PUBLISHED ON : ஜன 10, 2014

சென்றவாரம்: தன்னுடைய உடையையும், ஷூவையும் ஒளித்து வைத்துவிட்டு காணவில்லை என்று நடித்தாள் மங்காத்தா. இனி-
அப்படித் தூக்கி எறிபவர் யார் என்பது யார் கண்ணுக்கும் தெரியவில்லை. தான் ஒளித்து வைத்த தன் பொருள்கள், தன் மீதே தாக்குதல் நடத்தி, தன்னைப் பழி வாங்கியது மங்காத்தாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தன் மாஜிக் விரைவில் நிறைவேறியது, மந்த்ராவுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
'ஷு' தாக்குதலால், 'கிர்' அடித்துப் போய் உட்கார்ந்திருக்கும் மங்காத்தாவிடம் டீச்சர் எலிசபெத், இடுப்பில் கை வைத்தபடி வந்து நின்று முறைத்தார். மங்காத்தாவின் குணம் அவருக்குத் தெரியும்.
''காணாமல் போன உன் பொருள்களை யார் இப்படி உன் மீது வீசினர். அல்லது ஓடிப்போயிருந்த அவை தானாக உன்னைத் தேடி வந்ததா? சரி... சரி... உடையணிந்து சீக்கிரம் ஸ்டேடியத்துக்கு வா!'' என்று உத்தரவிட்டாள்.
தொங்கிய முகத்துடன் மங்காத்தா உடற்பயிற்சி கூடத்துக்குப் போக தன்னை தயார் படுத்திக் கொள்ளுவதில் ஈடுபட்டாள்.
ஜிம்னாஸ்டிக் கூடத்தில் குழுமியிருந்த மாணவிகளிடம் எலிசபெத் கூறிக் கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு வெள்ளிக் கோப்பை பளபளத்துக் கொண்டிருந்தது.
''இந்த அழகான வெள்ளிக் கோப்பையை பிரபல வேக ஓட்ட வீராங்கனை பி.டி மாலதி நம் பள்ளிக்கு அளித்துள்ளார். ஜிம்னாஸ்டிக்கில் சிறந்து விளங்கும் மாணவிக்கு இதை அளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். உங்களில் சிறந்த ஜிம்னாஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கவே, நாம் இங்கே கூடியிருக்கிறோம். வெள்ளிக் கோப்பையைப் பெறும் அதிர்ஷ்டசாலி யார் என்று பார்க்கலாம்!'' என்றார் எலிசபெத் டீச்சர்.
எல்லாரும் தங்கள் திறமையைக் காட்டுவதற்கு தயாராயினர்.
தொங்கும் ஒரு கயிற்றின் மீது அதை பற்றிக் கொண்டு, அதன் உச்சியை அடைய ஏறிக் கொண்டிருந்தாள் மந்த்ரா.
மாணவிகள் அதைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
''வெல்டன் மந்த்ரா!'' என்று பாராட்டிக் கொண்டிருந்தார் டீச்சர்.
மேஜை மீது வைக்கப்பட்டிருந்த வெள்ளிக் கோப்பையின் அருகே மங்காத்தாவும், வடிவும் நின்று கொண்டிருந்தனர்.
''இந்த வெள்ளிக் கோப்பையை என்னுடைய தாக்கிக் கொள்ளப் போகிறேன்!'' என்றாள் மங்காத்தா.
''எப்படி? உடற் பயிற்சிகளில் முதலாவதாக வந்தா?'' என்று கேட்டாள் வடிவுக்கரசி.
''நீ நினைக்கிறபடியில்லே. இதைக் கடத்தப் போறேன். டவுனிலே எனக்குத் தெரிந்த ஒரு கடைக்காரர் இருக்கார். இதுபோன்ற வெள்ளிப் பொருள்களை வாங்கிக் கொண்டு நிறையப் பணம் தருவார். நாம் ஜாலியாக செலவழிக்கலாம்!'' என்று தன் திட்டத்தை வெளியிட்டாள் மங்காத்தா.
''இதை இங்கிருந்து எப்படிக் கடத்திக் கொண்டு போக முடியும்?'' பயக் குரலில் கேட்டாள் வடிவு.
''எல்லாருடைய கவனமும் அந்த மந்த்ரா, கயிற்றின் மீது ஏறுவதைக் காண்பதிலேயே இருக்கிறது. நம் காரியத்தை முடிக்க சரியான தருணம் இதுதான். வெள்ளிக் கோப்பையை எங்காவது ஒளித்து வைத்து விடலாம். பிறகு என் சாமர்த்தியதைப் பார்!'' என்று கூறியபடி, மங்காத்தா வெள்ளிக்கோப்பையை தாவிக் குதிக்க பயன்படும் கருவியின் மூடியை திறந்து அதனுள் போட்டு மூடினாள். பிறகு...
''டீச்சர்... டீச்சர்... திருடன். திருடன் வெள்ளிக் கோப்பையை எடுத்துக்கிட்டு ஓடறான்!'' என்று கூச்சல் போட்டாள் மங்காத்தா. மாணவிகளும், எலிசபெத் டீச்சரும், ''என்ன... என்ன எங்கே...எங்கே?'' என்று பதறினர்.
''யாரோ ஒரு ஆள் ஓசைபடாமல் உள்ளே புகுந்து வெள்ளிக் கோப்பையை தூக்கிக்கிட்டு ஓடினான் இந்த வழியா!'' என்று கதவின் பக்கம் கை காட்டி நாடகமாடினாள் மங்காத்தா.
ஓடும் திருடனைப் பார்க்க மாணவிகளும், டீச்சரும் பரபரப்புடன் ஜன்னல் பக்கமும், வாசல் கதவு பக்கமும் ஓடினர்.
'திருடன் வந்திருந்தால் அல்லவா தெரிவதற்கு, இல்லாத திருடனைப் பிடிக்க எல்லாரும் ஓடுகின்றனர். வெள்ளிக் கோப்பை என் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறது!' என்று எண்ணி விஷமச் சிரிப்பு சிரித்துக் கொண்டாள் திருடி மங்காத்தா.
இந்தக் களேபரத்தில் மந்த்ரா கயிற்றின் உச்சியில் இருந்தாள். ஊசலாடும் கயிற்றின் உச்சியில் இருக்கும் மந்த்ராவிடம் கிண்டலாகக் கேட்டாள் வடிவு.
''ஏய், மந்த்ரா திருடனை பிடிக்க நீ ஓடலியா? குரங்குக் குட்டியைப் போல, கயிற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கறியே!''
'அவர்களை விட சீக்கிரமா திருடனைப் பிடிக்க என்னால் முடியும். என் மாஜிக்கின் உதவியாலே!' என்று எண்ணிய மந்த்ரா கயிற்றிலிருந்து இறங்கிக் கொண்டே மந்திரத்தை உச்சரிக்கலானாள். திருடன் எங்கிருந்தாலும் அவனைக் கட்டி இழுத்து வரும்படி குட்டிச் சாத்தானுக்கு உத்தரவிட்டாள்.
அடுத்த வினாடி... தொங்கும் கயிற்றின் முனை சொடுக்கியபடி துள்ளியது. மந்த்ரா கயிற்றில் பாதி தூரம்தான் இறங்கி இருந்தாள். மறுபாதிக் கயிற்றின் மறுமுனை 'விர்' என்று சுழன்று மங்காத்தாவின் கால்களைக் சுற்றிக் கொண்டது. ஓ! என்று அலறியபடி மங்காத்தா தடுமாறித் தரையில் விழுந்தாள்.
'நான் திருடனைப் பிடித்து இழுத்து வரும்படி கூறினால், இந்தக் குட்டிச் சாத்தான் மங்காத்தாவின் காலைக் கட்டி கீழே உருட்டி விட்டதே. சே! நான் சொல்வதை சரியாகவே செய்வதில்லை இந்தக் குட்டிச் சாத்தான். தாத்தாவிடம் கூற வேண்டும்' என்று நினைத்தப்படி கீழே குதித்தாள் மந்த்ரா. வெள்ளிக் கோப்பை யைக் கடத்தியது மங்காத்தாதான் என்பது அவளுக்குத் தெரியாதே.
'கயிற்றினால் தன் காலைச் சுற்றி கீழே வீழ்த்தியவள், மந்த்ராதான்' என்று அவள் மீது பாய்ந்தாள் மங்காத்தா.
''ஏய், யார்கிட்டே காட்டறே உன் வேலைத் தனத்தை? உன் கயிற்று ட்ரிக்கை என்கிட்டே காட்டினே ரொட்டி தட்டிடுவேன். ஆமா...!'' என்று மந்த்ராவின் பனியனை கொத்தாக பிடித்து உலுக்கினாள் மங்காத்தா.
''வந்து... வந்து... மங்கா நான் வேணும்னு செய்யல... கீழே இறங்கும் போது கயிறு...'' என்று அவளுடன் மோதலைத் தவிர்த்து சமாதானமாகவே போக விரும்பினாள் மந்த்ரா. அவளிடம் மாட்டிக் கொண்டால் திருடனைப் பிடிக்க முடியாமல் போய் விடும். ஆகவே, சீக்கிரம் அவளிடமிருந்து விடுப்பட்டுப் போக விரும்பினாள்.
மந்த்ரா மாஜிக் வேலை செய்ய, திடீரென்று மாயமாக மறைந்தாள். மங்காத்தாவும், வடிவும் 'படீர்' என்று மோதிக் கொண்டனர். இருவருடைய தலையும் மோதிக் கொண்ட வேகத்தில் வலி தாங்காமல், 'ஐய்..' என்று கத்தினர்.
அதே சமயத்தில், மந்த்ராவும் கூட வீல் என்று குரல் எழுப்பினாள். தாவிக் குதிக்க பயிற்சி பெறும் பெட்டிக்குள்ளிருந்து. அது ஒரு பெட்டி போன்ற கட்டுமானம். மரத்தால் ஆனது. மேலே மெத்தென்ற குஷன் வைத்து தைத்த தோலால் ஆன மூடியும், இரும்புக் கைப்பிடிகளும் இருக்கும். அந்த கைப்பிடியை பற்றிக் கொண்டு இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தாவிக் குதிக்க வேண்டும். அந்தப் பெட்டியை குதிரையின் முதுகாக நினைத்துக் கொண்டு. அந்த 'வால்டிங் ஹார்ஸ்' பெட்டிக்குள்தான் மங்காத்தா வெள்ளிக் கோப்பையை பதுக்கி இருந்தாள். மந்த்ரா உதவிக்கு அழைத்த குட்டிச் சாத்தான் அவளை திருடுபோன பொருளிடமே கொண்டு போய் சேர்த்து விட்டது.
தாவிக் குதித்து ஜிம்னாஸ்டிக் செய்யும் பெட்டிக்குள் போய் விழுந்த மந்த்ரா, தன் அருகே வெள்ளிக் கோப்பை கிடப்பதை கண்டாள். 'உடனே அவளுக்கு உண்மை புரிந்து விட்டது. தன் கயிறு மங்காத்தாவின் காலைச் சுற்றி அவளை, கீழே தள்ளி உருட்டியது ஏன் என்பதும் விளங்கியது. வெள்ளிக் கோப்பை யைத் திருடி இங்கே ஒளித்து வைத்திருக்கிறாள் அந்த மங்காத்தா!' தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்திருக்க முயற்சித்தாள் மந்த்ரா. அதே சமயம் வெளியே-
''எங்கே போன அந்த எலிக்குஞ்சு மந்த்ரா? திடீரென்று மாயமா மறைந்து போயிட்டாளே!'' என்று மந்த்ராவை தேடினாள் வடிவு.
''வெளியே ஓடிப்போயிருப்பா-நம்ம அடிக்கு பயந்து போய். போகட்டும் விடு, நாம் வெள்ளிக் கோப்பையோடு வெளியேறுவோம் வா...'' என்று கூறியபடி தன் தோழி வடிவுடன் வால்டிங் ஹார்சின் அருகே போனாள் மங்காத்தா.
''இதைத்தானே தேடிட்டு இருக்கீங்க?'' என்று கேட்டுக் கொண்டே கையில் வெள்ளிக் கோப்பையுடன் வெளிப்பட்டாள் மந்த்ரா.
'தாவிக்குதிக்கப் பயிற்சி பெறும் பெட்டியின் மூடி தானாகத் திறந்து கொள்ள, அதிலிருந்து எழுந்து நிற்கும் மந்த்ராவையும், வெள்ளிக் கோப்பையையும் கண்டால் எப்படி இருக்கும் திருடி மங்காத்தாவுக்கு?'
'இவள் எப்படி? அந்தப் பெட்டிக்குள் எப்படி போனாள்?' என்று திகைத்தாலும் உடனே அதை உதறிவிட்டு, வெள்ளிக் கோப்பையை மந்த்ராவின் கையிலிருந்து பிடுங்க முயற்சித்தாள் மங்காத்தா.
- மாஜிக் தொடரும்.
