தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்த்ரா! (16)

மாஜிக் மந்த்ரா! (16)

மாஜிக் மந்த்ரா! (16)


PUBLISHED ON : பிப் 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: பத்மாவதி பள்ளி மாணவிகளின் உடைமைகளை மங்காத்தாவும், வடிவும் திருடிக் கொண்டு ஓட, அதனால் தன் பள்ளியின் பெயர் கெட்டுவிடக் கூடாதென்பதற்காக மந்த்ரா, மங்காத்தா, வடிவின் மீதுமேஜிக் போட்டாள். அது விபரீதமாகச் செயல்பட்டது. கர்வம் பிடித்த பத்மாவதி பள்ளித் தலைமை ஆசிரியையும், மாணவிகளும் தங்களை அறியாமல் தங்கள் உள்ளத்து ரகசியங்களை வெளிப்படையாக கூறினர். இனி-

இது இப்படியே தொடருமானால் நிலைமை விபரீதமாகி விடும் என்று உணர்ந்த மந்த்ரா, தன் தாத்தாவிடம், நிலைமையை மாற்றி, அவர்கள் இங்கு வந்த போதிருந்த மனநிலைக்கு அவர்களை திருப்பும்படி வேண்டிக் கொண்டாள்.

பேத்தி மந்த்ராவின் வேண்டுகோளுக்கு இணங்கிய கேசவன் குட்டி, மந்திரம் போட அடுத்த கணம்...

''ஓ நான் என்ன சொன்னேன்?'' என்று குழப்பத்துடன் தனபாக்கியத்தைப் பார்த்தாள் பத்மாவதி ஹெட்மிஸ்.

''ஏதோ கெட்ட கனவு. கண்டபடி உளறி இருக்கேன்!'' அசடு வழிந்தது அந்தம்மாளின் முகத்தில்.

''கனவு ஒன்றுமில்லே... ஆனா, நாம் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டோம். இனிநாம் டென்னிஸ் மேட்சை தொடங்கலாமா?'' என்றார் கேலிச் சிரிப்புடன் தனம்.

மந்த்ரா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். நடந்தவைகளை எல்லாரும் மறக்கும்படி செய்து விட்டார் கேசவன் குட்டி.

மந்த்ராவும், பத்மாவதி பள்ளி மாணவியும் பாய்ந்து, பாய்ந்து டென்னிஸ் விளையாடினர். டென்னிசைப் பற்றி எதுவுமே தெரியாத தனக்கு, இவ்வளவு திறமையாக ஆட முடிவது தன் தாத்தாவின் வேலைதான் என்பதைப் புரிந்து கொண்ட மந்த்ரா, சாதுவைப் போல ஓர் ஓரமாக உட்கார்ந்து தான் ஆடுவதை ரசித்துக் கொண்டிருக்கும் கருப்பு பூனையைப் பார்த்தாள்.

'பொல்லாத தாத்தா!' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

எலிசபெத் டீச்சர் அன்று, மகாராஜா பள்ளி மாணவிகளை மியூசியம் கூட்டிச் செல்வதாக ஏற்பாடு. பள்ளிக்குள்ளேயே அடைபட்டிருக்கும் மாணவிகளை ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை, ஒரு மாறுதலுக்காக இப்படி எங்காவது வெளியே அழைத்துப் போவது வழக்கம்.

மாணவிகள் வரிசை கட்டி அருங்காட்சியகம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். அதில் மந்த்ராவும், மங்காத்தா வும், வடிவும் இருந்தனர் என்று சொல்லத்தேவை யில்லை. முதல் நாள் தாத்தாவிடம் மியூசியம் போகப் போவதைப் பற்றிக் கூறியபோது, ''சரி, போய் வா. உன் மாஜிக்கை எல்லாம் பள்ளிக் கூடத்தோட நிறுத்திக்கோ. மியூசியம் போகும் போது, 'மிஸ் யூஸ்' பண்ணாதே. நான் வரமாட்டேன். நிம்மதியா மணிக் கூண்டிலே போய் தூங்கப் போறேன். என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணாதே!'' என்று கூறியிருந்தார்.

''பாவம் கிராண்ட் பா! என்னோட வந்ததினாலே அவருக்கு ஓய்வே இல்லாமப் போச்சு!'' என்று எண்ணியபடி நடந்தாள் மந்த்ரா.

மாணவிகள் அணிவகுத்து வருவதை இரண்டு பள்ளி மாணவர்கள் தங்கள் 'மோ பைக்'கில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந் தனர். இளம் வயதினருக்கே உரிய குறும்பு தலை தூக்கியது. அந்த மாணவர்களும் விஷமக்காரர்கள்தான்.

மாணவிகளை பயமுறுத்தி வேடிக்கை பார்க்க ஆசைப்பட்டனர். தங்கள் பைக்கின் சைலன்சரை நீக்கி விட்டு 'டப் டப் டப்' என்று ஏகச் சத்தம் எழுப்பியபடி கிளம்பினர். மாணவிகளின் மீது மோதுவது போல அவர் களை உரசிக் கொண்டு வெகு வேகமாக அவர்களைச் சுற்றி வந்து வட்டமடித்தனர்.

''சமத்தா, மிஸ் பின்னால ஓரமாப் போவீங்களாம்... அப்படித்தானே?'' என்று அவர்களை ஒட்டியபடி விருட்டென்று தன் வண்டியை ஒதுக்கினான் ஒரு மாணவன். மாணவிகளும், எலிசபெத் டீச்சரும் பயந்து போய் இங்குமங்கும் கலைந்து ஓடி ஒதுங் கினர். அது மியூசியத்தை ஒட்டியிருந்த பூங்காவின் சுற்றுச் சுவர் பகுதி. அதிக ஜன நடமாட்டமோ, வாகனங்களோ வராத அமைதியான வீதி.

'இந்த மாணவர்களின் செய்கை எனக்குப் பிடிக்கவில்லை. இவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்' என்று எண்ணினாள் மந்த்ரா.

''ஏய், ஒழுங்கா உங்க வழியிலே போக மாட்டீர்கள்?'' என்று அதட்டினாள் எலிசபெத் டீச்சர்.

''நாங்க போக நினைச்சாலும் எங்க வண்டி போக மாட்டேங்குதே!'' என்று 'புர்ர்' என பைக்கை ஒடித்து வளைத்துத் திரும்பி எலிசபெத் டீச்சர் மீது மோதுவது போல வந்தான் அந்த மாணவன்.

'இவர்கள் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும். இவர்களுடைய அடாவடித் தனத்தை அடக்க வேண்டும்!' என்று மந்த்ரா குட்டி சாத்தானைக் கூப்பிட்டாள். அடுத்த வினாடி...

''ஐய்ய!'' என்று கத்தினான் ஒரு மாணவன். மற்றொரு மாணவன் தன் சைக்கிளிலிருந்து எகிறிப் போய் அப்பால் விழுந்தான்.

''என் வண்டியிலே பிரேக் ஜாம் ஆகிப் போச்சு. என்னன்னே தெரியல்லே...'' பரிதாப மாக விழித்தான் மாணவன். அவன் பைக் நகராமல் பொம்மை போல நின்றது. அதைச் சுற்றி சுற்றி வந்து உலுக்கியும், குலுக்கியும், உதைத்தும் அத்துடன் போராடினான். கீழே விழுந்த மாணவனோ தலையைக் குலுக்கிக் கொண்டு தன் வண்டியைப் பார்த்தான். அது ஒரு வினாடி இரண்டாக மூன்றாகத் தெரிந்தது. மறுவினாடி ஒன்றாக நசுங்கிப் போய் ஒல்லியாக தெரிந்தது. தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.

மந்த்ரா நினைத்தது இப்படியல்ல... தங்களுக்கு தொல்லை தராமல் அவர்களை விரட்டும்படி தான் குட்டிச் சாத்தானிடம் கூறினாள். ஆனால், அது வழக்கப்படி தன் விருப்பப்படி வண்டிகளை நகராமல் செய்து விட்டது. எப்படியோ இனி வாலாட்ட மாட்டார்கள் என்ற திருப்தியோடு 'கிர்' அடித்துக் கிடக்கும் அந்த இரு சுட்டிப் பையன்களையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே முன்னேறினாள்.

எலிசபெத் டீச்சரும், மாணவிகளும், ''பயல்களுக்கு நல்லா வேணும்!'' என்று கறுவிக்கொண்டே, அவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே மியூசியத்துக்குள் சென்றனர். ஆனால், மங்காத்தாவும், வடிவும்?

அவர்கள் குணம் அவர்களை விட்டுப் போகுமா? எல்லாருக்கும் கடைசியாக வந்த அவள் கீழே விழுந்து விழித்துக் கொண்டி ருக்கும் பையன்களிடம் தணிவான குரலில் முணு முணுத்தாள்.

''மியூசியத்துக்கு வெளியே ஜன்னல் அருகே நில்லுங்க; காத்திருங்க. பணம் பண்ணலாம்... எனக்கும் பங்கு தரணும்!'' என்றாள்.

சுணங்கிப் போய்க்கிடந்தவர்கள் சுறுசுறுப்பாயினர். அவர்களைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டு நகர்ந்தாள் மங்காத்தா.

மியூசியம் வரவே பிடிக்கவில்லை. ஆனால், வராமல் இருக்க முடியாது. அந்த சீர்திருத்தப்பள்ளியின் கட்டுப்பாடான வாழ்க்கையே அவளுக்குப் பிடிக்கவில்லை. இஷ்டப்படி திரிந்தவளைக் கட்டிப் போட்டால்? கையில் காசு மில்லை. அவள் திருட்டுப் புத்தி அடிக்கடி அவளைச் சீண்டும்.

''மங்கா... இதென்னடீ புரியாத பொருள் களையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு போரடிக்கல்லே? நைசா இவங்ககிட்டே இருந்து விலகி நாம் ஜாலியா வெளியே ஊர் சுத்தப்போனா என்ன?'' கிசு கிசுத்தாள் வடிவு.

''கொஞ்சம் பொறு... நானும் அந்த ஐடியா வோடதான் வரேன். இங்குள்ள அபூர்வ சாமான்களிலே ஒன்று இரண்டை சுருட்டிப் போகலாம். நல்ல விலை போகும். வெளியிலே பைக்கிலே ஸ்டண்ட் காட்டினான்களே, அதில் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் கிட்ட ஜாடையா சொல்லி விட்டு வந்திருக்கேன். ஜன்னல்கிட்டே காத்திருக்கும் படி!'' என்றாள் மங்காத்தா.

அங்கு பண்டைய மன்னர்கள் அணிந்த ஆபரணங்களை வரிசைப்படுத்தி விளக்கம் அளித்திருந்தனர். அங்கு எல்லாமே பழங் காலத்தில் பயன்படுத்திய பொருள்களின் குவியல். மாணவிகள் பரவலாக ஆங்காங்கே, அவர்களுக்கு விருப்பமான பகுதிகளில் நின்று ஈடுபாட்டுடன் கோஷ்டி கோஷ்டியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

மந்த்ராவைக் கவர்ந்தது பல நாடுகளில் மந்திரவாதிகள் எப்படியெல்லாம் செயல் பட்டனர் என்பதை விளக்கும் பகுதி. கட்டுக் கதைகளில் வரும் மந்திரக் கண்ணாடி, பறக்கும் ஜமுக்காளம், ஆப்பிரிக்க நாட்டு 'விட்ச்' டாக்டர்கள் எனப்படும் சூனியக்காரர்கள் பயன் படுத்திய கருவிகள், ஆகியவற்றின் மாதிரி களை உருவாக்கி வைத்திருந்தனர். சூனியக் காரக் கிழவி துடைப்பக் குச்சியின் மீது அமர்ந்து ஆகாயத்திலே பறப்பது போலமாயா ஜாலக்கதைகளிலே வருமே. அதைக் கூட அப்படியே அங்கு உருவாக்கி வைத்திருந் தனர். தாத்தாவைப் போலவே ஒரு கருப்புப் பூனை பொம்மையும் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. மாஜிக் மந்த்ராவுக்கு அங்கிருந்த மந்திரவாதிகளின் உபகரணங்களை எல்லாம் பார்க்க சுவாரசியமாக இருந்தது.

பேசும் மாயக் கண்ணாடி முன் நின்று தன்னையே அதில் பார்த்துக் கொண்ட போது, ''இவையெல்லாம் நிஜமாகவே இருந்தால் எவ்வளவு தமாஷாக இருக்கும்!'' என்று எண்ணிக் கொண்டாள்.

ஒரு மந்திரக் கதையில் ஒரு அரசி மாயக் கண்ணாடி முன் நின்று கொண்டு கண்ணாடி யிடம், ''இவ்வுலகில் அதி அற்புத அழகியார், நான் தானே?'' என்று கேட்டதும், அதற்கு அந்த மாயக்கண்ணாடி கூறிய பதிலும் மந்த்ராவுக்கு நினைவுக்கு வந்தது. நாமும் இந்தக் கண்ணாடி யில் கேட்போமே!'' என்று அருகில் போன போது தூரத்துக் காட்சி ஒன்று அந்தக் கண்ணாடியில் தெரிந்தது. அதைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள் மந்த்ரா. அப்படி அவள் அந்தக் கண்ணாடியில் கண்ட காட்சிதான் என்ன?

- மாஜிக் தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us