PUBLISHED ON : பிப் 21, 2014

அந்தக் குகையின் வாசல் பெரிதாக இருந்தது. சாது, சரவணனை அழைத்தார். இருவரும் அந்தக் குகையினுள் நுழைந்தனர். அவர்கள் அதனுள் சிறிது தூரமே நடந்திருப்பர். அந்த இடம் ஒளியால் பிரகாசித்தது.
அந்தக் குகையின் சுவர்களில் தங்கம், முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள் பதிக்கப் பட்டிருந்தன. அதனால் அந்தக் குகை முழு வதுமே 'தகதக' என மின்னியது.
அதனுள் சிறிது தூரம் நடந்ததுமே சரவணன் திடுக்கிட்டான். அங்கே அவன் ஓர் வித்தியாசமான காட்டைக் கண்டான். அங்கே தங்க மரங்கள், 'தகதக' என மின்னிக் கொண்டிருந்தன. அவற்றின் கிளைகளில் விலை மதிப்பற்ற முத்துக்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
அந்த நிலம் முழுவதும் வெள்ளி, வைடூரியம் மற்றும் மரகதத்தால் நிரப்பப்பட்டிருந்தது. அந்த இடத்திலுள்ள அலமாரிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பாளங்கள் தனித்தனியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. வைரமும், மரகதமும் வெள்ளி பதிக்கப்பட்ட தரையில் கொட்டி வைக்கப் பட்டிருந்தன.
இவற்றையெல்லாம் கண்டு சரவணன் திகைத்து நின்றான். அதுமட்டுமல்லாமல், அந்த இடத்தில் ஒரு நறுமணமும் வீசியது.
பிறகு சாது சரவணனைப் பார்த்து, ''இவற்றில் இந்தச் செல்வங் களில் உனக்கு எவ்வளவு தேவையோ அவற்றை நீ எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒன்றை நான் நினைவுபடுத்த விரும்பு கிறேன். நீ எவ்வளவு செல்வங்கள் எடுத்துக் கொண்டாலும், அதில் பாதியை எனக்கு நீ தந்து விட வேண்டும். பாதியை நீ வைத்துக் கொள்ளலாம்,'' என்றார்.
சரவணன் உடனே, விலை உயர்ந்த மாணிக்கங்களை எல்லாம் அள்ளித் தன் சட்டைப் பையில் நிரப்பிக் கொண்டான். மேலும் பல கோணிப்பைகள் நிறைய அந்தச் செல்வங்களை அள்ளினான். சாது அவன் செய்யும் செயலைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்.
சரவணன், தன் பைகள் நிறைய அந்தச் செல்வங்களை எல்லாம் அள்ளி நிரப்பிக் கொண்ட பின்பு, அவர்கள் இருவரும் குகையை விட்டு வெளியே வந்தனர்.
சரவணன் சாதுவைப் பார்த்து, ''நீங்கள் ஓர் துறவி. உலக ஆசைகளையெல்லாம் துறந்தவர். நீங்கள் இந்த எல்லையற்ற செல்வங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர் கள்? வெறும் பத்து ஒட்டகங்கள் சுமக்கும் அளவிற்கு உங்களுக்கு நான் செல்வம் தருகிறேன்,'' என்றான்.
சாது, சரவணன் சொன்னதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், உடனே சரி என்றார்.
ஆனால், சரவணனுக்கு திருப்தி ஏற்பட வில்லை. அவன் மேலும் சாதுவைப் பார்த்து, ''இவ்வளவு செல்வங்களை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எனக்குத் தெரிந்து எந்தத் துறவியும் செல்வம் வைத்திருந்ததாகக் கேள்விப்பட்டதில்லை,'' என்றான்.
இப்போது சாது சரவணனின் பேச்சுக்கு மறுப்பேதும் கூறாமல் அனைத்துச் செல்வங்களையும் அவனுக்கே தந்து விடுவதாகக் கூறினார்.
அப்போது சரவணனுக்கு திருப்தி ஏற்படவில்லை. அவன் மேலும் சாதுவைப் பார்த்து தந்திரமாக, ''மந்திரப் பொடியினால் உங்களுக்கு ஏதும் பயனில்லை என்றே நான் நினைக்கிறேன். இது உங்களிடம் இருந்தால் உங்களுடைய தவ வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும்,'' என்றான்.
சரவணனின் வார்த்தைகளை கேட்ட சாது புன்னகை புரிந்து, தான் வைத்திருந்த மந்திரத்தூள் இருக்கும் சிறிய பெட்டியையும் சரவணனிடம் கொடுத்துவிட்டார்.
இறுதியாக அந்தச் சாது சரவணனைப் பார்த்து எச்சரிக்கை செய்தார்.
''இதை நீ முறைப்படிப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், இதனால் உனக்கு ஆபத்து ஏற்படும். இந்தப் பொடியை இடது கண்ணில் பூசிக்கொண்டு எதைப் பார்த் தாலும் அது உனக்குத் தங்கமாகவே தெரியும். ஆனால், இதே பவுடரை நீ உன் வலது கண்ணில் பூசிக்கொண்டால் உன் கண்களின் பார்வை போய்விடும்,'' என்றார்.
சரவணனிடம் அவர் இப்படிக் கூறிவிட்டு உடனே மறைந்து விட்டார்.
சரவணன் எல்லையற்ற ஆனந்தம் அடைந் தான். அடுத்த கணமே அவன் சாது கொடுத்த பொடியைத் தன் இடது கண்ணில் பூசிக் கொண்டான்.
என்ன அற்புதம்! அவன் பார்த்த அனைத்துமே அவனுக்குத் தங்கமாகவே தெரிந்தது. அவன் பார்த்த மரம், கல், பாறை, மலர், தரை ஆகிய அனைத்தும் அவன் கண்ணுக்குத் தங்கமாகவே தெரிந்தது.
ஆனால், சரவணனின் பேராசை எல்லை கடந்து சென்றது. இந்தப் பொடியை ஒரு கண்ணில் பூசிக்கொண்டு பார்த்தாலே, இவ்வளவு தங்கமாகத் தெரியும் போது, இதனை இரண்டு கண்களிலும், பூசிக்கொண்டு பார்த்தால் உலகமே தனக்குத் தங்கமாகத் தெரியும் என நினைத்தான். அப்போது அவன் இருந்த மகிழ்ச்சியில் சாது சொன்ன எச்சரிக்கையையும் மறந்தான்.
உடனே அவன் அந்தச் சாது கொடுத்த பொடியைத் தன் வலது கண்ணில் பூசிக் கொண்டான். பாவம்! அடுத்த நிமிடம் அவன் கண்ணொளி பறிபோனது. அவன் பார்வையற்றவன் ஆனான். தன் வாழ்நாள் முழுவதுமே பார்வையற்றவனாகவே வாழ்ந்து இறந்தான்.
முற்றும்.
