தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பாண் மரம்!

பாண் மரம்!

பாண் மரம்!


PUBLISHED ON : ஜன 31, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேர, சோழ, பாண்டியர்கள் நெடுங்காலம் தமிழகத்தை ஆண்டனர். சிற்றரசர்களான வேளிர்கள் அவர்களுடன் போட்டியிட்டுத் தமிழை வளர்த்தனர். ஆனால், திடீரென இந்நிலை மாறிற்று. களப்பிரர் என்ற கல்லா மக்கள் எங்கும் பரந்தனர். மூவரசுகள் அழிந்தன. தமிழ்புலவர்களை இவர்கள் ஆதரிக்கவில்லை.

பாணருள் கிட்டத்தட்டக் கடைசிப் பாணனாக வாழ்ந்தவன் பழனக்கிழான். அவன் பாடிப் பிழைப்பதைக் கைவிட்டான். பாடுபட்டுப் பிழைக்கவும் பழகவில்லை. ஆயினும், அவனிருந்த பண்ணையின் தலைவன், பழங்குடிப் பெருமையை எண்ணி அவனுக்கு ஆதரவு செய்தான். இடையே பண்ணை கைமாறிற்று.

புதிய தலைவனைச் சென்று காணும்படியும், பரிசு பெற்று வரும்படியும், பாணன் மனைவி பூவணி அவனை வற்புறுத்தினாள். ஓர் எலுமிச்சம் பழத்துடன் அவன் புறப்பட்டான். புதிய தலைவன் புதுமரபைச் சேர்ந்தவன். அவன் எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொண்டான்.

''இன்னொரு சமயம் வா!'' என்று அனுப்பிவிட்டான். பழனக்கிழான் அடிக்கடி சென்று புதிய தலைவனை பார்த்தான். பழைய மரபை எண்ணி அரைகுறையான பாடல்களை கூடக் கட்டிக் கொண்டு போனான். ஆனால், புதிய தலைவன் பாடுபவருக்குக் கூலியைக் குறைத்துக் கொடுக்க எண்ணியவன்.

''பாட்டில் காலமெல்லாம் போயிற்று. வேறு தொழில்பார்!'' என்று அவன் அழுத்தமாகக் கூறி அனுப்பிவிட்டான். பழனக்கிழானுக்கும், பூவணிக்கும் வறுமை தன் கோர உருவைக் காட்டத் தொடங்கிற்று.

புதிய தலைவன் இச்சமயம் ஒரு புதிய மாளிகை கட்டத் திட்டமிட்டான். அவன் பேய் பூதங்களில் நம்பிக்கையற்றவன்.

அவன் புதிய மாளிகைகட்ட எண்ணிய தோட்ட வெளியில், வேலையாட்கள் கால் வைக்க மறுத்தனர். குறிப்பாக அதன் நடுவேயுள்ள புங்க மரத்தில் எண்ணற்ற பேய்கள் தங்கியிருந்தன. மக்கள் அதனருகே மாலை நேரத்தில் போக அஞ்சினர். அறியாமல் அத்திசை சென்றவர்கள் தலைகள் காலையில் மரத்தடியில் திருகப்பட்டுக் கிடந்தன.

''ராகாலத்தில் புங்க மரத்தடி சென்று அதன் கொம்பு ஒன்றை முறித்துக் கொண்டு வருபவர்களுக்கு, ஆறு வேலி வரியில் நிலம் தருவேன்!'' என்று அவன் பறைசாற்றுவித்தான்.

பண ஆசைகூட மக்கள் அச்சத்தை அசைக்கவில்லை. ''பணம் வருகிறது என்று போய் என்ன பயன்? அதை நுகர ஆள் திரும்பி வந்தால் தானே!'' என்று பேசிக் கொண்டனர்.

''பட்டினி கிடந்து சாவதைவிட, பேய் கொன்று சாவது மோசமல்ல. ஆறுவேலி ஆசையோ சாவுக்குக்கூட இனிமை ஊட்டத்தக்கதே!'' என்று பழனக்கிழான் எண்ணினான்.

''என் வறுமை தீர்க்க, புங்கமரத்தின் பக்கம் இன்றிரவு செல்கிறேன். அதன் கிளையை முறித்துக் கொண்டு வருகிறேன். பேயிடமிருந்து தப்பி வந்தால், விளம்பரப்படுத்தியபடி ஆறுவேலி தருவது உறுதி தானே!'' என்றான்.

''ஆகா! நல்ல நிலமாக நீயே பொதுநிலத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!'' என்றான் தலைவன்.

ஒட்டிய வயிற்றைப் பழனக்கிழான் மேலும் ஒட்ட இறுக்கிக் கொண்டான். மாலைக்கு பின் தோட்ட வெளியை அணுகினான். எல்லா மரத்தடிகளிலுமே பேய் போன்ற வடிவங்கள் தெரிந்தன. புங்கமரத்தடியிலே வடிவங்கள் இன்னும் மிகுதியாயிருந்தன. மேலும், அவை அப்போதே ஊளையிடவும், அலறவும் தொடங்கியிருந்தன. அவன் கைகால்கள் அவனை அறியாமல் நடுங்கின. பற்கள் நெறுநெறுன்று ஆட்டம் கண்டன. ஆயினும், ஆறுவேலி ஆசை அவனைப் பிடித்து உந்திற்று.

புங்க மரத்திலிருந்து கூப்பிடும் தொலைவில் பூவரச மரம் ஒன்று இருந்தது. அதனருகே செல்வதற்குள், பாணன் உடலின் ஒவ்வோர் உறுப்பும், ஒவ்வொரு தாளத்தில் ஆடத் தொடங்கிற்று. அவனால் ஒரு காலடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. அந்த மரத்துடன் மரமாகச் சாய்ந்து அதையே பற்றிக் கொண்டு நெடுநேரம் நின்றான்.

''பால் சான்ற புலவனே! ஏன் இந்த நடுக்கம்?'' என்று ஒரு குரல் அவன் செவியில் கேட்டது.

அவன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். யாரும் தென்படவில்லை. பேசியது மரத்தின்மேல் தலைகீழாகத் தொங்கிய ஒரு பேய்தான். அதைக் கண்டதும் அவன் அச்சம் பன்மடங்கு பெருக்கமடைந்தது. அவன் வாய் அவனை அறியாமல் குளறிற்று.

''பாணனே! என்னைக் கண்டு அஞ்சாதே. நான் பேயானாலும் அரசப் பேய். பாணர்களுக்கு வாரிக் கொடுத்தவன்தான் நான். என் பெயர் நன்னன். ஆனால், நான் பாணர் பழிக்கும் செயல் செய்து விட்டேன். அதனால்தான் பேயாயிருக்கிறேன். நான் உனக்கு என்னாலான உதவியை செய்கிறேன். அஞ்சாமல் வந்த காரியத்தைக் கூறு!'' என்றது.

''நான் பாடலைக் கைவிட்டு வாழ்கிறேன். பாடினாலும் கொடுப்பார் தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விட்டனர். வறுமையால் வாடுகிறேன். ஏழுநாள் நான் பட்டினி; பதினாலுநாள் என் மனைவி பட்டினி. இந்நிலையிலும் தலைவன் என்னையோ, என் பாட்டையோ பொருட்படுத்தவில்லை. ஆனால், அந்த புங்கமரத்தில் இரவில் யாராவது ஒரு கிளை ஒடித்துக் கொண்டுவந்தால், ஆறுவேலி நிலம் தருவதாகக் கூறினான். அந்த ஆசையால் உயிரை வெறுத்து வந்தேன். ஆனால், அச்சம் சாகாமலே என்னைச் சாகடிக்கிறது!'' என்றான்.

அரசப்பேய் அவன் முன் ஒரு கனியை நீட்டிற்று. ''இது அரசன் அரண்மனையிலுள்ள மாங்கனி. முதலில் இதைத் தின்று பசியாறு. நீ எங்கும் போக வேண்டாம்; எதற்கும் அஞ்ச வேண்டாம். நானே உனக்கு வேண்டிய கிளைகளை முறித்துத் தருகிறேன். அந்தப் புங்க மரத்துப் பேய்கள் கொடாதவர்களைப் பாடிய பாணர்களின் பேய்கள்தான். அவை நான் சொன்னபடி கேட்கும்!'' என்றது.

பழனக்கிழான் மாங்கனியை மெல்லக் கை ஏந்தி வாங்கினான். அதைத் தின்றதும் அவன் உடலில் தெம்பு வந்தது. பசிமட்டுமல்ல, அச்சமும் பெரிதளவு அகன்றது.

அரசப்பேய் புங்கமரத்தை நோக்கிச் சென்றது. கீச்சுக் குரலிலே, ''மன்னன் வாழ்க! எம் தலைவன் வாழ்க!'' என்ற கூச்சல்கள் காதைத் துளைத்தன. பாணப் பேய்கள் அரசப் பேயைச் சூழ்ந்து நின்று ஆடின.

''பேய்த் தோழர்களே! என் பழியையும், உங்கள் பழியையும் பேயுருவிலேயே நீக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோ என் மரத்தடியில் நிற்பவன் ஒரு பழைய பாணர் குடியான். வறுமையால் அவன் வாடுகிறான். பாணர் காலம் உலகில் ஓய்ந்து போய் விட்டது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பாடலுக்குக் கொடை தராத ஒரு செல்வன், இந்த புங்கமரத்தின் கிளை ஒன்றுக்கு ஆறுவேலி நிலம் கொடுக்க விரும்புகிறானாம்.

''நாம் உலவும் ராப்பொழுதிலேயே அதை முறித்துக் கொண்டு வரவேண்டுமாம். பாணன் இதற்காக உயிரை வெறுத்து நம்மிடம் வந்திருக்கிறான். அவனுக்கு தீங்கு செய்வதால் நம் பேய் உருவம் இன்னும் நீடிக்கும். உதவினாலோ கூடிய விரைவில் நாம் இந்தப் பழி சூழும் வடிவத்தை விட்டு நீங்குவோம். என்ன சொல்கிறீர்கள்?'' என்று அரசப் பேய் கேட்டது.

''எங்கள் அரசன் சொல்கிறபடியே செய்வோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று பேய்கள் கேட்டன.

''தற்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம்தான். அவனிடம் கொடுக்கும்படி என்னிடம் ஒரு பச்சைக்கிளையை முறித்துத் தாருங்கள்!'' என்றது அரசப் பேய்.

அது எளிதில் முடிந்தது. ஒரு செழுங்கிளையுடன் அரசப் பேய் பூவரசமரத்தை அணுகிற்று. பாணன் பழனக்கிழான் கையில் அதைக் கொடுத்தது.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us