தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சீதக்காதி!

சீதக்காதி!

சீதக்காதி!


PUBLISHED ON : மார் 07, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரண்மனை போன்ற தமது கல்வீட்டில் அமர்ந்து எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார் சீதக்காதி. அப்போது இரவலன் ஒருவன் வந்து வீட்டு வாயிலில் நின்று பொருள் வேண்டினான். அவனுக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுக்க வேண்டும் என்று சீதக்காதி விரும்பினார். உடனே, அவரது மனைவியை அழைத்தார். அவரோ வீட்டு வேலையாக வெளியே சென்றிருந்தாள். அதனால், தம் முன் எண்ணெய் வைத்திருந்த தங்கக் கிண்ணத்தையே அந்த இரவலனுக்குக் கொடுத்தனுப்பினார். அதைப் பெற்ற யாசகன் பெரிதும் மனம் மகிழ்ந்து சென்றான்.

அதன்பின் வெளியில் சென்றிருந்த மனைவி வந்தார். நடந்த நிகழ்ச்சியை அறிந்தார். யாசகனை வரவழைத்தார். 'தம் கணவர் பரிசாக அளித்த தங்கக் கிண்ணம் தமக்கு தாய் வீட்டார் சீர்வரிசை யாகத் தந்த பொருள் களில் ஒன்றாகும்' என்று கூறி, அதனை அவனிட மிருந்து பெற்றுக் கொண்டாள். அதற்கு மாற்றாக, வேறு ஒரு தங்கக் கிண்ணத்தையே கொடுத்தனுப்பினார்.

இது சீதக்காதிக்கு தெரியாது.

பின்னர் ஒருநாள், அதே யாசகன், அதே நேரத்தில் பிச்சைக்கு வந்தான். அன்றும் அவர் அதே தங்கக் கிண்ணத்தையே அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார். அவன் கடந்தமுறை நடந்த நிகழ்ச்சியை விளக்கிக் கூறினான்.

அதைக் கேட்ட அவர், ''அந்தக் கிண்ணம் என் மனைவியின் கொடை! இந்தக் கிண்ணம் என் கொடை! ஆகவே, இதனையும் பெற்றுக் கொள்!'' என்று கூறினார்.

இரவலனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

''வாழ்க வள்ளல் சீதக்காதி!'' என்று கூறிக்கொண்டே சென்றான்.

சீதக்காதியின் அரண்மனையில் உமறுப் புலவர் ஒரு பக்கமும், கந்தசாமிப் புலவர் மற்றொரு பக்கமும், நமச்சிவாயப் புலவர் முதலிய பிற புலவர் பெருமக்கள் ஒரு பக்கமும், கடல் கடந்த பொருள் ஈட்டும் வணிகப் பெருமக்கள் ஒரு பக்கமும் அமர்ந்திருக்க, நடுவில் சீதக்காதி அமர்ந்து வந்தவருக்கெல்லாம் அளவில்லாது பொருள் வழங்கிக் கொண்டிருந்தார்.

உமறுப் புலவருக்குக் குடியிருக்க வீடும், புலவர் பணம் என்ற பெயரில் கலியாண மகிமையும் கொடுத்து வந்தார். அவரை பெரிதும் பாராட்டிப் பாடியவர் படிக்காசுத் தம்பிரான் ஆவார். தமிழ்ப் புலவர்களின் நெஞ்சம் பாக்களை ஆராய்ந்து சிவந்தது! சீதக்காதி வள்ளலின் இரு செங்கரங்களும் நாள்தோறும் அன்னார்க்குப் பொருளை ஈந்து சிவந்தது.

இதனை அறிந்தான் பாமர மக்களில் ஒருவன். அவன் புலவர் ஒருவரை அணுகினான். அவரிடம் சீதக்காதியைப் புகழ்ந்து ஒரு பாட்டு இயற்றித் தரும்படி கேட்டான். அவர் ஒரு பாடலைப பாடிக் கொடுத்தார். பாமரன் அதைப் பெற்றுக் கொண்டு மனப்பாடம் செய்தான். பின் சீதக்காதியின் அரண்மனைக்குச் சென்றான். அவன் முன் பயம் சிறிதும் இல்லாமல் நின்று பாடினான்.

''கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!''

இதனைக் கேட்ட புலவர் சிலர் உடனே அவனை எள்ளி நகையாடினர். புலவர் ஒருவருக்குச் சினமே பொங்கியது.

''இவன் உளறுகிறான்! இவனுக்குப் பரிசில் அளிக்கக் கூடாது!'' என்றார்.

வேறு ஒரு புலவர், ''இவன் பாட்டு உளறல் அன்று. இதற்கு உயர்ந்த பொருள் உண்டு. 'கர்ணனைப்போன்று இக்காலத்தில் வள்ளலாய் விளங்குபவரே! வெற்றியில் அவனுக்குப் பின்னால் பிறந்த விசயனைப் போன்றவரே! காடு சூழ்ந்த நாட்டையும், செல்வத்தையும் பெற்ற தென்பாண்டி நாட்டு மன்னரே! அளவில்லாமல் கொடுக்கும் வள்ளலே!' என்பது இவன் பாடிய பாட்டின் பொருளாகும்,'' என்று கூறினார்.

இதனைக் கேட்ட வள்ளலும், மற்றவரும் மனம் மகிழ்ந்தனர்.

பாமரன் தக்க பரிசில் பெற்றுச் சென்றான்.

வள்ளல் சீதக்காதிக்கு இறுதி நாள் நெருங்கிற்று. அவர் தாம் இறப்பது உறுதி என தம் மெய்யுணர்வால் உணர்ந்தார். உடனே சுற்றத்தாரை வரவழைத்தார். அவர்களிடம், ''நான் இறந்தவுடன் என் கை விரலில் உள்ள மோதிரத்தை கழற்ற வேண்டாம். அத்துடன் என்னை அடக்கம் செய்து விடுங்கள்!'' என்று வேண்டிக் கொண்டார்.

சில நாளில் அவர் உயிர் உடலிலிருந்து பிரிந்தது.

இதனை அறிந்த புரவலர் புலம்பினர். இரவலர் இரங்கினர். புலவர் கூட்டம் அலை கடல் நடுவிலே கப்பலோட்டி இல்லா கலம் போன்று தடுமாறிற்று. எல்லாரும் துன்பக் கடலில் மூழ்கினர்.

சீதக்காதியின் உடல் முஸ்லிம் மதச் சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அப்படியே சிறிது காலம் கடந்தது.

சீதக்காதியிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்த புலவர் பெருமான் படிக்காசுத் தம்பிரான் கீழக்கரைக்கு வந்தார். வள்ளல் இறையடி அடைந்ததை அறிந்தார். தாங்க முடியாத துயரம் அடைந்தார். அவருடைய சமாதியை அடைந்தார்.

அதன் முன் நின்று, ''வள்ளலே! நீ புகழ்க் கம்பம் நாட்டி வைத்தாய்! சவக்குழியில் நுழைந்தாய்! என்ன செய்வோம்! திரு மகளும், கலைமகளும், நிலமகளும், நாமும் இருந்து என்ன பயன்? கொடை மிகுந்த கோமானாகிய நீ இறந்த போது புலமையும் செத்து விட்டதன்றோ? வள்ளலாகிய நீ திரும்பி வந்து மீண்டும் இந்த உலகில் பிறந்தாலன்றி புலவர்களுக்கு பிழைக்க வழியே இல்லை. என்ன செய்வோம்?'' என்று பலவாறாகப் புலம்பினார்.

அப்போது இறையருளால் சமாதிக் குழி பிளந்தது! மோதிரம் அணிந்த கை விரல் வெளியே வந்தது.

மோதிரக் கையைக் கண்ட புலவர், 'இம்மோதிரத்தைக் கழற்றி அணிந்து கொள்க!'' என்று வள்ளல் உணர்த்திய குறிப்பு என கருதினார். அதை ஏற்று அணிந்தார்.

'கற்பக கையால் நம் பாட்டைக் கேட்டு கனிந்து அளித்திட்ட இம்மோதிரமானது தமிழ்ப்பாட்டின் சுவையொன்றும் அறியாத அற்பரிடம் சென்று, தா எனக் கை நீட்டிக் கேட்காதே என்று சொன்னது போல தோன்றிற்று!' என்று அதன் குறிப்பை பாட்டொன்றின் வாயிலாக புனைந்துரைத்தார்.

அன்று முதல் தமிழ் கூறும் நல்லுலகத்தில் உள்ள அனைவரும் சீதக்காதியைச், ''செத்தும் கொடுத்தான் சீதக்காதி!'' என்று புகழ்ந்து கூறினர்.

இந்த பொன்மொழி, தமிழ்மொழி உள்ள அளவும் சீதக்காதியின் புகழைக் கூறிக் கொண்டே இருக்கக் கூடிய ஒன்றாகும்.

செத்தும் ஈந்த சீதக்காதி வள்ளல் பெருமானின் புகழ் ஓங்குக!

முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us