sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஹேரியட் டப்மேன் (3)

/

ஹேரியட் டப்மேன் (3)

ஹேரியட் டப்மேன் (3)

ஹேரியட் டப்மேன் (3)


PUBLISHED ON : டிச 06, 2013

Google News

PUBLISHED ON : டிச 06, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்று நட்ட நடு நிசியில் தன் இருப்பிடத்தை விட்டு கிளம்பியவள், மிகத்துரிதமாக அந்த காட்டு பாதை வழியே, அதோ அந்த ஆகாயக்கூரையில் நிற்கும் அந்த வடக்கு நட்சத்திரம் எனக்கு வழிகாட்டும்... கடவுள் எனக்கு துணை இருப்பார் என்று மனம் ததும்பி வழியும் நம்பிக்கையுடன் பல காத தூரம் பயணித்தவள்... சற்று விடியல் புலருமுன்பே, அந்த நாட்டு வைத்தியர் குறிப்பிட்ட அவரின் இல்லத்தை, தன்னைப் போன்ற அடிமைகளுக்கு தப்பிக்க உதவும் நல்ல உள்ளம் படைத்த வைத்தியரின் வீட்டை சென்றடைந்தாள்.

அவளின் வரவை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருந்த வைத்தியர் அன்புடன் அவளை வரவேற்று, உடனே ஒரு கடிதத்தில் சில குறிப்புகளை எழுதி கொடுத்து, ''ஹேரியட்! நான் இதில் குறிப்பிட்டிருக்கும் இந்த வீட்டை நீ சென்று அடைந்தால் உனக்கு எல்லா உதவிகளும் கிடைக்கும் என்றார்!''

பாவம் அச்சிறுமி, தனக்கு எழுதப்படிக்க தெரியாது என்று தன் நிலைமையை எடுத்துக் கூற, உடனே அவர் 'இந்த இருப்புப்பாதை வழியே சென்றால், நீ போக வேண்டிய ஸ்டேஷனை சென்றடைவாய்' என்று தான் எழுதியிருப்பதை கூறி, உடனே சிறுமியின் மனதில் படியும்படி... ஒரு முறைக்கு இரு முறையாக விளக்கினார்.

இந்த இருப்புப்பாதை நிஜம் அல்ல. இது ஒரு சந்தேக பாஷை... ஒரு ரகசிய பாதை. நீக்ரோ அடிமைகள் தப்பிச் செல்லும் வழி. ஸ்டேஷன் என்று நான் குறிப்பிட்டிருப்பது இப்படி தப்பிச்செல்லும் நீக்ரோக்களை மிக பாதுகாப்பாக தங்கள் இருப்பிடத்தில் ஒளித்து வைத்து கொண்டு... அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, தக்க தருணத்தில் மிகவும் பத்திரமான மற்றுமொரு இருப்புப் பாதைக்கு அனுப்புவர். அப்புறம் அங் கிருந்து... அங்கிருந்து... இப்படித்தான் தொடர் சங்கிலியாக... பல இருப்புப் பாதைகளை தாண்டி கடைசியாக சுதந்திரமாக வாழ வழி வகுக்கும் கனடா நாட்டு எல்லைக்குள் சேர்ப்பிக்கப்படுவர்! அடிமைகளின் வாழ்க்கையில் சுதந்திர ஒளிவீசத் தொடங்கும்... ஏக்கம் நிறைந்த அவர்களின் கனவுகளும் நினைவாகும்!

சிறுமி ஹேரியட்டுக்கு நன்றாக புரியும்படி விளக்கி விட்டு, ''ஹேரியட்! சில சமயம் ஒரு ஸ்டேஷனிலிருந்து மற்றொரு ஸ்டேஷ னுக்கு செல்ல பல நாட்கள் கூட ஆகலாம். அதனால் நீ பொறுமை காக்க வேண்டும். நீ உணர்ச்சி வசப்பட்டு, அந்த ஸ்டேஷன் மாஸ்டர்களை மீறி ஏதும் செய்துவிடாதே. அப்படிச் செய்தால், அதன் பின் விளைவுகள் மிகவும் பயங்கரமாகி விடும். இதனால் ஆபத்து உனக்கு மட்டுமல்ல... உங்களை போன்றவர்களுக்கு உதவ முயன்று கொண்டிருப்பவர்களையும்... சொல்ல முடியாத துன்பத்தில் ஆழ்த்திவிடும்,'' என்று புத்தி சொல்லி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்... நாட்டு மருத்துவர்.

நீர் வழிந்தோடும் கண்களுடன் அவரை வணங்கிவிட்டு, அன்று நட்ட நடு நிசியில், அந்த வடக்கு நட்சத்திரத்தின் உதவியுடன் வைத்தியர் குறிப்பிட்ட அடுத்த ஸ்டேஷனை சென்றடைந்தாள் சிறுமி ஹேரியட்.

இந்த அடிமை தளை ஒழிப்பதில் சில நல்ல உள்ளம் படைத்த வெள்ளைக்காரர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களுடன் மற்றும் அடிமைகளை விடுவித்து காப்பாற்றும் இயக்கங்களுடன் கூட மிகவும் ரகசியமாக கூட்டு சேர்த்துக்கொண்ட, இந்த இருப்புப்பாதை ஸ்டேஷன் கண்டக்டர் சங்கேத மொழியில் தப்பி வரும் அடிமைகளுக்கு உதவி வந்தனர்.

தப்பியோடும் அடிமைகளை திரும்பி பிடித்து வந்து பழைய முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வேலைக்கென்றே சில கில்லாடிகளை அந்த முதலாளிகள் மிகப் பெரும் கூலி கொடுத்து, அமர்த்தி இருந்தனர். இதையெல்லாம் பற்றி மிக நன்றாக அறிந்திருந்த இந்த ஸ்டேஷன் இருப்புப்பாதை கண்டக்டர்கள், செலவை பற்றி கவலைப்படாமல், தங்களிடம் தஞ்சம் புகுந்த அந்த அடிமைகளை மிக நல்ல விதமாக பராமரித்து, ஆறுதல் சொல்லி தக்க தருணத்தில் மிகவும் சமத்காரமாக அவர்களை பாதுகாப்பாக, சுதந்திரமாக வாழும் இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தங்களிடம் வேலை செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நீக்ரோ அடிமையும், இப்படியே தப்பி ஓடிக் கொண்டிருந்தால் அப்புறம் தங்களுக்கு வேலை செய்ய ஆட்களுக்கு எங்கே போவது என்று கொதித்து எழுந்த அந்த பண முதலாளிகளின் கூட்டத்தின் முயற்சியால், புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின் படி தப்பியோடும் நீக்ரோ அடிமைகளுக்கு உதவுவது சட்டப்படி மிகவும் கொடிய குற்றமாகும். அப்படி உதவுவோருக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்ற சட்டம் அமுலாக்கப்பட்டது.

ஆயினும், இதையெல்லாம் கண்டு அஞ்சி விடவில்லை அந்த இருப்புப்பாதை ரயில்வே ஸ்டேஷன் கண்டக்டர்கள் கூட்டம். இந்த கடுமையான சட்டம் அமுலாக்கப்படுவதை மோப்பம் பிடித்து விட்ட அந்த நல்ல உள்ளம் படைத்த கூட்டம், தங்களின் இருப்புப்பாதைகளை மிகவும் சமத்காரமாக கனடாவிற்கு மாற்றிக் கொண்டு விட்டனர்.

விக்டோரியா மகாராணியின் ஆளுகைக்கு உட்பட்ட கனடாவில் அடிமைத்தனம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை...

எது எப்படியோ... எங்கெல்லாம் தப்பி ஓடிய நீக்ரோக்கள் வசிக் கின்றனரோ, அங்கெல்லாம் அவர்களுக்கு வலைவீசி பிடிக்க முயன்று கொண்டிருந்தது பண ஆசை பிடித்த நய வஞ்சகக் கூட்டம்.

சிறுமி ஹேரியட் பல மாதங்களாக ஒவ்வொரு ஸ்டேஷன்களாக இடம் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தாள். ஏனெனில்... இந்த தப்பியோடி விட்ட நீக்ரோ கழுதையை தேடிப்பிடித்து கொண்டு வருபவர்களுக்கு ஏராளமான சன்மானம் அளிக்கப்படும் என்ற அறிக்கை விடப்பட்டதோடல்லாமல், இவளைப்பற்றிய விவரங்கள் அடங்கிய படமும், குறிப்பு முகமும் அச்சடிக்கப்பட்டு நெடுஞ்சாலைகள் முழுவதும் ஒட்டப்பட்டி ருந்தன. கண்கொத்திப்பாம்பாக இவளை வேட்டையாட ஆயுதம் தாங்கிய வேட்டைக் கார கூட்டம் சுற்றித்திரியாத இடமே இல்லையெனில் மிகையாகாது... அப்படியே நொந்து போய் சோர்ந்து உட்கார்ந்து கொண்டு விடுவாள் ஹேரியட்!

''கவலைப்படாதே சகோதரி! உன்னை மிக பத்திரமாக சுதந்திர பறவையாக பறக்க வைப்பது எங்களின் பொறுப்பு,'' என்று அந்த கண்டக்டர்கள் கூட்டம் சொல்லிச் சொல்லி இவளுக்கு உற்சாகமூட்டிக்கொண்டே இருந்தது.

கடைசியாக பலமாத இடமாற்றங்களுக்குப் பிறகு... கடைசியாக ஐந்தாவது கண்டக்டர்களிடம் இவள் ஒப்படைக்கப் பட்டாள்.

அவன் ஒரு விவசாயி. தன்னுடைய பெரிய வேனில் தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை ஏற்றிச் சென்று சந்தையில் விற்பவர்.

''சகோதரி! நாளை இரவு நான் சந்தைக்கு விற்பனைக்குரிய காய்கறி மூட்டைகளுடன் செல்லப்போகிறேன். அந்த காய்கறி மூட்டை களுக்கு இடையில் உன்னையும் அமர்த்தி கொள்கிறேன். நான் போகும் வழியில் இருக்கும் அனைவரும் நல்லவர்கள். ஆகையால் என்னை யாரும் சந்தேகிக்கவில்லை. அவ்வப்போது என்னால் முடிந்த அளவு புத்தம் புது காய்கறிகளை அவர்களுக்காக தனியே எடுத்துச் சென்று கொடுக்கிறேனே உங்களைப் போன்ற பரிதாபத்திற்குரியவர்களை கடத்திச் செல்ல எனக்கு அவர்களின் உதவி தேவைப்படுகிறது.

அப்படியிருக்கும் போது நான் செலவை கணக்குப்பார்க்க முடியுமா? அவர்கள் என்னை சிறிதும் சந்தேகிக்காத வகையில் நானே மனமுவர்ந்து கொடுப்பதைப்போல் கொடுத்துவிடு கிறேன். அதற்கு ஈடாக, தெய்வத்தின் ஆசியுடன் உங்களுக்கு உதவுகிறேன். இதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலுமே இல்லை சகோதரி... உன் எதிர்காலம், உன் அளப்பற்ற கனவுகள் அனைத்தும் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் உன்னை அழைத்துச்செல்கிறேன். தெய்வத்தின் துணையுடன் இன்று இரவு புறப்பட தயாராக இரு,'' என்று சொல்லி விடை பெற்றான் அந்த பண்பான விவசாயி.

- தொடரும்.






      Dinamalar
      Follow us