தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்த்ரா! (21)

மாஜிக் மந்த்ரா! (21)

மாஜிக் மந்த்ரா! (21)


PUBLISHED ON : மார் 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மங்காத்தாவின் அட்டகாசங்கள் அதிகமானது. அவ்வளவையும் அடக்கினாள் மந்த்ரா. இனி-

அது மங்காத்தாவின் கால்கள்தான். திருட்டுத் தனமாக ஜன்னல் வழியே ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்தாள். கால் களைத் தொடர்ந்து மங்காத்தாவின் உடல் உள்ளே குதித்து நிற்கவே, ''ஏய் மங்கா! எங்கே போயிட்டே நீ?'' என்று கேட்டாள் வடிவு.

''டவுனுக்குப் போயிருந்தேன் சினிமா பார்க்க. சினிமாவுக்குப் போக அனுமதி கேட்டா இங்கே அடிக்க வருவாங்க. தினம் ஒரு சினிமா பார்த்தவ நான். காவல் காரருக்கு ஐஸ் வைத்தேன்... ஜாலியா ஈவினிங் ஷோ பாத்துட்டு வரேன்!'' என்று குஷியாகக் கண் சிமிட்டினாள் மங்காத்தா.

''என்ன படம்?'' என்று கேட்டாள் வடிவு.

''நாம் இந்தப் பள்ளிக்கூடத்திலே அவதிப்படறமே அதே போல ஒரு கதை. பெரிய இலக்கியமாம் அது. ஒரு நோஞ்சான் பையன் பசியால தவிக்கிறான். அநாதை இல்லத்திலே, படாத கஷ்டமெல்லாம் படறான்.

''என் பசி தீர இன்னும் கொஞ்சம் கஞ்சி ஊத்துங்க'ன்னு கெஞ்சறான். ஒரே சோகம். ஆனா அதிலே பாகின்னு ஒரு கில்லாடி வரான். அவனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந் தது. ஏழைப் பையன்களுக்கு பிழைக்கும் வழியைக் கற்றுத் தருகிறான் அந்த கேடி பாகின்!'' உற்சாகமாக சொல்லிக் கொண்டு போனாள் மங்காத்தா.

''நீ பார்த்தது புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்சின். 'ஆலிவர் டுவிஸ்ட்'ங்கற நாவல். நம்ம லைப்ரரியிலே கூட அந்தப் புத்தகம் இருக்கு. எடுத்துப் படி,'' என்று அவர்கள் பேச்சில் குறுக்கிட்டுக் கூறினாள் மந்த்ரா.

''அந்த நாவலை நான் ஏன் படிக்கணும்? ஒரே போர். ஆனா, அந்த ரவடி பாகின் பாத்திரம் எனக்குப் புடிச்சிருக்கு. அவனைப் போல நான் ஒரு பயிற்சிக் கூடம் நடத்தப் போறேன். அதிலே நீ ஒரு மாணவி!'' என்றாள் மந்த்ராவைப் பார்த்து மங்காத்தா!

''பிக்பாக்கெட் பண்றது எப்படின்னு வகுப்பு நடத்தப் போறியா?'' என்று அதிர்ந்து போய் கேட்டாள் மந்த்ரா.

''திருடர்களையும், ஜேப்படிக்காரர்களையும் உருவாக்கப் போகிறாயா?'' என்று கேட்டாள்.

''அதிலென்ன தப்பு? ஜேப்படி செய்வது ஒன்றும் சுலபமான விஷயமல்ல... தெரிந்ததா? அதற்கு எவ்வளவு லாவகம், சாமர்த்தியம் வேண்டும் தெரியுமா? உனக்கு எங்கே தெரியப் போகுது?''

''எனக்கு அது தெரிய வேண்டாம். அந்த சாமர்த்தியமும் எனக்கு வர வேண்டாம். நான் ஜேப்படித் திருடியாக விரும்பல்லே,'' என்றாள் மந்த்ரா முகம் சிவக்க.

''உன் விருப்பத்தை யார் கேட்டது? நீ என் ஜேப்படிப் பள்ளியில் முதல் மாணவியாகிறாய். உனக்கு முதல் தரமான பயிற்சி அளிக்கப் போகிறேன். எளிமை யான முதல் பாடம். என் பையிலிருந்து கைக்குட்டையை நான் உணராதபடி எடு பார்க்கலாம்!'' என்று தன் இரு கைகளையும் இடுப்பில் ஊன்றியபடி எதையோ வேடிக்கை பார்ப்பவளைப் போல நின்றாள். ஸ்கர்ட்டும், கோட்டும் அணிந்திருந்த மங்காத்தாவின் கோட்டுப் பையில் அவள் கைக்குட்டை துருத்திக் கொண்டிருந்தது.

''நான் எடுக்க மாட்டேன். எனக்கு ஜேப்படிப் பயிற்சி வேண்டாம். நான் உன் திருட்டுப் பயிற்சிப் பள்ளியின் மாணவியாக முடியாது!'' என்று அழுத்தம், திருத்தமாகக் கூறினாள் மந்த்ரா.

அதே சமயம், தன் எதிர்ப்பு மங்காத்தாவிடம் பலிக்காது என்பதையும் அவள் உள் மனம் கூறியது. இவளிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்திக்கலாயிற்று.

மந்த்ரா நைட் கவுனின் முன்பக்கத்தைக் கொத்தாகப் பிடித்து உலுக்கி அவளை படுக்கையிலிருந்து தூக்கினாள் மங்காத்தா.

''இப்படி முரண்டு பிடித்தேன்னா என்ன பண்ணுவேன் தெரியுமா?'' என்று முடிக்காமல் மந்த்ரா முகத்தை தன் மூக்கின் அருகே இழுத்து ஒரு முறைப்பு முறைத்தாள் மங்காத்தா.

பிறகு அவள் நைட் கவுனை விடுவித்து, ''மரியாதையா என் பின்னாலே வந்து நான் சொன்னபடி நைசா காரியத்தை முடி!'' மீண்டும் இடுப்பில் கையூன்றி ஜேப்படிக்கு போஸ் கொடுத்து நின்றாள் மங்காத்தா.

இதற்குள் அந்த அறையின் மற்ற மாணவிகளும் அவரவர் படுக்கையில் அமர்ந்தபடி ஆர்வத்துடன் மந்த்ராவையும், மங்காத்தாவையும் பார்த்தனர். மங்காத்தாவோடு மோதும் துணிச்சல் அவர்களில் யாருக்குமே கிடையாது. மந்த்ராவின் துணிச்சலைக் கண்டு வியப்பவர்கள் அவர்கள்.

இந்த இரவு வேளையில் இவளோடு வீண் தகராறு செய்தால் குழப்பம் ஏற்படும் என்ற முடிவுக்கு வந்த மந்த்ரா, அதைத் தவிர்க்க இந்த உதவாக்கரையின் விருப்பப்படி நடந்து கொள்ளுவோம் என முடிவு செய்து, மங்காத்தா வின் பின்னால் போய் நின்று கொண்டு, அவள் கைக்குட்டையை ஜேப்படி செய்யும் முயற்சி யில் ஈடுபட்டாள். அதே சமயம், அவள் வாய் குட்டிச்சாத்தானை அழைக்கும் மந்திரத்தையும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. இந்த விபரீத எண்ணத்தை இவள் மனதிலிருந்து அகற்றியாக வேண்டும் என்று உறுதி பூண்டாள் மந்த்ரா.

''ஏய்! என்ன செய்யறே நீ? இன்னும் உன் வேலையை ஆரம்பிக்கலையா? என்று அதட்டினாள் மங்காத்தா.

மந்த்ரா தவித்தாள். அவள் அழைப்புக்கு குட்டிச் சாத்தான் வரவில்லை. எந்த மாஜிக்கும் நிகழவில்லை.

''என்ன ஆச்சு? என் மந்திரம் பலிக்கலியே? குட்டிச் சாத்தான் ஏன் வரவில்லை?'' என்று மந்த்ரா கவலைப்பட்டபோது...

அந்த அற்புதம் நிகழ்ந்தது. மங்காத்தாவின் பையிலிருந்த கைக்குட்டை ஜிவ்வென்று தானாக எழும்பி, மந்த்ராவின் கையில் ஒட்டிக் கொண்டது. அது மட்டுமா? அந்தக் கைக்குட்டைகள் அடுத்தடுத்து ஒன்றோடொன்று முடி போட்டு கலர் கலராக வந்து கொண்டே இருந்தன. மகாபாரதத்தில் திரவுபதியின் புடவை முடிவில்லாமல் வளர்ந்து வந்து கொண்டிருந்தது போல. ஜால வித்தை காட்டுபவர் மேடையில் ஒரு அட்டைப் பெட்டிக்குள் ஒரு கர்ச்சீபை செருகி விட்டு, பின் அதிலிருந்து சங்கிலித் தொடராக ஏராளமான கர்ச்சீபுகளை வெளியில் இழுத்துப் பிரமிப் பூட்டுவாரே, அதுபோல...

மாணவிகள் வியப்பொலி எழுப்ப, திகைத்த மங்காத்தா திரும்பினாள். கலர் கலராகத் தன் சட்டைப் பையிலிருந்து கைக்குட்டைகளை உருவிக் கீழே குவித்துள்ள மந்த்ராவைக் கண்டு பயந்து போனவள், ''ஏய் இதென்ன?'' என்று குழறினாள்.தன் மாஜிக்கை குட்டிச் சாத்தான் வெற்றிகரமாக நடத்தியதில் மந்த்ராவுக்கு ஏக சந்தோஷம்.

''மங்காத்தா, உன் சட்டைப் பையிலே இவ்வளவு கைக்குட்டையா? எந்தக் கடையிலிருந்து கிளப்பினே? அடடே! கர்ச்சீப்போட இதோ ஒரு முயல் குட்டியும் வருதே உன் பாக்கெட்டிலிருந்து!'' என்று ஒரு முயல் குட்டியை அதன் காதுகளைப் பற்றியபடி மங்காத்தாவின் மூக்குக்கு முன்னே நீட்டினாள் மந்த்ரா.

''மு...முயலா!'' பீதியோடு குழறிய மங்காத்தா, ''மந்த்ரா... நிஜமாச் சொல்லு... நீ மந்திரவாதியா? இதெல்லாம்... எப்படி உன்னால்...?'' என்று அவள் அருகிலிருந்து ஓட முனைந்தாள் மங்காத்தா.

''முயல் மட்டுமா? இதோ ஒரு புறா கூட பறந்து வருதே!'' என்றாள் மந்த்ரா.

முகமெல்லாம் சிரிப்பாக மணிப்புறா ஒன்று மங்காத்தாவின் கோட் பையிலிருந்து வெளிப் பட்டு படபடவென்று சிறகடித்தபடி அந்த அறையில் வட்டமடித்துப் பறக்கலாயிற்று. மங்காத்தா தன்கோட் பையிலிருந்து இன்னும் என்னவெல்லாம் வருமோ என்று பயந்து போய் கோட்டைக் கழற்றி வீசி விட்டு, அறையிலிருந்து வெளியே ஓடினாள்.

அன்றிரவு அவள் வேறு அறையில் படுத்துத் தூங்கி இருக்க வேண்டும். மந்த்ரா இருந்த அறைக்கு அவள் வரவில்லை.

தன் மாஜிக் நல்லவிதமாக செயல்பட்டதில் மந்த்ராவுக்கு குஷியான குஷி.

'இனி அவள் ஜேப்படி பயிற்சி பள்ளி நடத்தும் திட்டத்தை செயல்படுத்த மாட்டாள்' என்று போர்வைக்குள் புகுந்து கொண்டு தூங்குவதற்காக கண்களை மூடினாள் மந்த்ரா.

ஆனால், மங்காத்தாவின் பிறவிக் குணம் மாறாது என்பதை அவள் அறியவில்லை.

- மாஜிக் தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us