PUBLISHED ON : ஜன 10, 2014

வெளியூரில் இருந்து மாடு ஒன்றை வாங்கி வந்திருந்தான் உழவன். அந்த மாட்டின் பெயர் புதுப்பேய். அதையும் பழைய மாடுகளுடன் சேர்த்துத் தொழுவத்தில் கட்டி இருந்தான்.
அந்த மாடோ யாருக்கும் அடங்காமல், முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.
புதிய மாட்டிற்கு அடையாளம் தெரிவதற்காகச் சூடு வைக்க நினைத்தான் உழவன். அது முரண்டு பிடிப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டான்.
தன் வேலையாளைப் பார்த்த அவன், ''நான் யார் என்பது இந்தப் புதுப்பேய்க்குத் தெரியவில்லை. என்னிடமே விளையாடி பார்க் கிறது. அதற்கு நல்ல பாடம் கற்பிக்கப் போகிறேன்.
''அதை இங்கே இழுத்து வா. பழுக்கக் காய்ச்சிய இரும்பால் அதன் முதுகில் சூடு போடுகிறேன். பிறகு மற்றவை போல அடங்கி நடக்கும்,'' என்று உரத்த குரலில் கத்தினான்.
தொழுவத்தில் ஒளிந்திருந்த புதுப்பேய் இதைக் கேட்டது. 'தன்னைத்தான் அவன் இழுத்து வரச் சொல்கிறான். சூடு போடப் போகிறான்' என்று நினைத்து நடுங்கியது.
'ஐயோ! இவனைப் பார்த்தாலே கொடியவனாகத் தெரிகிறானே. சூடு போடப் போவதாகச் சொல்கிறானே. அவன் குரலே பயங்கரமாக உள்ளதே. மற்ற பேய்கள் என்னை எச்சரித்தனவே. அவற்றின் பேச்சைக் கேட்காமல், வந்து மாட்டிக் கொண்டேனே. தப்பிக்க வழி இல்லையே, என்ன செய்வேன்' என்று புலம்பியது.
மாட்டைக் கட்டுவதற்காகக் கையில் பெரிய கயிற்றுடன் உழவன் வந்தான்.
'தன்னைத்தான் அவன் கட்ட வந்துள்ளான். சூடு வைக்கப் போகிறான்' என்று அவனைப் பார்த்து நடுங்கியது புதுப்பேய்.
அவன் கால்களில் விழுந்து, ''ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். அறியாமல் இங்கே வந்து விட்டேன். என் பெயர் புதுப்பேய். நீங்கள் பேசியதை எல்லாம் கேட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள். என்னை விட்டு விடுங்கள். மீண்டும் இந்த பக்கமே வர மாட்டேன்,'' என்று கெஞ்சியது.
பேயைப் பார்த்த அவன் நடுங்கினான். அதன் பேச்சைக் கேட்டதும், அவன் நடுக்கம் குறைந்தது. அதையும் மிரட்டி, ஏமாற்ற நினைத்தான்.
''என் எதிரில் வரப் பேய்கள் அஞ்சி நடுங்குமே. என்ன துணிவு இருந்தால் இங்கே வருவாய். உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்,'' என்று கோபத்துடன் கத்தினான்.
இந்த முரடன் நம்மைக் கொன்று விடுவான் போல உள்ளதே. இவனிடம் இருந்து எப்படித் தப்பித்து செல்வது என்று யோசனை செய்தது. நல்ல வழி ஒன்று அதற்குத் தோன்றியது.
''ஐயா! காட்டில் உள்ள பேய்கள் என்னை உங்களிடம் அனுப்பின,'' என்று நடுங்கிய படியே சொன்னது.
''அந்தப் பேய்கள் எதற்காக உன்னை இங்கே அனுப்பின? உண்மையைச் சொல். இல்லாவிட்டால் உன்னைத் தொலைத்து விடுவேன்,'' என்று இடி போன்ற குரலில் மிரட்டினான் உழவன்.
''ஐயா! அந்த பேய்கள் ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. அவற்றை நீங்கள் எண்ணெய் ஆக்குவதற்காகத் துன்பப்படுகிறீர்கள் இல்லையா?'' என்றது.
''ஆமாம். அதற்கு என்ன?''
''எள்ளுக்குப் பதில் எண்ணெயையே தந்து விடலாம். உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று பேய்கள் முடிவு செய்தன. உங்களுக்கு நூறு மூட்டை எள் வேண்டுமா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெய் வேண்டுமா? உங்கள் கருத்தை அறிந்து வரவே என்னை அனுப்பின. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்,'' என்று நடுங்கியபடியே கேட்டது.
''எள்ளுக்குப் பதில் இனி எண்ணெயையே தர வேண்டும். எண்ணெய் சிறிது குறைந்தாலும், உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். புதுப்பேயே! இனி நீ என் கண்ணில் படக்கூடாது. ஓடு,'' என்று விரட்டினான்.
அங்கிருந்து ஓட்டம் பிடித்த புதுப்பேய் மூச்சிறைக்கக் காட்டை அடைந்தது.
நடுங்கியபடியே ஓடி வந்த புதுப்பேயை மற்ற பேய்கள் பார்த்தன. அந்த முரடனிடம் சிக்கி எப்படியோ தப்பித்து வந்துள்ளது என்பதை அறிந்தன.
''புதுப்பேயே! அவனைக் கொன்று விட்டு வருவதாக வீரம் பேசினாயே. நீதான் உயிர் பிழைத்து ஓடி வந்ததைப் போல உள்ளதே,'' என்றது.
''பேய்களே! உங்கள் பேச்சை நான் கேட்காதது தப்புதான். அந்தக் கொடிய முரடனிடம் தப்பிக்க வழி இல்லாமல் மாட்டிக் கொண்டேன். என் முதுகில் அவன் பெரிதாகச் சூடு வைத்திருப்பான். நல்ல வேளை, என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பித்து வந்தேன். இப்போது அதை நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது,'' என்றது புதுப்பேய்.
''அந்த முரடனை யாராலும் ஏமாற்ற முடியாதே. என்ன சொல்லி அவனை ஏமாற்றினாய்?'' என்று ஆர்வத்துடன் கேட்டது இன்னொரு பேய்.
''நீங்கள் என்னை அவனிடம் அனுப்பியதாகச் சொன்னேன். நூறு மூட்டை எள் தருவதா? அதற்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதா? நீங்கள் கேட்டு வரச் சொன்னதாக அவனிடம் பொய் சொன்னேன். அவனும் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு சொன்னான்,'' என்று நடந்ததை அப்படியே சொன்னது புதுப்பேய்.
''நூறு மூட்டை எள் தேடுவதற்கே நாங்கள் படாத பாடு படுகிறோம். இனி அந்த எள்ளை எடுத்துச் சென்று செக்கில் ஆட்ட வேண்டும். நூறு பீப்பாய்களைத் தேட வேண்டும். நீ வருவதற்கு முன் நாங்கள் சிறிது நேரம் தூங்கினோம். இனி அதுவும் முடியாது. விருந்தினனாகிய நீ எங்களுக்கு நல்ல உதவி செய்தாய்,'' என்று புலம்பின பேய்கள்.
அந்தப் பேய்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டன. உழவனுக்கு ஆண்டு தோறும் நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன. அந்த உழவன் என் அறிவுக்கூர்மை என்னைக் காப்பாற்றியது. வளமான வாழ்வும் தந்தது என்று மகிழ்ந்தான்.
முற்றும்.
