தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாஜிக் மந்த்ரா! (23)

மாஜிக் மந்த்ரா! (23)

மாஜிக் மந்த்ரா! (23)


PUBLISHED ON : ஏப் 04, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்ற வாரம்: லைப்ரரியில் படித்துக் கொண்டிருந்த மந்த்ராவை தொந்தரவு பண்ண வந்தாள் மங்காத்தா... இனி...

''தாத்தா, பரீட்சை வரப்போறது. என்னை நிம்மதியாப் படிக்கவிடாமல், வகுப்பில் பாடங்களைக் கவனிக்க முடியாமல் இங்க மங்காத்தா அட்டகாசம் செய்யறா. அதனால் இங்குள்ள புத்தகங்களின் உதவியோடு பாடங்களைப் பயிற்சி செய்யலாம் என்று வந்தேன். பரீட்சையில் நல்ல மார்க் வாங்காவிட்டால் அம்மா கோபப்படுவாங்க நீங்களும்தான், இல்லையா?'' என்றாள் மந்த்ரா.

''நிஜம்தான். நீ புத்திசாலியாச்சே! முதலாவதா வருவே, மாஜிக் ஏதும் செய்யாமலேயே,'' மீசை குலுங்கச் சிரித்தார் தாத்தா.

''மாஜிக்கிலும் நீ முன்னேறி இருக்கே. படிப்பிலும் முன்னேறு. நானும் கொஞ்சம் ஊர் சுத்திப்பார்க்கப் போறேன்!'' என்று கிளம்பினார் தாத்தா. மந்த்ரா பாடங்களில் மூழ்கினாள். அப்போது மங்காத்தாவும், வடிவும் மந்த்ராவைத் தேடிக் கொண்டு அங்கு வந்தனர்.

''ஏய், மங்கா! மந்த்ராவை எங்கெங்கோ தேடினமே, அதோ பாரு லைப்ரரியிலே உட்கார்ந்து அக்கறையா பரீட்சைக்குத் தயார் பண்றா,'' என்று மந்த்ராவை சுட்டிக் காட்டினாள் வடிவு.

''ஓ...நமக்கு டிமிக்கு கொடுத்துட்டு இங்கே வந்து உட்கார்ந்திருக்காளா? சுலபமா மார்க் வாங்க நாம் அவளுக்கு வழி சொல்லித் தரலாம் வா...'' என்று வடிவுடன் லைப்ரரிக்குள் புகுந்தாள் மங்காத்தா.

இவர்கள் ஓசையின்றி தன்னை நெருங்குவதை அறியாமல் பாடங்களில் ஈடுபட்டிருந்த மந்த்ராவுக்கு, சரி பார்க்க ஒரு புத்தகம் வேண்டியிருந்தது. அவளுக்கு வேண்டிய அந்தப் புத்தகம் அலமாரியின் மேல் தட்டில் இருந்தது. எழுந்திருந்து ஏணியை நகர்த்தி வந்து பொருத்தி ஏறி அந்தப் புத்தகத்தை எடுக்கணும். சோம்பலாக இருந்தது மந்த்ராவுக்கு. சின்னப் பெண்தானே!

அதனால், மேல் தட்டிலுள்ள அந்தப் புத்தகம் தானாக அங்கிருந்து தன் அருகில் வர வேண்டும் என்று மாஜிக் செய்தாள் மந்த்ரா. அவள் போட்ட மந்திரத்துக்கு இப்போதெல்லாம் குட்டிச்சாத்தான் கட்டுப்பட்டு காரியங்களைச் செய்தது.

இந்த வேளையில்தானா மங்காத்தாவும், வடிவும் அங்கு வரவேண்டும்?

மந்த்ரா விரும்பிய ஒரு புத்தகத்தை அவள் அருகே அனுப்பிய குட்டிச்சாத்தான், அடுத்து ஒரு தமாஷ் செய்தது. என்ன தமாஷ்?

அந்த மேல் தட்டிலிருந்த வரிசைப் புத்தகங்கள் அத்தனையும் குண்டு புத்தகம், குட்டிப் புத்தகம், பைண்டுப் புத்தகம், தடிப் புத்தகம் எல்லாவற்றையும் மங்காத்தா, வடிவின் தலை மீது விழும்படி தள்ளிவிட்டது. தடதடவென்று புத்தக மழை தலையைத் தாக்கவே இருவரும், 'வீல்' என்று கத்தியபடி, தரையில் உருண்டனர்.

திடுக்கிட்ட மந்த்ரா திரும்பினாள்.

''ஏய் வடிவு! புத்தக அலமாரியை உன் இரும்பு முழங்கையாலே இடிச்சுத் தள்ளினியா? திடீர்னு இவ்வளவு புத்தகம் சரிந்து தலை மேலே விழுவானேன்?'' என்று வடிவை முறைத்தாள் மங்காத்தா.

''நான் ஷெல்ப்கிட்டயே போகலியே... உன் பின்னாடிதானே வந்தேன்! அம்மாடி எத்தனை பெரிய புத்தகங்கள் என் தலை மேலே விழுந்தன. விண் விண்ன்னு என்னமா வலிக்குது தலையை...!'' என்று இரு கைகளாலும் தன் தலையை அழுத்திக் கொண்டு புத்தகக் குவியலின் நடுவே பரிதாபமாக உட்கார்ந்திருந்தாள் வடிவு.

''கவலைப்படாதே! நான் புடிச்சு விடறேன், வா,'' என்று அவள் அருகில் போனாள் மந்த்ரா.

''அவ கிடக்கிறா விடு. வலி தானா சரியாப் போகும்,'' என்று மந்த்ராவின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தாள் மங்காத்தா.

''உனக்கு ஒரு வேலை இருக்கு. நீ எங்களோட வரே!'' என்றாள் மங்கா.

''ஏய், மங்கா கையை விடு. நான் எங்கேயும் வரமுடியாது. உன் வேலை எதுவும் எனக்கு வேண்டாம். நான் படிக்கணும். பரீட்சை நெருங்கிட்டுது,'' என்றாள் மந்த்ரா.

ஆனால், மங்காத்தா தன் பிடியை விடவில்லை. மந்த்ராவினால் அவளிடமிருந்து விடுபடவும் முடியவில்லை.

''நீ சிரமப்பட்டு படிக்காமலேயே சுலபமா பாசாகறதுக்கு ஒரு வழி காட்டறேன் வா...'' என்று மந்த்ராவை இழுத்துக் கொண்டு தலைமை ஆசிரியை தனபாக்கியத்தின் அறையை நோக்கிப் போனாள்.

''உனக்கு மட்டுமில்லே எங்களுக்கும் அது உதவியாக இருக்கும். நம்ம ஹெட்மிஸ்சோட ரூம் இது. பரீட்சைக் கேள்வித் தாள்கள் எல்லாம் இங்கேதான் இருக்கு. கதவு பூட்டியிருக்கேன்னு பாக்கிறியா? கவலைப்படாதே... அதோ பார் வெண்டிலேட்டர். அதன் கண்ணாடி கதவு உடைஞ்சு பழுதாயிருப்பது நம்ம அதிர்ஷ்டம். என்னால அதன் வழியாக நுழைய முடியாது. வடிவோ குண்டு. நீ சுலபமா நுழைந்து உள்ளே போயிடலாம். நானும் வடிவும் உன்னைத் தூக்கி...'' மங்காத்தா முடிக்கவில்லை. மந்த்ரா சீறினாள்.

''என்ன கேள்வித்தாள்களை உங்களுக்காக திருடிட்டு வரும்படி சொல்றியா என்ன? சுத்த அயோக்கியத்தனம், நேர்மையற்ற செயல்!'' முகம் சிவக்கச் சினந்தாள் மந்த்ரா.

''வடிவு இவளோட மற்றொரு கையையும் கெட்டியா புடி!'' என்று உத்தரவிட்டாள் மங்காத்தா.

''உன் உபதேசம் தேவையில்லை. சீக்கிரம் காரியத்தை முடி. நாங்க அறையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கிட்ட காத்திட்டிருக்கோம். ம்...'' என்று வடிவுக்கு ஜாடை காட்டவே, இருவரும் மந்த்ராவை அலாக்காகத் தூக்கி வெண்டிலேட்டருக்கு உயர்த்தினர்.

''சட்டத்தைப் புடிச்சுகிட்டு எவ்வி உள்ளே குதி!'' என்று உத்தரவிட்டாள் மங்கா.

'இவங்ககிட்ட இருந்து தப்ப ஏதாவது மாஜிக் செய்தாகணும்... என்ன செய்யலாம்? ஒரு மாஜிக்கும் நினைவுக்கு வரமாட்டேங்குதே,'' என்று நினைத்தபடி அவர்கள் மேலே உயர்த்தித் தள்ள, வேறுவழியின்றி வெண்டிலேட்டரைப் பற்றிக் கொண்டு எம்பி அதனுள் நுழைந்து அறையினுள் குதித்தாள் மந்த்ரா. நல்லவேளை கீழே ஒரு சோபா இருந்தது.

திருட்டுத் தனத்துக்கு தன்னைக் கட்டாயப்படுத்தி உள்ளே தள்ளி விட்டதில் மந்த்ரா வெலவெலத்துப் போயிருந்தாள். அந்தக் கலவரத்தில் மந்திரம் எதுவும் அவள் நினைவுக்கு வரவில்லை.

குழப்பத்துடன் ஹெட்மிஸ்சின் அறையைப் பார்த்தாள்.

''பூட்டப்பட்ட அவர் அறைக்குள்தான் திருட்டுத்தனமாக நுழைந்திருப்பதை ஹெட்மிஸ் அறிவாரானால்?'' மந்த்ராவின் உடல் நடுங்கியது. வியர்வை குப்பென்று வெளிப்பட்டது. அதே சமயம் அறைக் கதவில் சாவியை நுழைக்கும் சத்தமும் கேட்டது.

''ஐயையோ என்ன செய்வேன்? ஹெட்மிஸ்தான் கதவைத் திறந்துக்கிட்டு உள்ளே வராங்கபோலிருக்கு. நான்... நான் அவங்க கண்ணிலே படாம ஈயா, கொசுவா, குளவியா மாறிப் பறந்து போயிடணும்,'' என்று படபடத்தபடி குட்டிச்சாத்தானைக் கூப்பிட்டாள்.

அடுத்த விநாடி மந்த்ரா ஒரு குளவியாக மாறி, கதவின் உட்பக்கக் கைப்பிடியில் உட்கார்ந்திருந்தாள். அதே சமயம் வெளியே ஜன்னலுக்குக் கீழே ஒண்டிக் கொண்டிருந்த வடிவு, 'ப்ஸ்... ப்ஸ்! என்று மங்காவை அழைத்தாள்.

''ஹெட்மிஸ் அவங்க அறைக்கு போறாங்க. நாம் மந்த்ராவை உள்ளே தள்ளி இருக்கமே. அவளுக்கு எச்சரிக்க வேண்டாமா?'' கிசுகிசுத்தாள். மங்காத்தா தன் ஈன புத்தியைக் காட்டினாள்.

''அந்த மந்த்ரா நம்மை காட்டிக் கொடுக்கும் முன் நாம் முந்திக்கலாம். மந்த்ரா அறைக்குள் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்ததை நாம் பார்த்ததாகச் சொல்லி நாம் தப்பிச்சுடலாம்,'' என்று வடிவுடன் ஹெட்மிஸ் அறையை நோக்கி ஓடினாள். அதற்குள் ஹெட்மிஸ் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து விட்டார்.

கைப்பிடியில் செங்குளவியாக உட்கார்ந்திருந்த மந்த்ரா, ''நல்லவேளை தப்பினோம்!'' என்று வெளியே பறந்து செல்ல முயலும் போது, ஹெட்மிஸ் தனபாக்கியத்தின் கழுகுக் கண்களில் பட்டுவிட்டாள். தனத்துக்கு குளவி என்றாலே நடுக்கம். ஒருமுறை ஒரு குளவி கொட்டி மூன்று நாள் முகம் வீங்கிப் போய் அவஸ்தைப் பட்டிருக்கிறார். ஆகவே, தன் கையில் சுருட்டி வைத்திருந்த செய்தித்தாளினால் அதை அடித்து வீழ்த்த முற்பட்டார்.

'இது எங்கேயிருந்து வந்தது?' என்று பத்திரிகைக் காகிதச் சுருளினால் அதை வீசி தாக்க முற்பட்டாள். ஹெட்மிஸ்சின் தாக்குதலிலிருந்து தப்ப இங்குமங்கும் பறந்தாள் மந்த்ரா. அப்போது கதவு தட்டப்பட்டது!

- மாஜிக் தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us