PUBLISHED ON : ஜன 31, 2014

சென்றவாரம்: மன்னாரின் கூட்டாளிகள் அவனை தேடி அங்கு வந்தனர். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதை தடுக்க அவர்களின் வாயை அடைக்குமாறு மந்த்ரா மந்திரம் போட்டாள். இனி-
வாயை மூடிய கைகளை அவர்களால் எடுக்க முடியவில்லை. மன்னாருக்கு அந்த நிலை ஏற்படவில்லை. அவர்கள் நிஜ மாகவே தனக்கு பயந்து பணிந்து விட்டதாக எண்ணியவன், ''ஆ, அதுதான் நியாயம்! உண்மையைப் புரிஞ்சுக்காம அனாவசிய மாக என்மேல் சந்தேகப்பட்டு சண்டைக்கு வந்தீங்களே...
''ஏய்! ஏண்டா இப்படி முழிக் கிறீங்க... போறும்டா வாயை மூடிக்கிட்டது. எடுங்கடா கையை. கிணத்திலே விழுந்த பொட்டியை மேலே கொண்டார வழியைப் பாப்போம்!'' என்றான்.
ஆனால், அவர்கள் பரிதாபமாக விழிகள் விரிய 'ம்... ஹும்!' என்று முக்கியபடி தலையை ஆட்டினர். தங்களால் வாயிலிருந்து கைகளை எடுக்க முடியவில்லை. வரமாட்டேன் என்கிறது என்று சைகை செய்தனர்.
மன்னாருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.
'ச்சே! மறுபடி குட்டிச்சாத்தான் குட்டையைக் குழப்பிட்டுது. அவர்களைப் பேசாமல் செய் என்பதற்காக வாயை அடை என்றேன். அதற்காக, அவர்கள் தங்கள் கையாலேயே வாயை பொத்திக் கொள்ளும் படி செய்து விட்டதே! ம்... இதுவும் ஒரு வகையில் நல்லதுக்குத்தான். கிணத்திலுள்ள பணத்தை மேலே கொண்டு வரும் வரை இவர்கள் பேசிக் கொள்ளாமல் இப்படியே இருக்கட்டும்!' என்று மந்திரம் போடலானாள் மந்த்ரா.
அடுத்த வினாடி... அதிசயம் நிகழ்ந்தது. எப்படி, என்ன அதிசயம் என்கிறீர்களா?
கிணற்றிலிருந்து நீரூற்று கிளம்பி பீச்சி அடித்தது. அத்துடன் சூட்கேஸ்... ரூபாய் நாணயங்களும் தண்ணீரோடு பூப் பூவாகச் சொறிந்தன கிணற்றைச் சுற்றி. அதே சமயம், மன்னாருவின் சகாக்களின் வாயை அழுத்திக் கொண்டிருந்த கைகளும் விடுப்பட்டன.
''அய்ய்ய...ஓ...'' என்று வியப்பு ஒலி எழுப்பினர்.
கலகலவென்று கொட்டும் நாணயங்களைப் பரபரப்புடன் பொறுக்கலாயினர்.
மங்காத்தா, வடிவு, மந்த்ரா இவர்களைப் பற்றிய நினைப்பே அவர்களுக்கு இல்லை.
''அது திருட்டுப் பணம். உங்களோட பணமில்லை... அது நெருப்பாகும்! தொடாதீங்க அதை!'' என்றாள் மந்த்ரா.
உடனே மன்னாரும், அவன் சகாக்களும், ''ஆ... ஆ...'' என்று கையை உதறிக்கொண்டு குதித்தனர்.
அவர்கள் பொறுக்கிக் கையில் குவித்துக் கொண்டிருந்த நாணயங்கள் தானாக சுட்டன. கையை உதறிக் கொண்டும், நாக்கால் நக்கிக் கொண்டும் வந்தனர். குட்டிச் சாத்தான் மந்த்ராவின் வார்த்தையை நிஜமாக்கி, நாணயங்களை நெருப்பாக்கி விட்டது.
இந்த வேளையில் கருப்புப் பூனை தன் வாலை உயர்த்தியபடி அங்கு வந்தது.
மந்த்ராவுக்கு மட்டும் கேட்கும்படி, ''மறுபடியும் ஏதோ மாஜிக் செய்திருக்கே போலிருக்கே!'' என்று கேட்டது பூனை.
''ஆமா தாத்தா. நிஜம்தான். திருடர்கள் திருடிய பேங்க் பணத்தோடு தப்பி ஓடு வதைத் தடுத்து நிறுத்த மந்திரம் போட்டேன். அது தாறுமாறா பலிச்சாலும் பணத்தை காப்பாத்திட்டேன். ஆனா, இதை நல்லவிதமா எப்படி முடிக்கிறதுன்னு தெரியல்லே. உங்களைக் கூப்பிடலாம்னு நினைச்சப்போ, நீங்களே வந்துட்டீங்க. உருப்படியா ஒரு மந்திரம் போட்டு நல்லபடியா முடியுங்க தாத்தா!'' என்றாள் மந்த்ரா.
பேத்தி மந்த்ராவின் வேண்டுகோளை தாத்தா மறுப்பாரா? அவர் பலே மந்திரவாதியாயிற்றே! தூரத்தில் காவல் ஜீப்பின் உறுமல் சத்தம் கேட்டது. போலீஸ் வேனிலிருந்து இன்ஸ்பெக்டரும், போலீசாரும் திமு, திமு வென்று இறங்கினர். மன்னாருவையும், அவன் தோஸ்துக்களையும் வளைத்துக் கைகளில் விலங்கை மாட்டினர்.
இதற்குள், சிதறிக் கிடந்த ரூபாய் நாணயமெல்லாம் மறைந்து, ரூபாய் நோட்டு கட்டுக் கட்டாக சூட்கேசின் அருகே ஏதுமே நடக்காதது போல் கிடந்தன. அந்த பேங்க் பணத்தை அள்ளிச் சேமித்துக் கொண்டு, திருடர்களையும் ஜீப்பில் தள்ளிக் கொண்டு கிளம்பியது போலீஸ் ஜீப்.
''தாத்தா நீங்க பலே ஆளு!'' என்றாள் மந்த்ரா.
''மங்கா, உங்க மாமா பெரிய வீரருன்னியே... அது இதுதானா?'' என்று கேட்டாள் வடிவு.
முகம் தொங்கிப்போன மங்காத்தா, ''எங்க குடும்பப் பேரே மாமாவால் கெட்டுப் போச்சுடி. நான் என்ன செய்ய?'' என்று சுரத்தலில்லாமல் தோழியுடன் நடந்தாள்.
''மந்த்ராக் குட்டி... இது ஒரு மாதிரியான பள்ளிக் கூடம் போலிருக்கு. உங்க பாட்டி இங்கே படிச்சாங்கறதை என்னால் நம்பவே முடியல்லே!'' என்றார் கேசவன் குட்டி பூனையின் உருவில்.
மறுநாள்-
மங்காத்தாவும், வடிவுக்கரசியும் மந்த்ராவின் கைகளைப் பற்றி, தரதர வென்று இழுத்துக் கொண்டு டென்னிஸ்கோர்ட்டுக்கு வந்தனர். மந்த்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை.
''என்னை இங்கு எதற்காக இழுத்து வந்தீர்கள்?'' என்று கேட்டாள் மந்த்ரா.
''மந்த்ரா கண்ணு! நீ இந்த டென்னிஸ் கோர்ட்டை சுத்தப்படுத்தப் போறே. ஒரு குப்பை கூளம் இல்லாம, 'பளிச்சினு' இருக்கணும். நெட்டெல்லாம் இழுத்துக் கட்டி, டீச்சர்ஸ் பிரமிக்கும்படி வைக்கணும்...'' என்றாள் மங்காத்தா, மந்த்ராவின் கையை விடாமல்.
''நேற்று மாலை டென்னிஸ் கோர்ட்டைத் துப்புரவு செய்யணும்னு உங்களுக்கு டீச்சர் தண்டனை விதித்ததை நான் கேட்டேனே. அந்த வேலையைச் செய்ய வேண்டியது நீங்க தான்!'' என்றாள் மந்த்ரா உறுதியாக.
''அவங்க எங்களுக்குக் கட்டளை யிட்டாங்க. நான் உனக்குக் கட்டளையிடு கிறேன்... ஏதாவது முரண்டு பிடிச்சே, இந்த டென்னிஸ் கோர்ட்டிலேயே உன்னைப் புரட்டி எடுத்துடுவோம்...ம்... போ!'' என்று மந்த்ராவின் கையை முரட்டுத் தனமாக முறுக்கினாள் மங்காத்தா.
''விடு கையை!'' என்று வெடுக்கென்று தன் கையை அவளிடமிருந்து உதறி விடுவித்துக் கொண்டாள் மந்த்ரா.
'இவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும். மந்திரவாதி மந்த்ரா வேண்டாம் என்று பார்த்தால் நடக்காது போலிருக்கே,'' என்று எண்ணியபடி குட்டிச் சாத்தானுக்கு அழைப்பு விட்டபடி, டென்னிஸ் கோர்ட்டில் இறங்கி நடக்கலானாள்.
அப்போது-
ஒரு பக்கெட் குபீரென்று எங்கிருந்தோ பறந்து வந்தது. அதிலுள்ள நீர் மங்காத்தா வின் மீதும், வடிவின் மீதும் கவிழ்ந்தது. அதே போல, ஒரு பிரஷ் பாய்ந்து வந்தது. சொட்டச் சொட்ட நடுங்கியபடி நிற்கும் அவர்கள் முகம், கை, கால்களை தேய்த்துச் சுத்தப் படுத்தலாயிற்று. கம்பு செருகிய துடைப்பம் ஒன்று, குப்பைகளை ஒதுக்கித் திரட்டப் பயன் படுவது தத்தித் தத்தி வந்து அவ்விருவரை யும் மொத்து மொத்தென்று மொத்தியது. மங்காத்தாவும், வடிவும் குய்யோ, முய்யோ வென்று கத்தியபடி மாயமாகச் செயல்படும் பிரஷ், துடைப்பக் குச்சியின் தாக்குதலி லிருந்து விடுபட இங்குமங்கும் ஓடினர்.
பக்கெட் மறுபடியும் நீர் மொண்டு வர, தொட்டியை நோக்கி அந்தரத்தில் ஆடி அசைந்து சென்றது.
'சே! இந்தக் குட்டிச் சாத்தான் எப்பவுமே இப்படித்தான். நான் சொன்னதைக் செய்யாமல் இதன் இஷ்டத்துக்கு விளையாட ஆரம் பிச்சுடுது. அவைகளை 'சுத்தம் செய்யும்படி செய்'னு சொன்னா, அவர்களையே சுத்தம் செய்ய ஆரம்பிச்சுடுது!' என்று கடிந்து கொண்ட மந்த்ரா, ''இதுவும் சரிதான். திமிர் பிடித்த இதுகளுக்கு இது வேணும் தான்!'' என்று திருப்திப்பட்டாள்.
''அவ மந்திரவாதியுமில்ல மண்ணாங் கட்டியுமில்லே. ஏதோ சில்மிஷம் பண்றா... வா வா, நாம் நனைந்த உடைகளைக் களைந்து விட்டு, வேறு உடை அணிந்து வரலாம்!'' என்ற மங்காத்தா, மந்த்ராவைப் பார்த்து, ''ஏய்... ஓடிடலாம்னு நினைக்காதே... டென்னிஸ் கோர்ட்டை நீதான் சுத்தப்படுத்தியாகணும். புரிஞ்சுதா?'' என்று மிரட்டிவிட்டு, வடிவுடன் அங்கிருந்து போனாள்.
டென்னிஸ் கோர்ட்டின் தடுப்பு மறைவி லிருந்து எட்டிப் பார்த்தது கருப்புப் பூனை. அது மந்த்ராவின் தாத்தா கேசவன் குட்டிதான்.
''என்ன மந்திராக் குட்டி மறுபடியும் பிரச்னையா? விஷயத்தைச் சொல்லு. நான் ஒழுங்கு படுத்தறேன்!'' என்றது பூனை.
''நீங்க சமயத்திலே வந்து கை கொடுப்பீங் கன்னு எனக்குத் தெரியும் தாத்தா...'' என்ற மந்த்ரா டென்னிஸ் கோர்ட் விஷயத்தைக் கூறினாள்.
''இவ்வளவுதானே? நீ கவலைப்படாமல் உன் அறைக்கு போ...'' என்ற கருப்பு பூனை வாலை நிமிர்த்தி, முதுகை வளைத்து, உடலைச் சிலிர்த்துக் கொண்டது. அடுத்த வினாடி டென்னிஸ் கோர்ட் துலக்கிய கண்ணாடி போல ஒரு தும்பு தூசி இல்லாமல் பளிச்சென்று ஆகியது.
அது சரி, இப்போ டென்னிஸ் கோர்ட்டை சுத்தமாக்க வேண்டிய அவசியமென்ன?
அவசியமிருந்தது அன்று பத்மாவதி பள்ளி மாணவிகள், மகாராஜா பள்ளி மாணவிகளுடன் மாட்ச் விளையாட வரு கின்றனர். வி.ஐ.பி.,க்கள் வீட்டுப் பெண்கள் படிக்கும் பணக்காரப் பள்ளிக்கூடம் அது. அப்பள்ளி மாணவிகள் வரப்போகின்றனர். தன் பள்ளியையும், மாணவிகளையும் பற்றி ரொம்ப கர்வப்படுகிறவள் பத்மாவதி பள்ளியின் பிரின்சிபல். ஆகவே தான், எலிசபெத் டீச்சர் அவர்களை வரவேற்பதில் விசேஷ அக்கறை காட்டினார்.
விருந்தினர்கள் வருவதைக் கண்ட தாத்தா (பூனை) ''மந்த்ராக் குட்டி, நான் ஒதுங்கிக் கிறேன். பூனையோடு நீ பேசிக் கொண்டிருப் பதைப் பிறர் பார்த்தால், சந்தேகத்துக்கு இடமாகும்!'' என்று கூறி ஒரு தடுப்பின் மீது தாவி மறைந்தது கருப்பு பூனை.
பத்மாவதி பள்ளியின் தலைமை ஆசிரியை தம் மாணவிகளுடன் ஏகமிடுக்காக வந்து சேர்ந்தார். மகாராஜா பள்ளி ஒரு சீர்திருத்தப் பள்ளி. அதன் மாணவிகள் ஒரு மாதிரி என்ற நினைப்பில், அந்த பிரின்சிபலிடமும், அவர் பள்ளி மாணவிகளிடமும் ஒரு அலட்சியம் தெரிந்தது. மகாராஜா பள்ளி பிரின்சிபல் தனபாக்கியம் அவர்களை வரவேற்றார்.
- மாஜிக் தொடரும்
