sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

மேஜிக் மந்த்ரா! (6)

/

மேஜிக் மந்த்ரா! (6)

மேஜிக் மந்த்ரா! (6)

மேஜிக் மந்த்ரா! (6)


PUBLISHED ON : டிச 06, 2013

Google News

PUBLISHED ON : டிச 06, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்றவாரம்: மங்காத்தா, மாஜிக் மந்த்ராவை பழிவாங்க வேண்டுமென்று துடியாகத் துடித்தாள். இனி-

''ஏய், திமிர் பிடித்த கழுதே!'' என்று மந்த்ரா தோள்களைப் பற்றி உலுக்கினாள் மங்காத்தா.

''உன்னால் நேர்ந்தது தான் இது. சமயத்தில் கீழே குனிந்து காரியத்தைக் கெடுத்து விட்டாய்! ஆகவே, இந்த வகுப்பறையைக் கழுவித் துடைத்து சுத்தம் செய்ய வேண்டியவள் நீதான்!'' என்று உறுமியவள் தன் சகாக்களிடம், ''ஒரு பக்கெட் தண்ணியும், பிரஷ்ஷும் கொண்டு வந்து இவளிடம் கொடுங்க. இவள் சுத்தம் செய்யும் வரை நாம் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கலாம்!'' என்று தன் சகாக்களுடன் வெளி யேறினாள் மங்காத்தா.

பக்கெட்டில் தண்ணீரும், துடைப்பக் குச்சியும் கொண்டு வர ஓடினாள் ஒருவள். மந்த்ரா பதிலேதும் கூறவில்லை. உடல் பலம் கொண்ட மங்காத்தாவுடன் பேசி பயனில்லை. மாணவிகள் அவளிடம் பயந்து, அவளுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இங்கு புதிய மாணவித் தோழிகள் தனக்கு யாருமில்லை. ஆகவே, மனோபலமும் மாஜிக்கும் தான் துணை, என்ற முடிவோடு செயல்படலானாள் மந்த்ரா.

'எவ்வளவு பெரிய அறை? பலநாள் குப்பையும், தூசியும், அழுக்கும்... அதோடு இந்த இங்க் வேறு. நான் ஒருத்தியாக இதை எப்படி சுத்தம் செய்ய முடியும்? மந்திரம் போட்டு ஏதாவது செய்ய வேண்டியதுதான். தாத்தா சொல்லிக் கொடுத்துள்ள மந்திரத்தை மறக்காமல் மனப்பாடம் செய்து கொள்ளவேண்டும். எனக்கு மறதி அதிகம். தவிர எதற்கு எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டுமென்பது தெரியவில்லை. அதனால் குழப்பங்கள். ம்.. போகப் போக சரியாகி விடும்' என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்ட மந்த்ரா வகுப்பறையை சுத்தமாக்கித் தரும்படி குட்டித் சாத்தனை கூப்பிட மந்திரங்களைக் கூறினாள்.

ஓம். ரீம். ஹீம். காளி... சாமுண்டி... மகாமாயே... குட்டிச்சாத்தான்...! என்று மந்த்ரா கண்களை மூடிக் கொண்டு மந்திரங்களை ஜெபித்தாள். மின்னல் வெட்டியது. கடமுடா என்ற சத்தம் உண்டாயிற்று. புகை மூட்டம் சூழ்ந்தது. மந்த்ரா கண்களைத் திறந்தாள். அவளுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி.

''என் மந்திரம் பலிக்கிறது. குட்டிச் சாத்தான் அறையை சுத்தம் செய்கிறது!'' என்று குதூகலக் கூச்சலிட்டாள்.

''நிஜம்தான்... நீ ஏவிய குட்டிச் சாத்தான் எக்கச் சக்கமாக சுத்தம் செய்திருக்கிறது!'' என்றது ஒரு குரல். அது மந்த்ரா தாத்தா கேசவன் குட்டியின் குரல் தான். அந்த வகுப்பறையில் மந்த்ரா டெஸ்க்கின் மீது கருப்புப் பூனையாக உட்கார்ந்திருந்தார் தாத்தா. புகை மூட்டம் விலகிய நிலையில், மந்த்ரா வகுப்பறையைப் பார்த்தாள். அவளுக்கு பகீரென்றது.

வகுப்பு துப்புரவாக சுத்தப்படுத்தப் பட்டிருந்தது. கரும் பலகை கூட வெளுப்பாக! சுவரில் மாட்டப் பட்டிருந்த படத்தில் படம் இல்லை. வெள்ளைத்தாளாக தொங்கிக் கொண்டிருந்தது. அதே போல அங்கிருந்த எந்தப் படங்களிலும், சார்ட்களிலும் எதுவும் இல்லை. எல்லாம் ஒரே வெள்ளை, ''ஐயோ தாத்தா,'' என்று அலறினாள் மந்த்ரா.

''நீ பயப்பட வேண்டாம்... நான் எல்லாத்தையும் சீர் செய்துவிடறேன். நீ நிம்மதியா வெளியேறு!'' என்றது கருப்புப் பூனை.

''மந்திரம் கற்றுக் கொள்வது பெரிதல்ல. அதை எப்படி? எங்கு? எப்போது? பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ளணும். அரைகுறை அறிவினால் இப்படித்தான் அவஸ்தை ஏற்படும்!'' தாத்தாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வகுப்பறையிலிருந்து வெளியேறினாள் மந்த்ரா. தன் பேத்தியின் குளறுபடிகளை ஒழுங்குபடுத்துவதில் முனைந்தார் பலே மந்திரவாதியான கேசவன் குட்டி.வகுப்புக்கு வெளியே மங்காத்தாவும், அவள் சகாக்களும் புதிய விஷமத்துக்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தப் பள்ளியின் நிர்வாகி தன் காரில் வந்து இறங்கினார். தன் டிரைவரிடம், ''நான் தலைமை ஆசிரியையோடு பேசிவிட்டு வர சிறிது தாமதமாகும். நீ அதுவரை இங்கு காத்திருக்க வேண்டாம். காரை இங்கேயே விட்டு விட்டு வெளியில் போய் 'டீ' சாப்பிட்டு விட்டு வரலாம்,'' என்று கூறி டிரைவரை அனுப்பிவிட்டு, தலைமை ஆசிரியைப் பார்க்கப் போனார் பள்ளி நிர்வாகி.

நிர்வாகி அப்பால் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மங்காத்தா, விஷமத்துக்கு தயாரானாள்.

''ஏய் அது பள்ளியின் நிர்வாகி. அவர் காரை சோதனையிடுவோம். ஏதாவது இருக்குமானால் அதை அகற்றி, அந்தத் திருட்டை அந்த புதுப்பெண் மந்த்ரா தலையில் சுமத்திவிடுவோம்!'' என்று கூட்டாளி களை இழுத்துக் கொண்டு பள்ளி நிர்வாகியின் காரின் அருகில் போனாள்.

''இதோ அவருடைய காஷ்மீர் சால்வை!'' என்றாள் ஒருத்தி.

''அவரோட பை கூட இருக்கு!'' என்று ஒரு கைப்பையை எடுத்து ஆராய்ந்தாள் மற்றொரு மாணவி.

இந்தவேளையில்தான் மந்த்ரா வகுப்பறையிலிருந்து வெளியே வந்தாள்.

இரண்டு மாணவிகள் கார் டிக்கியிலிருந்து ஜாக்கியை எடுத்து கீழே வைத்து இயக்கி, காரை தூக்கினர்.

''இந்த சக்கரத்தை கழட்டிடலாம். கார் சக்கரங்களை வாங்கும் ஒரு ஆசாமியை எனக்குத் தெரியும்,'' என்று தன் திறமையைப் பறைசாற்றினாள் ஒருத்தி.

மந்த்ராவுக்கு, 'பகீர்' என்றாயிற்று. ''ஐயோ இந்த விஷமக் கொடுக்குகள் யாருடைய காரையோ அக்குவேறு, ஆணிவேறாக்குகிறார்களே! கார் சொந்தக்காரர் வருவதற்குள் இதை சரிசெய்து இவர்களை இங்கிருந்து விரட்டியடிக்கணும். இப்போதே மந்திரம் போடுகிறேன்!'' என்று கண்களை மூடிக் கொண்டு முணு முணுக்கலானாள்.

''குட்டிச் சாத்தானப்பா! உடனே வந்து உதவி செய்யப்பா!'' என்று வேண்டிக் கொண்டாள்.

இவர்கள் கழற்றிய காரின் பாகங்களை ஒன்றுசேரப் பண்ணி சரியாக்கப்பா!

அவ்வளவுதான்! அடுத்த வினாடி மந்த்ராவின் மாஜிக் பலித்தது. மங்காத்தாவும், அவள் விஷமக் கொடுக்குகளும் பிரித்துப் போட்டிருந்த காரின் பாகங்கள் குபீரென்று ஆகாயத்தில் கிளம்பின. கார் சக்கரத்தை பிடித்துக் கொண்டிருந்த இரு மாணவிகளையும் தூக்கிக் கொண்டு சக்கரம் பறக்கும் தட்டு போல 'ஜிவ்' என்று ஆகாயத்தில் எழுந்தது. பையை கையில் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி குய்யோமுய்யோ என்று கத்திக் கொண்டு பறந்தாள் ஒருத்தி. கார் ரேடியோ மங்காத்தாவுடன் ஒலிபரப்பிக் கொண்டே உயரப் போயிற்று.

இப்படி இவர்கள் கார் சாமான்களோடு உயரே பறப்பதைக் கண்ட மந்த்ரா, 'ச்சே!! மறுபடி என் மந்திரத்தில் ஏதோ கோளாறு, என்ன ஆச்சு? நான் கார் சாமான்களைத்தானே ஒன்று சேர்த்து ஒழுங்காக்கும்படி குட்டிச் சாத்தான்களை வேண்டிக் கொண்டேன். இவர்களை இப்போ எப்படிக் கீழே கொண்டு வருவது!' என்று குழம்பித் தவித்துப்போனாள். அப்போது...

''உன் வகுப்பறையில் மறைந்து போன தேசப்படங்களையும், மற்றவர்களையும் சரி செய்து விட்டேன்,'' என்று கூறியபடி கருப்புப் பூனை அவள் அருகே வந்தது.

மந்த்ரா மிரள மிரள விழித்தப்படி நிற்பதைக் கண்டு, ''மந்த்ரா குட்டி, என்ன ஆச்சு?'' என்று கேட்டார் தாத்தா.

''அது வந்து தாத்தா... அந்தப் பொல்லாத மங்காத்தா, யாரோட காரிலோ விஷமம் செய்து நாசமாக்கிட்டு இருந்தா. அதன் சக்கரங்களும், மற்ற பொருட்களும் அதனதன் இடத்தில் போய்ப் பொருத்தி சரியாகணும்னு மந்திரம் போட்டேன். ஆனால், சாமான்கள் இவர்களைத் தூக்கிக் கொண்டு, குழறினாள் மந்த்ரா

''அந்தக் கார் சாமான்களை நீ கார் தொழிற்சாலைக்கு போகும்படி செய்து விட்டாய். அதுதான் அவைகள் தாங்கள் உருவாக்கப்பட்ட தொழிற்சாலையை நோக்கிப் பறக்கின்றன. ம்... சரி, நான் அவர்களை மீட்கிறேன், கவலைப் படாதே!'' என்று தாத்தா சரியான மந்திரம் போட, ராக்கெட் பூமிக்கு திரும்புவது போல, மங்காத்தாவும், அவள் தோழிகளும் விர் என்று கீழே வந்து கார் மீது விழுந்தனர். அவர்களால் எடுக்கப்பட்ட பாகங்கள் அங்கங்கே போய் பொருத்திக் கொண்டன. அவர்களுக்கு வியப்பான வியப்பு. மந்த்ராவை அவர்கள் பார்க்கவில்லை. ஆதலால், ''ஏய்! திருடர்கள் யாரும் எதையும் திருட முடியாதபடி உருவாக்கப்பட்ட காரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இது ஒரு அதிசயமான கார். நம் வேலைத்தனம் இதனிடம் பலிக்காது. வாங்கடி போகலாம்!'' என்று தன் சகாக்களுடன் அங்கிருந்து கிளம்பினாள் மங்காத்தா.

-மாஜிக் தொடரும்.






      Dinamalar
      Follow us