PUBLISHED ON : மார் 21, 2014

முன்னொரு காலத்தில், மேட்டூர் என்ற ஊர் இருந்தது. அந்த ஊரில் வாசு, சோமு என்ற இரண்டு கூனர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் நண்பர்கள்.
இருவர் முதுகிலும் தேங்காய் அளவு தசை உருண்டை இருந்தது. இதனால், அவர்களால் நிமிர்ந்து நடக்க முடியாது. முதுகை வளைத்துக் குனிந்தபடியே நடந்தனர்.
அப்படி அவர்கள் நடந்து செல்வது வேடிக்கையாக இருந்தது. அவர்கள் நடப்பதைப் பார்த்தால் போதும், சிறுவர்கள் அவர்களைச் சூழ்ந்து நின்று, கேலி செய்து விளையாடுவர். அவர்களின் கேலிக்கு அஞ்சிய இருவரும், அந்த ஊரில் எந்த வேலையும் செய்வது இல்லை. காட்டிற்குச் சென்று விறகு வெட்டி வாழ்க்கை நடத்தி வந்தனர்.
அவர்கள் இருவரில் வாசு நல்லவனாகவும், உழைப்பாளியாகவும் இருந்தான். சோமுவோ சோம்பேறியாகவும், ஏமாற்றுக்காரனாகவும் இருந்தான்.
அடிக்கடி சோமு விறகு வெட்டக் காட்டிற்குச் செல்ல மாட்டான். வாசுவை ஏமாற்றி, அவன் உழைப்பில், தன் பசியைப் போக்கிக் கொள்வான்.
அன்றும் வழக்கம் போல வாசு விறகு வெட்டக் காட்டிற்குப் புறப்பட்டான்.
அவனிடம் சோமு, ''எனக்கு காய்ச்சல் அடிக்கிறது. என்னால் விறகு வெட்ட வர முடியாது,'' என்றான்.
விறகு வெட்ட நல்ல மரம் தேடிக் காட்டிற்குள் வெகு தொலைவு சென்றான் வாசு. ஒரு மரத்தைத் தேர்ந்து எடுத்து வெட்டினான். வெட்டிய விறகைப் பெரிய கட்டாகக் கட்டினான். அதற்குள், இருட்டிவிட்டது. இரவில் செல்ல வேண்டாம் என்று, அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் படுத்தான். நன்றாகத் தூங்கி விட்டான்.
நள்ளிரவில், யாரோ பாடும் குரல் கேட்டு, அவனுக்கு விழிப்பு வந்தது. 'இந்த நேரத்தில் யார் பாடுகிறார்கள்' என்று நாலா பக்கமும் பார்த்தான்.
ஒரு மரத்தடியில் தேவதைகள் கூட்டமாகப் பாடிக் கொண்டிருந்தது நிலவொளியில் அவனுக்குத் தெரிந்தது.
''ஒன்றும் ஒன்றும் இரண்டு,
இரண்டும் ஒன்றும் மூன்று''
இப்படியே அவை திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்தன.
இதைக் கேட்ட அவன், 'தேவதைகளுக்கு இதற்கு மேல் பாடத் தெரியவில்லை. அந்தப் பாட்டை முழுமையாகச் சொல்லித் தருவோம்' என்று நினைத்தான்.
அவற்றின் அருகே சென்றான். அவனைப் பார்த்ததும் தேவதைகள் பாட்டை நிறுத்தின.
''உங்கள் குரல் இனிமையாக உள்ளது. இந்தப் பாட்டை முழுமையாகப் பாடினால், இன்னும் நன்றாக இருக்கும்,'' என்றான் வாசு.
''இந்தப் பாட்டில் இதற்கு மேல் எங்களுக்குத் தெரியாது. அதனால், தெரிந்த வரை பாடிக் கொண்டு இருக்கிறோம்,'' என்றது தேவதைகளின் தலைவி.
''நான் அந்தப் பாட்டை முழுமையாகச் சொல்லித் தரவா?'' என்று கேட்டான்.
''சொல்லித் தா,'' என்று எல்லாத் தேவதைகளும் குரல் கொடுத்தன.
''ஒன்றும் ஒன்றும் இரண்டு,
இரண்டும் ஒன்றும் மூன்று,
மூன்றும் ஒன்றும் நான்கு,
நான்கும் ஒன்றும் ஐந்து,'' என்று இனிமையாகப் பாடினான் அவன்.
அந்தப் பாட்டை அவனுடன் சேர்ந்து தேவதைகளும் மகிழ்ச்சியாகப் பாடின.
தேவதைகளின் தலைவி அவனிடம், ''நீ எங்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்தாய். எங்களுடன் சேர்ந்து இனிமையாகப் பாடினாய். உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன். உன் முதுகில் உள்ள கூனை எடுத்து விடுகிறேன். இனி நீ நேராக நிற்பாய். நடப்பாய்,'' என்றது.
என்ன வியப்பு! அவன் முதுகில் இருந்த கூனை காணவில்லை. மற்றவர்களைப் போல நிமிர்ந்து நின்றான் வாசு.
மகிழ்ச்சியில் திளைத்த அவன், தேவதைகளுக்கு நன்றி சொன்னான்.
அப்போது திடீரென்று பூமி ஆடியது.
''ஆ! ஊ! என்று பயங்கரமான கூச்சல் கேட்டது.
''ஐயோ! பிசாசுகள் வருகின்றன. இந்த மரத்தில் ஏறி நன்றாக ஒளிந்துக் கொள். அவற்றின் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்று விடும்,'' என்று பதற்றத்துடன் சொன்னது தேவதை தலைவி.
பிறகு அவை அங்கிருந்து மறைந்தன.
அந்த மரத்தில் ஏறினான் அவன். அங்கிருந்த இலைகளுக்குள் ஒளிந்து கொண்டான். என்ன நடக்கிறது என்று கீழே பார்த்தான்.
பெரிய பிசாசு ஒன்றும், குட்டிப் பிசாசுகள் மூன்றும் அங்கே வந்தன. பார்ப்பதற்கு, அவை பயங்கரமாக இருந்தன.
மரத்து வேரில் அமர்ந்தது பெரிய பிசாசு. குட்டிப் பிசாசுகள் மூன்றும் அதன் எதிரில் நின்றன.
''குட்டிப் பிசாசுகளே... நீங்கள் இன்று என்னென்ன கொடிய செயல் செய்தீர்கள்? சொல்லுங்கள், உங்கள் திறமையைப் பார்க்கிறேன்,'' என்றது பெரிய பிசாசு.
முதலாவது குட்டிப் பிசாசு, ''நான் நல்லூரில் உள்ள எல்லோர் கண்களையும் குருடாக்கி விட்டேன். அவர்களால் இனிமேல் எதையும் பார்க்க முடியாது. இனி அங்கே அழுகையும் ஒப்பாரியும்தான் கேட்கும்,'' என்று பெருமையுடன் சொன்னது.
''அருமையான செயல் செய்தாய். உன்னைப் பாராட்டுகிறேன்,'' என்றது.
இரண்டாவது குட்டிப் பிசாசைப் பார்த்து, ''நீ என்ன செய்தாய்?'' என்று கேட்டது.
''புத்தூரில் உள்ள எல்லோரையும் ஊமைகளாக்கி விட்டேன். இனி அவர்களால் பேச முடியாது. பச்சிளம் குழந்தைகள் அழவும் முடியாமல் தவிக்கின்றனர். கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது,'' என்றது இரண்டாவது குட்டிப் பிசாசு.
''நீயும் அருமையான செயல் செய்தாய். உன்னையும் பாராட்டுகிறேன்,'' என்றது அது.
மூன்றாவது குட்டிப் பிசாசைப் பார்த்து, ''நீ என்ன செய்தாய்?'' என்று கேட்டது.
''அரசூரில் உள்ள எல்லோரையும் செவிடாக்கி விட்டேன். இனி அவர்களால் எதையும் கேட்க முடியாது,'' என்றது மூன்றாவது குட்டிப் பிசாசு.
''உன்னையும் பாராட்டுகிறேன். இப்படித் தான் மக்களுக்கு நாம் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் துன்பம் தாங்காமல் அழுது புலம்ப வேண்டும். அவர்களின் அழுகுரலைக் கேட்டு நாம் மகிழ வேண்டும்,'' என்றது அது.
அந்தப் பிசாசுகள் ஒன்றை, ஒன்று கட்டிப் பிடித்து ஆட்டம் போட்டன.
''இப்படியே மக்களுக்குத் துன்பம் தருவோம்,'' என்று ஆரவாரம் செய்தன.
மரத்தின் மேலிருந்த வாசு இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். 'இந்தப் பிசாசுகள் இப்படி மக்களுக்குத் துன்பம் தருகின்றனவே' என்று வருந்தினான்.
மீண்டும் அந்தப் பிசாசுகள் பேசத் தொடங்கின.
''என்னால் பார்வை இழந்தவர்கள் மீண்டும் பார்வை பெறப் போவதும் இல்லை. அவர்கள் அழுகுரல் நிற்கப் போவதும் இல்லை,'' என்று பெருமையுடன் சொன்னது முதலாவது குட்டிப் பிசாசு.
''எந்த நோய்க்கும் மருந்து இருக்க வேண்டுமே அவர்கள் திரும்பப் பார்வை பெற ஏதேனும் வழி உள்ளதா?'' என்று கேட்டது பெரிய பிசாசு.
''விடிகாலையில் செடிகளில் படிந்துள்ள பனித்துளிகளை அவர்கள் கண்களில் தடவி னால் போதும், அவர்கள் பார்வை பெறுவர். இந்த மருந்து நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் பார்வை பெறுவர் என்று அஞ்ச வேண்டாம்,'' என்றது முதலாவது குட்டிப் பிசாசு.
''இரண்டாவது குட்டிப் பிசாசே! உன்னால் ஊமையானவர்களுக்கும் இதே போல் மருந்து உள்ளதா?'' என்று கேட்டது பெரிய பிசாசு.
''புன்னை மலர்களைக் கொதிக்க வைத்த தண்ணீரைக் கொடுத்தால் போதும், அவர்கள் பேசத் தொடங்குவர்,'' என்றது இரண்டாவது குட்டிப் பிசாசு.
''மூன்றாவது குட்டிப் பிசாசே! உன்னால் செவிடானவர்கள் மீண்டும் கேட்க மருந்து உள்ளதா?'' என்று கேட்டது.
''அரசூருக்கு நடுவே கோவில் ஒன்று உள்ளது. அதன் எதிரில் பெரிய பாறை ஒன்று கிடக்கிறது. அந்தப் பாறையில் அவர்கள் காதை வைத்தால், கேட்கும் ஆற்றல் வந்து விடும்,'' என்றது மூன்றாவது குட்டிப் பிசாசு.
''ம்ம்ம்.... இந்த ரகசியம் நம்முடனே இருக்கட்டும். யாருக்கும் தெரிய வேண்டாம்; அவர்கள் எல்லாரும் துன்பம் தாங்காமல் அழுது புலம்பி துன்பப்படட்டும். இதே போல, புதுப்புதுத் துன்பங்களை அவர்களுக்குத் தாருங்கள்,'' என்று பூரிப்புடன் சொன்னது பெரிய பிசாசு.
பிறகு அவை அங்கிருந்து சென்றன.
பொழுது விடிந்தது. இனி ஆபத்து இல்லை என்பதை அறிந்த அவன், மரத்தில் இருந்து இறங்கினான்.
நல்லவனான அவன், பிசாசுகளால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்க நினைத்தான்.
-தொடரும்.
