரு நாள் -
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் துாதர்கள், முரசு கொட்டியபடி, 'அரசர், ஒரு விழா ஏற்பாடு செய்துள்ளார்... மூன்று நாள் நடக்கும் விழாவின் போது, குதிரையில் ஏறி, இளவரசியை சந்தித்து மோதிரத்தைப் பெற்று வருபவருக்கு, அவளைத் திருமணம் செய்து கொடுப்பார்...' என்று அறிவித்தனர்.
கதிரின் சகோதரர்கள் விழாவில் பங்கேற்க ஆயத்தமாயினர். இளவரசியை கைப்பிடிக்கும் போட்டியில் பங்கேற்பது அவர்கள் நோக்கம் அல்ல; வேடிக்கை பார்க்க விரும்பினர்.
''அண்ணா... விழாவுக்கு நானும் வருகிறேன்...'' என்று கூறிய கதிரை பார்த்து, 'முட்டாளே... அங்கு வந்து என்ன செய்யப் போகிறாய்... எங்க மானத்தையும், மரியாதையையும் கெடுத்துடாதே. பேசாம படுத்து துாங்கு...' என்று கேலி செய்து புறப்பட்டனர், அண்ணன்கள்.
அவர்கள் சென்றதும், காளான் பறிக்கப் போவதாக, வீட்டில் ஒரு கூடையை வாங்கிய கதிர், கிராம எல்லையை அடைந்தான். கூடையை துாக்கி எறிந்தான்.
''தவிட்டு குதிரையே... வெள்ளைப் புரவியே... என் விருப்பத்தை நிறைவேற்று...'' என்று கூவினான்.
உடனே, பூமி அதிர்ந்தது. அடுத்த கணம், அங்கு தோன்றிய மாயக்குதிரை, ''நல்லது கதிர்... என் வலக் காதுக்குள் நுழைந்து, இடது காது வழியாக வெளியே வா...'' என்று கூறியது.
அப்படியே வந்தான். இதுவரை, உலகம் கண்டிராத, அழகனாக காட்சியளித்தான். பின், அரசர் ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கு, அந்த குதிரையில் ஏறிச் சென்றான்.
அரண்மனைச் சதுக்கத்தில், கூட்டமாக இருந்தது. இளவரசி அழகே உருவாக, அறையில், ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாள்; அவளை, யாராலும் நெருங்க முடியவில்லை.
ஆனால், குதிக்கால்களால் குதிரையின் விலாவை அழுத்தினான் கதிர். குதிரை காற்றாக பறந்து, இளவரசி அமர்ந்திருந்த ஜன்னல் முன் நின்றது.
அவள் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை, 'சட்'டென்று கழற்றிய கதிர், குதிரையை திருப்பி மறைந்து போனான்.
வீடு திரும்பிய போது, அவன் ஒரு கையில் கந்தல் துணியால் கட்டுப் போடப்பட்டிருந்தது.
'என்னடா இது...' என, சகோதரர்கள் கேட்டனர்.
''ஒன்றுமில்லை; காளான் பறித்த போது ஒரு முள் குத்தி விட்டது...'' என்றான். பின், கணப்பு அடுப்பு மேடையில் படுத்துக் கொண்டான்.
மூன்று நாட்களுக்கு பின் -
'அரசர் விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்; அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்' என்று அறிவித்தனர் துாதர்கள்.
இளவரசியே விருந்து பரிமாறினாள். கந்தல் ஆடையில் பங்கேற்றான் கதிர். அவனிடம் வந்த இளவரசி, ''உங்கள் கையில் போட்டுள்ள கட்டை அவிழுங்கள்...'' என்றாள்.
கட்டை அவிழ்த்தான். விரலில், இளவரசியின் மோதிரம் மினுமினுத்தது. அவனை அழைத்த இளவரசி, தந்தை முன் நிறுத்தி, ''இவர் தான் என் கணவர்...'' என்று அறிமுகப்படுத்தினாள். பின், கதிர் - இளவரசி திருமணம், சீரும், சிறப்பாக நடந்தது.
தம்பியை, முட்டாள் என்று கரித்துக் கொட்டிய அண்ணன்கள், தலை குனிந்தனர்.
- முற்றும்.
