தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்த்ரா! (19)

மாஜிக் மந்த்ரா! (19)

மாஜிக் மந்த்ரா! (19)


PUBLISHED ON : மார் 07, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மந்த்ராவின் கருப்பு பூனையால் விரட்டப்பட்ட மங்காவும், வடிவும் ரங்கனிடம் சென்றனர். இனி-



ரங்கனிடம் சென்ற மங்கா, ''ஒரு நல்ல கொழு கொழு பூனைக்கு என்ன விலை தருவே?'' என்று கேட்டாள்.

''பூனையை பார்த்துதான் விலை சொல்ல முடியும். நல்ல ஜாதிப் பூனையா? வியாதி ஏதுமில்லையே?'' என்று கேட்டான் ரங்கன்.

''அருமையான கருப்புப் பூனை. வெல்வெட் கணக்கா இருக்கும். ஆனா ஒரு கஷ்டம். அது எங்களை விட்டுப் போக மாட்டேங்குது. அதை மயக்கம் செய்துதான் கொண்டு போகணும். அதுக்கு உங்ககிட்ட ஏதாவது மருந்து இருக்கா?''

''மயக்க மருந்து தானே? அது தூங்கும் போது இதைப் பஞ்சிலே நனைத்து அதன் மூக்கருகே ஒரு நிமிடம் புடிச்சிட்டிருங்க போதும். அப்புறம் இரண்டு மணி நேரம் சென்ற பிறகுதான் அதுக்கு நினைவு வரும். அதுக்குள்ளே எத்தனையோ காரியங் களை முடிச்சுடலாம் இந்தா!'' என்று ஒரு சிறு பாட்டிலை மங்காத்தா விடம் கொடுத்தான் ரங்கன்.

''சாயங்காலம் கோவிலாண்ட இருப்பேன். பூனையோட வாங்க. பூனையைப் பாத்து காசு தரேன்...'' என்று தன் வண்டியைத் தள்ளிக் கொண்டு நகர்ந்தான்.

கருப்புப் பூனையை ஒழித்துக் கட்டி விடுவ தென்ற முடிவோடு ரங்கன் கொடுத்த பாட்டி லுடன் அதைக் தேடலாயினர் மங்காவும், வடிவும்.

''கருப்புப் பூனைக்கு மயக்க மருந்து கொடுத்தால், நினைவிழந்து போகும். அதை எப்படிக் கொண்டு போவது?'' என்று கேட்டாள் மங்கா.

''கவலைப்படாதே மங்கா! 'லாப்'பில் ஒரு பெட்டியை பார்த்தேன். ஆராய்ச்சிக்காக முயலை எப்போதோ கூண்டு போன்ற அந்தப் பெட்டியில் வைத்துக் கொண்டு வந்தனர். இப்போ முயலைக் காணோம். அந்தப் பெட்டி கேட்பாரற்று மூலையில் கிடக்கு. அதைக் கொண்டுவரேன். 'லாப்' வாட்ச்மேன் நம்ம ஆளுதான். கண்டுக்க மாட்டான்...'' என்றாள் வடிவு.

''அப்படியே செய் வடிவு. சீக்கிரம் போ. நான் அந்தக் கருப்பு பூனை எங்கேன்னு பாக்கறேன். நீ அந்த அல்லிக் குளத்துப் பக்கம் பெட்டியோட வா. யாரும் அதிகம் போகாத இடம் அது. செடி, கொடிகள் காடாக மண்டிக் கிடக்கும். ஒருநாள், அந்தப் பூனையை அங்கே தான் பார்த்தேன். அது அங்கேதான் எங்கேயோ இருக்கணும்,'' என்று பூனையை தேடினாள் மங்கா.

அவள் அதிர்ஷ்டம், அவள் எதிர்பார்த்த படியே அல்லிக் குளத்தையடுத்த ஒரு நாலுகால் மண்டபத்தில் கருப்புப் பூனை மந்த்ரா வின் தாத்தா சுருண்டு படுத்து சுவாரஸ்யமாகக் கனவு கண்டபடி தூங்கிக் கொண்டிருந்தது. மரங்கள் குவிந்து குளு, குளு வென்றிருந்தது அந்த இடம்.

'சுகமாத் தூங்குறியா நீ? உன்னை நிரந்தரமாகத் தூங்க வைச்சு, உன் தலை விதியை ரங்கன் கிட்ட விட்டுடறேன்!' என்று கூறியபடி தன் கர்ச்சீபிலே, ரங்கன் கொடுத்த பாட்டிலில் உள்ள மயக்க மருந்தைக் கவிழ்த் தாள். மெதுவாக நடந்து அதன் அருகே போய் மயக்க மருந்து தடவிய கர்ச்சீப்பை அதன் மூக்குக்கு நேரே பிடித்தாள். அவள் கை நடுங்கியது; பயந்தாள்;

'கருப்புப் பூனை கண் விழித்து சீறி, மேலே பாயுமோ என்று!' நல்லவேளை அப்படி ஏதும் நிகழவில்லை. மந்த்ராவின் தாத்தா தூக்கத் திலேயே நினைவிழந்தார். மங்கா அதை தொட்டாள். ம்... ஹூம்! அது எழுந்திருக்க வில்லை. அவளுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி!

வடிவு பெட்டியோடு லொங்கு, லொங் கென்று ஓடி வந்தாள். ஒரு பக்கம் கம்பிகள் பொருத்தப்பட்டு அந்தப் பெட்டி கச்சிதமாக இருந்தது.

''ஏய், வடிவு! நீயும் சில வேளைகளில் புத்திசாலித்தனமாகக் காரியங்களைச் செய்யறே!'' என்று தோழியைப் பாராட்டிய மங்கா, பூனையை அந்தப் பெட்டிக்குள் போட்டு மூடினாள்.

''ரங்கன்கிட்ட இதைத் தள்ளிட்டு, கணிசமான தொகையை வாங்கணும்!'' என்று கோவிலுக்குப் போகத் திட்டமிடலானார்கள் இருவரும்.

இதே வேளையில்...

மந்த்ரா மந்திரப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். தான் செய்யும் மாஜிக்குக ளெல்லாம் தாறுமாறாக, தப்புத் தப்பாகப் போவதில் அவளுக்கு ரொம்ப மனக்குறை.

'தாத்தா மாதிரி நானும் மாஜிக் செய்து அவரை திகைப்படையச் செய்யணும்!' என்று மந்திர தந்திரங்களைக் கவனமுடன் படிக்கலானாள்.

'ஆ! இந்த மாஜிக்கை செய்தால் என்ன? திடீரென்று உருமாறி பளீரென்று தாத்தாவின் அருகில் போய் நிக்கணும்... இங்கு மறைந்து அங்கு போய் தோன்றுவது!' எப்படியும் தாத்தா விடம் சபாஷ் பெறத் துடியாக இருந்த மந்த்ரா, உடனே மந்திரங்களை கவனமாக கூறினாள்.

''குட்டிச் சாத்தான்! இந்தமுறை குழப்பாதே. என்னைத் தாத்தா எங்கே இருக்காரோ அங்கே, பக்கத்தில் கொண்டு போய் வை!'' என்று ஆணையிட்டாள்.

குட்டிச் சாத்தான் இந்தத் தடவை குளறுபடி செய்யவில்லை. மந்த்ராவைக் கொண்டு போய் கேசவன் குட்டிக்கு அருகில் வைத்துவிட்டது. கேசவன் குட்டி எங்கே இருந்தார்? கம்பி வலைப் பெட்டிக்குள் மயங்கிய நிலையில்! மந்த்ராவை அவர் பக்கத்தில் பூனைக்கு அருகே கொண்டுபோய் உட்கார வைத்தது குட்டிச்சாத்தான். அதெப்படி முடியும்? அந்தச் சின்னப் பெட்டிக்குள் மந்த்ரா எப்படி அடங்குவாள்?

அது தெரியாதா குட்டிச் சாத்தானுக்கு? மந்த்ராவை அந்தப் பெட்டி கொள்ளுமாறு சின்ன மந்த்ராவாக உருமாற்றி விட்டது. அதனால் ஆகாதது எதுவுமில்லையே!

கண் திறந்த மந்த்ரா... ''ஐய்யோ! நான் இவ்வளவு சின்னவளாக எப்படிச் சுருங்கிப் போனேன்? தவித்தவள் தன் அருகே தாத்தா தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். தாங்கள் இருவரும் கூண்டில் அடைப் பட்டிருப்பதையும் உணர்ந்து கொண்டாள்.

'குட்டிச் சாத்தான் தப்பு செய்யவில்லை. தாத்தா இருக்குமிடத்துக்குக் கொண்டு விடச் சொன்னேன். அவர் இருக்குமிடத்தில், அவர் அருகே என்னை கொண்டு வந்து விட்டு விட்டது. ஆனால், தாத்தா வைக் கூண்டில் அடைத்தது யார்?' கம்பி வழியே எட்டிப் பார்த்தாள். மங்கா, வடிவின் கால்களும், ஸ்கர்ட்டும் தெரிந்தன.

'ஓ! தங்களைத் துரத்திய பூனையைப் பழிவாங்க இவர்கள் ஏதோ சதித் திட்டம் போட்டிருக்கின்றனர். தாத்தா இப்படித் தூங்க மாட்டாரே... தூக்கமா மயக்கமா?' என்று குழம்பினாள் மந்த்ரா.

அப்போது திடீரென்று வடிவு கத்தினாள்.

''ஏய் மங்கா... இந்தப் பெட்டி திடீர்னு ஏகமா கனக்குது... என்னன்னு தெரியல்லே. என்னாலே தூக்கவே முடியல்லே!''

''மூடுடி வாயை... பேசாமல் தூக்கிட்டு வா. நீ ஒரு பூசணிக்காய். ஒரு காரியத் துக்கும் லாயக்கில்லே. சீக்கிரம் ரங்கன் கிட்டே இந்தக் கருப்பு பூனையை தள்ளிட்டு, காசை வாங்கிட்டு ஹாஸ்டல் திரும்ப வேண்டாமா? நட, நட...!''

மந்த்ரா அவர்கள் பேச்சைக் கேட்டாள். நடப்பதை வேடிக்கை பார்க்கக் காத்திருந்தாள்.

'தாத்தா இப்படி தூங்குவதற்கு அந்த மூதேவிகள் என்ன செய்தனரோ தெரியலையே' என்று கவலையாகவும் இருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட புலியாக இல்லை பூனையோடு நெடு நேரம் பொறுமை காத்தாள்... முடிவில்...

''அதோ ரங்கன். நமக்காகத்தான் காத்திட்டிருக்காரு!'' என்றாள் மங்காத்தா.

''இதோ நான் சொன்ன பூனை. நல்லாத் தூங்குது... என்ன கொடுப்பே?''

''ஓ! பூனைக் கடத்தலா? இனி சும்மா இருந்தால் ஆபத்து. தாத்தாவைப் பார்த்தா இப்போ எழுந்திருக்க மாட்டார் போலிருக்கு. முதல்ல நாங்க ரெண்டு பேரும் இந்தக் குள்ள உருவத்திலிருந்து பெரிதாகிற வழியைப் பார்க்கணும். அதற்கு அப்புறம் இவர்களிடமிருந்து தப்புவதற்குத் திட்டமிடணும்,'' என்ற முடிவுக்கு வந்த மந்த்ரா இப்போதும் வழக்கமான தவறைச் செய்து விட்டாள்.

மாஜிக் தொடரும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us