PUBLISHED ON : ஏப் 11, 2014

சென்றவாரம்: தேர்வு வினாத்தாள் இருக்கும் அறைக்குள் மந்த்ராவை தள்ளி விட்டனர் மங்காத்தாவும், வடிவும். அப்போது மிஸ் உள்ளே வரவே குளவியாக மாறினாள் மந்த்ரா. இனி-
''மிஸ், மிஸ்'' என்று கூப்பிடும் குரலும் தொடரவே தனபாக்கியம் கையில் பேப்பர் சுருளுடன் கதவைத் திறந்தார். குளவியும் இந்த சந்தர்ப்பத்தில் வெளியேற ஓடி வந்தது. அதை அடித்து வீழ்த்த தனம் பேப்பரை வீச, அது மங்காத்தாவின் முகத்தைத் தாக்கியது.
தன் பேப்பர் அடி, மாணவி மங்காத்தாவின் மீது விழுந்ததைக் கண்ட ஹெட்மிஸ்,''ஓ! சாரி மங்கா... ரூமுக்குள்ளே ஒரு பொல்லாத குளவி... அதை அடிக்கப் போய்...'' மன்னிப்பு கேட்டுக் கொண்டார் தனம்.
மங்காத்தா பேப்பர் அடியை பொருட் படுத்தாமல் மந்த்ராவை தேடினாள். அவள் வாய், திட்டமிட்டிருந்தபடி பேசியது.
''நாங்க வந்து மந்த்ரா, அய் அவளை இங்கே காணமே!'' மங்காவின் பார்வை அறையைத் துழாவியது. குளவியைத் தேடுவதில் கவனமாக இருந்த ஹெட்மிஸ், ''நீ என்ன சொல்றே மங்கா? இப்போ எதுவும் என் காதில் விழாது... அந்தக் குளவியை அடித்து வீழ்த்தினால்தான் என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியும். இங்கே ஒரு மருந்தடிக்கிற ஸ்ப்ரே இருந்ததே,'' என்று அதைத் தேடி எடுத்தாள்.
மங்காவும், வடிவும் திடீர் பிரவேசம் செய்ததினால் வெளியே பறந்து போக முடியாத குளவி மந்த்ரா அறைக்குள்ளேயே வட்ட மடித்துக் கொண்டிருந்தாள்.
ஹெட்மிஸ் கொசு, ஈக்கொல்லி ஸ்பிரே மருந்தை எடுத்து குளவியை விரட்டிக் கொண்டே அடுத்த அறைக் குள் போக, மந்த்ரா குளவியாக, ''மிஸ்... மிஸ்... அந்த மருந்தை என் மேலே தெளிக்காதீங்க... நான் குளவி இல்லே மந்த்ரா!''
''ஏ குட்டிச் சாத்தான் சீக்கிரம் என்னை உருமாற்று,'' என்று ஓலமிட்ட அடுத்த வினாடி...
குளவி மந்த்ராவாகி ஹெட்மிஸ்சின் மீது மோதிக் கொண்டாள்.
''ஓவ்!'' என்று தனபாக்கியம் மந்த்ரா வின் மோதலினால் தடுமாறினார்.
''சாரி மிஸ்,'' என்று அசடு வழிந்தாள் மந்த்ரா.
''நீயா?'' என்ற ஹெட்மிஸ் சுதாரித்துக் கொண்டு, ''நான் குளவியை விரட்டிக் கொண்டு வந்தேன். நீ வருவதை கவனிக் கல்லே... அது... அது தப்பி போயிட்டது. நல்லவேளை எனக்கு குளவிகளைக் கண்டாலே பிடிக்காது!'' என மோதிக் கொண்டதாக நினைத்து மந்த்ராவுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஹெட்மிஸ்.
மந்த்ராவின் கண்கள் மங்காவையும், வடிவையும் தேடின.
அவர்கள் ஹெட்மிஸ்சின் அறையில் தனியே இருப்பது நினைவுக்கு வரவே, அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதையும் ஊகித்து விட்டாள் மந்த்ரா.
அவள் ஊகம் சரிதான். மங்காத்தா ஹெட்மிஸ்சின் டிராயருக்குள் கையை நுழைத்துக் கேள்வித் தாள்களை தேடி துழாவிக் கொண்டிருந்தாள்.
''வடிவு! ஹெட்மிஸ் வராங்களான்னு கவனிச்சுக்க,'' என்று தோழியை காவலிருக்கச் செய்திருந்தாள்.
மந்த்ரா மங்காத்தாவின் திருட்டுத் தனத்தைத் தடுக்க உடனே மாஜிக் போட்டாள்.
''ஹெட்மிஸ்சின் டிராயர்கள் திறக்க முடியாமல் போகணும். மங்காத்தாவின் கண்களில் படாமல் கேள்வித்தாள்களெல்லாம் மறைந்து போகணும்,'' என்று குட்டிச் சாத்தானுக்கு உத்தரவிட்டாள். ஆனால், அந்த மங்கா டிராயருக்குள் கையை நுழைத்து விட்டிருந்ததாலே அவள் மாஜிக் செயல்பட்டு டிராயர் இறுக்கமாக மூடிக்கொள்ள, ஹெட்மிஸ்சின் அறையிலிருந்து மங்காத்தாவின் குரல், 'வீல்' என்று அலறியது.
''அது மங்காவோட குரல்!'' என்றார் ஹெட்மிஸ். மந்த்ராவும் திகைத்தாள் திருப்தி யோடு. இருவரும் அங்கே போனபோது, மங்காத்தாவின் கை டிராயருக்குள் சிக்கிக் கொண்டிருக்க, அவள் இடுப்பை வளைத்துப் பிடித்தபடி குண்டு வடிவு இழுத்துக் கொண்டிருந்தாள்.
''என் விரல்கள் டிராயருக்குள் மாட்டிக்கிச்சு திறக்க வரல்லே... கையை விடுவிக்க உதவுங்களேன்!'' என்று பரிதாபமாக கத்தினாள் மங்காத்தா.
மந்த்ரா தன் மாஜிக்கை அகற்றும்படி குட்டிச் சாத்தானிடம் கூற, மங்காத்தாவின் கை டிராயரி லிருந்து விடுபட, தொபுக்கடீரென்று இருவரும் தரையில் விழுந்து உருண்டனர்.
திருட்டு விழி விழித்துக் கொண்டு விழுந்து கிடக்கும் அவ்விருவரிடமும் இடுப்பில் கையூன்றியபடி கேட்டார் ஹெட்மிஸ், ''என்ன மங்கா, வடிவு! உங்க ரெண்டு பேருக்கும் பரீட்சை கேள்வித்தாளைப் பார்க்கறதிலே இவ்வளவு ஆர்வமா? சரி அப்படியே உட்காருங்க, கொஸ்ட்டின் பேப்பரைத் தரேன். இப்பவே இங்கேயே பரீட்சை எழுதுங்க. எல்லாரும் பரீட்சை எழுதறவரை நீங்க காத்திருக்க வேண்டாம்,'' என்று கூறி அவர் களிடம் வினாத்தாளையும், விடைத்தாளையும் திணித்தாள்.
''இனி நான் நிம்மதியாக பரீட்சைக்குத் தயார் பண்ண லைப்ரரிக்குப் போறேன்,'' என்று கிளம்பினாள் மந்த்ரா.
அங்கு அவள் தீவிரமாகப் பாடங்களை படிப்பதில் ஈடுபட்டிருக்கும் போது, தாத்தாவின் குரல் கேட்டது, '' என்ன மந்த்ரா! ரொம்ப நேரமாக படிச்சுகிட்டிருக்கே போலிருக்கே?'' என்று கேட்டப்படி கருப்புப் பூனை அவள் அருகே வந்தது.
''ஆமா, தாத்தா நடுவிலே கொஞ்சம் இடை வேளையும் கிடைச்சது. ஹெட்மிஸ் ரூம்வரை போய் வந்தேன்!'' என்றாள் விஷமச் சிரிப்புடன் மந்த்ரா.
வகுப்பில் மாணவிகள் கூடி இருந்தனர். ஆசிரியை வரவில்லை. ஆகவே, பேச்சும், கூச்சலுமாக இருந்தது. அவர்கள் பேச்சு எல்லாம் வீட்டுப் பாடத்தைப் பற்றியதாக இருந்தது. மாணவிகள் யாவரும் ஒழுங்காக, 'ஹோம் ஒர்க்' செய்வதில்லை. இதனால் கோபங்கொண்ட ஆசிரியர் முதல் நாள் எல்லாப் பாடங்களைச் செய்யாதவர்களுக்கு கடுமையான தண்டனை தரப்படும் என்றும் எச்சரித்திருந்தார். ஆசிரியரின் எச்சரிக்கைக்கு பயந்து எல்லாரும் ஹோம் ஒர்க் செய்து கொண்டு வந்திருந்தனர்.
அதை ஒருவருக்கு ஒருவர் சரிப்பார்த்தும், தங்களுக்குத் தெரியாததைப் பிற மாணவி களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட கூச்சலும், பேச்சும் வகுப்பில் சூழ்ந்து கொண்டிருந்தது.
மங்காத்தா ஹோம் ஒர்க் ஏதும் செய்ய வில்லை. அந்தப் பழக்கமும் அவளிடம் கிடையாது. பள்ளிக் கூடத்தையும், படிப்பையும் தொல்லையாகக் கருதுபவளாயிற்றே! ஆனால், ஆசிரியர் கடுமையாக எச்சரித்திருந்ததும், எல்லாம் மாணவிகளும் வீட்டுப் பாடங்களைச் செய்து கொண்டு வந்திருப்பதும் அவளிடம் கலக்கத்தை உண்டாக்கியது. என்ன செய்யலாம் என்று குறுகுறுத்த மங்காத்தாவின் பார்வையில் பட்டது மந்த்ராதான்.
ஒழுங்காக ஹோம் ஒர்க்கை செய்து கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்கும் மந்த்ராவிடம் போனாள்.
''மந்த்ரா நீ புத்திசாலி மாணவியாயிற்றே. ஹோம் ஒர்க்கையெல்லாம் செய்திருப்பே. நான் ஏதும் பண்ணல்லே உன்னுடையதைக் கொடு. சட்டுன்னு காப்பி பண்ணிட்டுத் தரேன்!'' என்று கேட்டாள்.
மந்த்ரா பதிலுக்கு காத்திருக்கவில்லை. அவள் கையில், வைத்திருந்த ஹோம் ஒர்க் பேப்பர்களைப் பிடித்து இழுத்தாள் மங்காத்தா.
''ஏய்... ஏய்... மங்கா இழுக்காதே கிழிஞ் சிடும்!'' என்று மந்த்ரா கத்த, அதற்குள் அவள் வீட்டுப் பாடம் செய்திருந்த காகிதம் 'டர்' என்று கிழிந்து விட்டது. மங்காத்தாவின் முரட்டுத் தனத்தினால் ஒரு பாதி தன் கையிலும், மறுபாதி மந்த்ராவிடம் இருப்பதைக் கண்டவள், ''சே! என்ன அடாசுக் காகிதத்திலே எழுதியிருக்கே நீ? கிழிந்து விட்டது. கொண்டா அந்தப் பாதியை என்று அலட்சியமாகக் கேட்டாள் மங்காத்தா.
மந்த்ராவுக்கு அழுகையாக வந்தது. ஆசிரியர் வரும் வேளை, தன் ஹோம் ஒர்க்குக்கு நேர்ந்த கதியைக் கண்டு கண் கலங்கினாள். ஆசிரியர் வருவதற்குள் கிழிந்த காகிதங்களை ஒன்றாக இணைத்து சமாளித்தாக வேண்டும். எப்படி? மாஜிக் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
''அடிக்கடி குட்டிச் சாத்தானைக் கூப்பிட்டுத் தொந்தரவு செய்யாதே,'' என்று கூறியிருந்தார் தாத்தா. ஆனால், இந்த முட்டாள், முரடு, முசுடு மங்காத்தா, அடிக்கடி தொல்லை தரும்போது குட்டிச்சாத்தானைக் கூப்பிடாமல் இருக்க முடியுமா? அவசர அவசரமாக குட்டிச் சாத்தானை வரவழைக்க மந்திரங்களைக் கூறினாள். கிழிந்த விடைத்தாள்களை ஒன்றாக ஒட்டிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டாள்.
அதே சமயம் ஆசிரியரும் வகுப்புக்குள் நுழைந்து கொண்டிருந்தார்! அதற்குள் மந்த்ரா வின் கையிலிருந்த மறுபாதி காகிதங்களையும் மங்காத்தா பறித்துக் கொண்டிருந்தாள். அவள் இரண்டு கையிலும் பாதி, பாதி காகிதங்கள். மந்த்ரா ஹோம் ஒர்க் செய்த காகிதங்கள். அது மட்டுமா? மங்காத்தாவின் கை முழுக்க கொழ கொழவென்று பசை!
''ஐய்ய்! இதென்னது? கையெல்லாம் ஒரேபசை! என்று கிரீச்சிட்ட மங்காத்தாவின் மணிக்கட்டை ஆசிரியரின் உறுதியான கை பற்றிக் கொண்டது. மந்த்ராவின் மாஜிக் பலித்து விட்டது. கிழிந்த இரு துண்டுக் காகிதங்களும் ஒன்றாக இணைந்து விட்டன. ஆனால், குட்டிச்சாத்தான் அதிகப்படியான பசையை மங்காத்தாவின் கைகளில் அப்பிவிட்டது.
- மாஜிக் தொடரும்
