PUBLISHED ON : பிப் 21, 2014

சென்றவாரம்: மகாராஜா பள்ளி மாணவர்களை மியூசியம் அழைத்து சென்றார் எலிசபெத் டீச்சர். அந்த மியூசியத்திலுள்ள மந்திரக் கண்ணாடியில் மாறும் காட்சியை பார்த்த மந்த்ரா அதிர்ச்சி அடைந்தாள். இனி-
மங்காத்தாவும், வடிவும் ஒரு கண்ணாடிப் பெட்டியின் அருகே நின்று கொண்டிருந்தனர். சும்மாவா? இல்லை... மங்காத்தாவின் விஷமக் கை அந்தக் கண்ணாடிப் பெட்டியை நகர்த்தி, அதற்குள்ளி ருந்த ஒரு நல்முத்து மாலையை எடுத்துக் கொண்டிருந்தது.
கடல் செல்வங்கள் என்ற தலைப்பில் கடலில் கிடைக்கும், சிப்பிகளிலிருந்து முத்துக் குளியலில் நம்நாடு முன்னேறி இருந்ததையும்... பாண்டி நாட்டிலிருந்து நல்முத்துக்கள் பல நாடுகளுக்குச் சென்றதைப் பற்றியும் அங்கு விளக்கப்பட்டிருந்தன.
அதெல்லாம் மங்காத்தாவை ஈர்க்க வில்லை. முத்து மாலையைக் களவாடிப் போய் காசு பண்ணு வதிலேயே குறியாக இருந்தாள் அவள். மந்திரக் கண்ணாடியில் மாறும் காட்சியை எதிர் பார்த்த மந்த்ராவுக்கு, அவர்களை அதில் கண்டதும் அதிர்ச்சி ஏற்பட்டது.
'ஐயையோ! இவர்கள் எங்கு வந்தாலும் இதே தொல்லைதான். கை சுத்தம் இல்லை. இவர்களாலே பள்ளி மாணவிகள் அத்தனை பேருக்கும் அல்லவா கெட்ட பெயர், அவமானம். இவர்களைத் திருத்தியாகணும்!' என்று அவசர முடிவுக்கு வந்தாள் மந்த்ரா.
''ஏய் வடிவு, பாத்தியா... நல்முத்து மாலை. இதை வாங்கிக் கொள்ளும் ஒரு கடைக் காரரை எனக்குத் தெரியும். இதை வெளியே நிற்கும் அந்த மாணவனிடம் ஜன்னல் வழியா அப்புறப் படுத்துவோம். பிறகு நாம் நைசா வெளியே போயிடலாம்.
''மாலை திருடு போனதை யாரும் இப்போதைக்குக் கவனிக்க மாட்டாங்க. அதுக் குள்ள நாம் இங்கிருந்து வெளியேறிடலாம்!'' என்றாள்.
''நல்ல ஐடியா மங்காத்தா!'' என்று பாராட்டினாள் வடிவு.
மந்த்ரா ஒரு தூண் மறைவிலிருந்தபடி குட்டிச் சாத்தானைக் கூப்பிட்டுக் கொண்டி ருந்தாள் அவசர உதவிக்கு!
''அவர்களிடமுள்ள முத்து மாலையை அதன் இடத்துக்குப் போகும்படி செய்!'' என்று ஆணையிட்டு மந்திரம் போட்டாள். அவள் மந்திரம் உடனே பலித்தது. ஆனால், விபரீதமாக!
'ய்ய்யீ!' என்று கத்தினாள் மங்காத்தா.
அவள் கை நிறைய 'கரேல்' என்று முத்துச் சிப்பிகள்! முத்து மாலை இருந்த கைகளில் சிப்பிகள் இருந்தால் யார் தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள்!
''ஏய் மங்கா... இதென்னடீ அதிசயம். முத்துக்கள் எங்கே? இந்தச் சிப்பிகள் எப்படி வந்தன?'' அதிசயித்து போனாள் வடிவு.
முத்துக்களை அதன் இடத்துக்குக் கொண்டு போய் சேர்த்து விட்டது குட்டிச் சாத்தான். சிப்பிதானே அதன் பிறப்பிடம். அவை பிறந்த சிப்பிகளைக் கொண்டு வந்து முத்துக்களை அதற்குள் புகுத்தி விட்டது.
'ச்சே! குட்டிச்சாத்தான் நான் சொன்னா மட்டும் ஏன்தான் இப்படிக் குளறுபடி செய்கிறதோ தெரியல்லே. தாத்தாக்கிட்டே சொல்லி கண்டிக்கச் செய்யணும்!' என்று நினைத்துக் கொண்டாள் மந்த்ரா.
''இதென்ன கண்றாவியோ தெரியல்லே!'' என்று சிப்பிகளைக் கீழே போட்டாள் மங்கா.
''இது போனாப் போகட்டும். இதோ இங்கே பவழம் இருக்கு. இதைக் கொண்டு போய் காசு பண்ணலாம்!'' என்று சில சங்குகளையும், பவழத்துண்டுகளையும் எடுத்துக் கைக்குட்டை யில் சுருட்டிக் கொண்டு ஜன்னல் பக்கம் ஓடினாள் மங்காத்தா.
அவள் திருட்டைப் பார்த்துக் கொண்டிருந்த மந்த்ரா அதைத் தடுத்து நிறுத்த என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
அருங்காட்சியகத்தில், பழங்கால மந்திர வாதிகளையும், சூனியக்காரர்களையும், பேய் வைத்தியர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பற்றி விளக்கும் பகுதி இருந் தது. அதில், சூனியக்காரிகளின் தோழனாகக் கருதப்படும் ஒரு கருப்புப் பூனை, உள்ளே பஞ்சு அடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்தது.
'இதற்கு உயிர் வரும்படி செய்து தாத்தாவை அழைத்து வரும்படி அனுப்பினால் என்ன?' என்று எண்ணினாள் மந்த்ரா.
மந்த்ரா பஞ்சடைத்த அந்தப் பூனையின் மீது மந்திரம் போட்டாள்.
காத்திருந்தாள், பொம்மைப் பூனை உயிர் பெற்று எழுவதற்காக. ம்ஹூம்! நடக்கவில்லை.
'என்ன இது? மாஜிக்கில் எங்கே கோளாறு? என்ன கோளாறு?' என்று மந்த்ரா குழம்பிப் போனாள்.
'மங்காத்தா தன் திருட்டுப் பொருளை ஜன்னல் வழியே, வெளியே காத்துக் கொண்டிருக்கும் பையன்கள் மூலம் அப்புறப்படுத்துவதற்குள் தடுத்து நிறுத்தியாக வேண்டுமே!' என்று பரபரத்தாள்.
மீண்டும் மந்திரத்தைக் கூறினாள்.
''அப்ர கடப்ற... ஒம்... ரீம்... ஹ்லீம்...!''
பொம்மைப் பூனை கல்லுப்பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்தது. நகரவே இல்லை. ஆனால், எலிசபெத் டீச்சரும், மாணவிகளும் திடீரென்று அலறினர்.
''ஐயையோ... காட்டு யானை உயிர் பெற்றுவிட்டது!''
''மாமத்... தன் உடலைக் குலுக்கிக் கொண்டு ஓடத் தயாராகுதே... காப்பாத்துங்க...!''
சரித்திர காலத்தில் வாழ்ந்த ராட்சத மிருகங் களை காட்சிப் பொருள்களாக்கி வைத்திருந்த பகுதியில், உடலெல்லாம் ரோமமும், நீண்ட தந்தங்களுமாக, 'மாமத்' என்னும் ராட்சத யானையை உருவாக்கிக் காட்டி இருந்தனர். அதற்கு உயிர் வந்து தன் உடலைக் குலுக்கிக் கொண்டு நகர ஆரம்பித்தது. அதைப் பார்த்து யார் தான் பயப்படாமல் இருப்பார்கள்?
மந்த்ரா பூனைக்கு உயிர் வரும்படி போட்ட மந்திரம், அந்த யானைக்குப் பலித்து உயிரூட்டி விட்டது!
''நா... நான் பூனைன்னு தான் சொன்னேன். நினைவிருக்கே... யானைன்னு சொல்லவே இல்லையே!'' என்று தவித்துப் போனாள் மந்த்ரா.
''ஏன் இப்படி நான் போடும் மந்திர மெல்லாம் தப்புத் தப்பாய் பலிக்கிறது?''
தன் பீடத்திலிருந்து பிளிறிக் கொண்டு கிளம்பியது யானை. மாணவிகள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். தன் ராட்சதக் கால் களைப் பதித்து உடலைக் குலுக்கிக் கொண்டு ஜன்னலை நோக்கிப் போயிற்று அந்த யானை. மங்காத்தா தன் கைக்குட்டை முடிச்சை அப்போதுதான் ஜன்னலுக்கு வெளியே பையன் களிடம் தூக்கிப் போடப் போனாள்.
''இந்தா பிடிச்சுக்கோ!'' என்று மங்காத்தா சொல்ல-
''ய்ய்ய... யீய்ய...!'' என்று வெளியில் காத்திருந்த பையன்களில் ஒருவன் அலறினான்.
''ஐயோ! அதென்னது, பயங்கர மிருகம் உன் பின்னாலே!'' என்று மற்றவன் நடுங்கினான்.
''ம...ம... மங்கா... அடீ பூ... பூதம்!'' என்று மங்காவின் அருகிலிருந்த வடிவு குழறியபடி கூச்சலிட்டாள்.
ராட்சத யானை தன் துதிக்கையினால் மங்காத்தாவை ஒரே சுருட்டாக சுருட்டிக் கொண்டது.
''ஐயோ... வ்... வ்!'' என்று வீறிட்டாள் மங்காத்தா.
மாமத் யானை அவளை பொருட்காட்சி சாலையிலிருந்து ஒரு உயரமான அலமாரியின் மேல் தட்டில் வீசியது. அது காலியாக இருந்தது. மங்காத்தா அதில் போய் பொத்தென்று விழுந் தாள். பயத்தினால் அவளுக்கு நினைவு தப்பியது.
''நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதே. உடனே தாத்தாவை நானே, போய் கூட்டி வரவேண்டியதுதான்!'' என்ற முடிவோடு அங்கிருந்த பறக்கும் துடைப்பத்தைப் பார்த்தாள் மந்த்ரா.
மேல் நாட்டுக் கதைகளில் சூனியக்காரிகள் புரூம் ஸ்டிக்கில்தான் ஏறிப் பறப்பார்கள் என்று கூறி இருக்கிறார் தாத்தா. தான் அதில் ஏறிப் பறந்து போய் தாத்தாவை அழைத்து வந்து, நிலைமையை சீர் செய்தாக வேண்டும் என்ற முடிவோடு, அதில் அமர்ந்து அதன் குச்சியை பிடித்துக் கொண்டு மந்திரங்களைக் கூறினாள். ஆனால், நடந்ததோ வேறு!
விருட்டென்று புரூம் ஸ்டிக் மட்டும் ஆகாயத்தில் கிளம்பிற்று மந்த்ராவை விட்டு, விட்டு!
''ஏய்... ஏய்! நானும் வரேன்!'' என்று கத்தினாள் மந்த்ரா. ஆனால், அந்தத் துடைப்பக் குச்சி நிற்கவில்லை. போயே போய் விட்டது.
இதற்குள்... யானை மங்காத்தாவை தன் துதிக்கையினால் சுருட்டித் தூக்குவதற்குள், அவள் தன் திருட்டுப் பொருள் கொண்ட கைக்குட்டை மூட்டையை ஜன்னலுக்கு வெளியே வீசி விட்டாள். யானையைக் கண்டு அந்தப் பையன்கள் பயந்து அலறினாலும், அது மறைந்ததும் மங்காத்தா வீசிய மூட்டையுடன் அங்கிருந்து ஓடுவதற்குத் தயாராயினர்.
ஆனால், ராட்சத யானை அவர்களை விட்டு விடுமா?
மங்காத்தாவை அலமாரியின் மேல் தட்டில் வீசிவிட்டு, மறுபடியும் ஜன்னல் பக்கம் வந்தது ராட்சத யானை.
அப்போது அந்தப் பையன்கள் இருவரும் தங்கள் பைக்கில் அமர்ந்து, வண்டியை கிளப்பிக் கொண்டிருந்தனர்.
- மாஜிக் தொடரும்.
