PUBLISHED ON : பிப் 14, 2014

நீண்ட காலங்களுக்கு முன், சரவணன் என்ற பெயர் கொண்ட வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஓர் கஞ்சன். தன்னுடைய சொந்த தேவைகளுக்குக் கூட தன் பணத்தை செலவு செய்ய மாட்டான்.
அவன் தன் வியாபாரத்தில் ஈட்டிய பணத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அதனைத் தங்கக் கட்டிகளாக மாற்றி, ஒரு அறையில் பூட்டி வைத்தான்.
நாடு முழுவதும் சென்று பொருள் திரட்டினான்.
அவனிடம் ஏராளமான பணம் இருந்தது. அவன் நல்ல மனிதநேயம் கொண்டவனாக இல்லை. அவன் தன் பணத்தைக் கடனாகவோ அல்லது மக்களுக்கு உதவி செய்யவோ பயன்படுத்தவில்லை. பணத்தை மேன் மேலும் சேர்க்க வேண்டும் என்பதே அவனுடைய ஓரே ஆசையாக இருந்தது.
அவன் எங்குச் சென்றாலும் தன் பொருள்களை சமார்த்தியமாக விற்று விடுவான். அவன் ஓரிடத்தில் மிகக் குறைந்த விலைக்குப் பொருள்களை வாங்கி, இன்னொரு இடத்தில் அவற்றை அதிக விலைக்கு விற்று வந்தான்.
அவன் நேர்மையான வணிகன் அல்லன். எனவே, அவன் ஏராளமான பணத்தைச் சேர்த்தும், திருப்தி இல்லாதவனாக இருந்தான்.
ஒருநாள் அவன் தன்னிடமிருந்த ஐம்பது ஒட்டகங்கள் மீதும் விற்பனைப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வியாபார நிமித்தமாகப் பயணம் மேற்கொண்டான். மிக நீண்ட தொலைவில் இருந்த நகருக்கு அவன் பயணப்பட்டான். ஆனால், அவன் அந்த நகரத்தை அடைவதற்கு முன்பே, பெரும்பாலான பொருட்களை விற்று விட்டான். எனினும், தன்னுடைய விற்பனையில் அவனுக்கு மகிழ்ச்சியில்லை. எனவே, நகரத்தை அடைந்து, எஞ்சியிருந்த பொருட்களையும் விற்றான்.
இப்போது அவன் கையில் ஏராளமான பணம் இருந்தது.
ஆனால், அவன் கடிகார முள் போல சுழன்று உழைத்ததால் களைத்துப் போனான். வீடு திரும்புவதற்கு முன் சிறிது நேரம் ஓய்வெடுப்பது நல்லது என்று நினைத்தான். எனவே, அவன் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் உணவு விடுதிக்குச் சென்று சில உணவுப் பொருள்களை கொண்டு வரும்படி கட்டளையிட்டான்.
அவன் உணவு விடுதியில் உணவுக்கான ஒரு மேஜையில் காத்திருந்த போது, இன்னொரு மேஜையில் ஒரு சாது அமர்ந் திருப்பதைக் கண்டான். தன்னுடன் இணைந்து உணவு உண்ணும்படி சரவணன் அவரை வேண்டினான். அந்த சாதுவும் அவன் அமர்ந்திருந்த மேஜைக்கு எதிரே வந்து அமர்ந்தார். அவனை ஆசிர்வதித்தார்.
பிறகு சாது, அவனைப் பார்த்து, நீங்கள் பணக்காரர் போல் தெரிகிறீர்கள். நான் உங்களை இன்னும் மிகப்பெரிய பணக்காரனாக்குவேன்,'' என்றார்.
அதற்கு சரவணன், ''என்னை நீங்கள் பணக்காரர் என்று அடையாளம் கண்டு சொன்னீர்களே! அப்போதே நீங்கள் அற்புத ஆற்றல் நிறைந்த சாது என்பதை நான் தெரிந்துக் கொண்டேன்,'' என்றான். அவன் மேலும், அந்தச் சாது சொல்வதை உன்னிப்பாக கேட்கத் தொடங்கினான்.
சாது தொடர்ந்து பேசினார்.
''ஏராளமான செல்வம் இருக்கும் இடத்தை நான் அறிவேன். அந்த இடத்திற்கு உன்னை நான் அழைத்துச் செல்கிறேன். உன் விருப்பப்படி உனக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ அதை நீ எடுத்துக் கொள்ளலாம்,'' என்றார்.
''நான் அந்த இடத்தை எப்படி அடையாளம் கண்டு கொல்வது?'' என்று சரவணன் சாதுவிடம் கேட்டான்.
''நான்தான் முன்பே சொன்னேனே அந்த இடத்தை உனக்குக் காட்டுகிறேன் என்று. அந்த இடம் முழுவதும் வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருள்களால் பிரகாசித்துக் கொண்டிருக்கும்,'' என்று சாது கூறினார்.
சாது உண்மையைத் தான் சொல்கிறாரா என்று அவனால் நம்ப முடியவில்லை. எனினும் அவர் கூறுவதை இன்னும் உன்னிப்பாகக் கவனித்தான் சரவணன்.
சாது மேற்கொண்டு பேசினார்.
''நீ உன் ஐம்பது ஒட்டகங்களின் முதுகில் அந்த விலை உயர்ந்த பொருட்களை ஏற்றலாம். ஆனால், இதில் ஒரு நிபந்தனை. ஐம்பது ஒட்டகங்களின் முதுகில் ஏற்றப்பட்ட விலை உயர்ந்த பொருள்களில் இருபத்தைந்து ஒட்டகங்களில் ஏற்றப்பட்ட பொருள்களை நான் எடுத்துக் கொள்வேன்.
''என்னுடைய நிபந்தனைக்கு நீ கட்டுப் பட்டால், நான் உன்னை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்,'' என்றார்.
சரவணனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த சாது கூறியது அவன் காதில் தேன் பாய்ச்சுவது போல் இருந்தது. எனவே அவன் அந்தச் சாதுவின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டான்.
அவர்கள் இருவரும் உண்டு முடித்தபின்பு, அந்த அற்புதமான இடத்தை நோக்கிப் பயணமாயினர்.
அவர்கள் நகரை விட்டு வெளியே வந்து மிக நீண்ட தூரம் பயணம் செய்தனர். அவர்கள் அடர்ந்த காடு, பாலைவனம், வற்றிய ஆறுகள் மற்றும் கொடிய வனவிலங்குகள் ஆகியவற்றையெல்லாம் கடந்து சென்றனர்.
அவர்களின் பயணம் காட்டின் வழியே தொடர்ந்தது. சிங்கங்கள் மற்றும் புலிகள் வாழும் குகைகளையும், ஆபத்தான நீர்வீழ்ச்சிகளையும் அவர்கள் கடந்தனர்.
இறுதியாக அவர்கள் ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தனர். சாது சரவணனைப் பார்த்து, ''இத்துடன் நமது பயணம் நிறைவடைந்தது. நாம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விட்டோம்,'' என்றார்.
அந்த இடம் மலைகளால் சூழப்பட்டிருந்ததையும், அங்கு எங்குப் பார்த்தாலும் சூரிய ஒளி சுட்டெரிப்பதையும் சரவணன் கவனித்தான்.
பிறகு சாது ஒரு சிறிய பெட்டியைத் தன் பையிலிருந்து எடுத்தார். அது தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அவர் அதைத் திறந்து, அதிலிருந்து தங்கத் தூளை எடுத்தார். அவர் அந்தத் தூளை நிலத்தில் தூவினார்.
அடுத்த கணமே, அந்த இடம் முழுவதும் புகையால் சூழப்பட்டது. சிறிது நேரத்தில் புகை மறைந்தது. அங்கே ஒரு குன்றின் வாசல் தோன்றியது. அது குகையைப் போல் இருந்தது.
- தொடரும்.
