
சென்றவாரம்: மந்த்ரா போட்ட தவறான மந்திரத்தால் ஆகாயத்தில் பறந்தாள் மங்காத்தா. இனி -
மந்த்ராவுக்கு போன மூச்சு திரும்பி வந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இருக்காதா பின்னே! அவள் எதற்காகவோ மந்திரம் போட, அது மங்காத்தாவையும், அவள் கோஷ்டியையும் ஆகாயத்தில் தூக்கிக் கொண்டு போக, மந்த்ரா பயந்தே போனாள். பள்ளி நிர்வாகியின் காரில் அவர் கள் விஷமம் செய்து பாழாக்கியதை சரிசெய்து, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் மாஜிக் செய்தாள்.
''நல்லவேளை! சமயத்தில் நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள் தாத்தா! ரொம்ப தாங்க்ஸ்!'' என்று கருப்புப் பூனையை கட்டிக் கொண்டு முத்தமிட்டாள் மந்த்ரா.
''நாய்ப் பிழைப்பு என்று மனிதர்கள் அலுத்துக்கொள்ளுவர். விருப்பமில்லாத விவகாரங்களில் ஈடுபடும் நிர்பந்தம் ஏற்பட்டு அவதிப்படுவர். நான் பூனைப் பிழைப்புப் பிழைக்கிறேன் மந்த்ரா குட்டி!'' என்றார் தாத்தா.
''இனி இப்படி நீ அரைகுறை மந்திரம் போட்டு தப்புத் தப்பா மாஜிக் வேலையில் மாட்டிக் கொண்டால் நான் உதவிக்கு வர மாட்டேன்!'' என்று செல்லமாகக் கடிந்து கொண்டார் கருப்புப் பூனை தாத்தா.
''சாரி? கிராண்ட்பா...'' என்றாள் மந்த்ரா.
அன்று மாணவிகளுக்கு ஹாக்கி விளையாட்டில் பயிற்சி அளிப்பதாகக் கூறியிருந்தார் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியை.
மந்த்ராவுக்கு ஹாக்கி விளையாட்டில் ஒரு தனி ஈடுபாடு உண்டு. மாணவிகளெல்லாம் ஹாக்கி மட்டைகளுடன் மைதானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். ஆனால், மங்காத்தா வின் திட்டம் வேறாக இருந்தது. அவளுக்கு அன்று விளையாட்டில் கலந்து கொள்ள விருப்பமில்லை. விளையாட்டு டீச்சரை ஏமாற்றி விளையாடாமல், உட்கார்ந்து வேடிக்கை பார்க்க திட்டமிட்டாள். ஜிம்னாஸ்டிக் கூடத்திலிருந்து இறங்கி வரும் படிகளில் கால் இடறினாற்போல பாசாங்கு செய்து கீழே விழுந்தாள். ''ஓ! போச்சு என் கால் போச்சு!'' என்று கூக்குரலிட்டாள். பத்மா டீச்சர் மங்காத்தாவிடம் ஓடி வந்தார்.
அவள் கால்களை ஆராய்ந்தாள்.
''கணுக்காலிலே நரம்பு பிசகிட்டுது போலிருக்கு டீச்சர். வலி உயிர் போகுது... ஆவ்! காலை அசைக்க முடியலியே!'' ஆகாத்தியம் பண்ணினாள் மங்காத்தா போலியாக.
''சுளுக்கா இருக்கும்!'' கணுக்காலை அழுத்தித் தடவி விட்டபடி ஆதங்கப்பட்டார் பத்மா டீச்சர்.
''நீ விளையாட வர வேண்டாம். உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிரு. தானாக சரியாகிவிடும். இல்லேன்னா ஆயின் மெண்டை தடவிவிடச் சொல்றேன்...'' என்று கூறி விளையாட்டை கவனிக்கச் சென்றார் பத்மா டீச்சர்.
மைதானத்தில் குழுமியிருந்த மாணவிகளிடையே மங்காத்தாவின் கால்கள் பற்றிய செய்தி பரவியது. மந்த்ராவும் அதைக் கேட்டாள்.
''பாவம் மங்காத்தா விளையாட முடியாமல் போச்சு!'' என்று பரிதாபப்பட்டாள். இதற்குள் பத்மா டீச்சரின் விசில் ஒலித்தது. மாணவிகள் இரு டீமாகப் பிரிந்து மட்டைகளை தட்டிக் கொண்டு நின்றனர். மந்த்ராவுக்கு மங்காத்தா வின் நினைவு அகலவில்லை.
திடீரென்று அவள் அப்பா அடிக்கடி கூறும் ஒரு வார்த்தை நினைவுக்கு வந்தது. அவள் அப்பா மிலிட்டரி ஆபீஸர். அவள் பாட்டி, ''சங்கரா சவுக்கியமா? உடம்புக்கு ஒண்ணுமில்லையே?'' என்று தாயின் பரிவோடு விசாரிப்பார். அதற்கு மந்த்ராவின் அப்பா சங்கரன், ''ஐயாம் ஆஸ் பிட் ஆஸ் பிடில்!'' என்று பதில் கூறுவார். பிடில் வாத்தியத்தைப் போல நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? பிடிலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பாள் மந்த்ரா.
இப்போது அப்பாவின் அந்த வார்த்தை நினைவுக்கு வரவே, 'மங்காத்தா பிடில் போல இருந்தால், விளையாட வந்திருக்கலாம் இல்லையா' என்று மனதுக்குள் கூறிக்கொண்டே ஹாக்கிப் பந்தை தள்ளிக் கொண்டு ஓடினாள். அவளுடைய அந்த நினைப்பு மாஜிக்காக வேலை செய்தது.
சோம்பேறித் தனமாக உட்கார்ந்து கொண்டி ருந்த மங்காத்தா, அவளை அறியாமல் துள்ளி எழுந்தாள். அவள் இச்சையின்றியே அவளது கைகள் பிடில் வாசிப்பது போல இயங்க ஆரம் பித்தன. கால்கள் தானாக, தாள கதியில் நர்த்தன மாடின. மங்காத்தாவிடம் பிடில் இல்லை. ஆனால், பிடிலை தோள் பட்டையில் அழுத்திக் கொண்டு அதன் கம்பிகளில் வில்லை ஓட்டு வது போல பாவனை செய்தாள், குதித்தாள். நடந்தாள்!
''ஐயோ! என்ன ஆச்சு எனக்கு?'' என்று மங்காத்தா ஏதும் புரியாமல் தவித்துப் போனாள். மாணவிகளின் கவனம் மங்காத்தா வின் பக்கம் திரும்பியது. அவள், இல்லாத பிடிலை இயக்கியபடி குதிப்பதைப் பார்த்து எல்லாரும் சிரித்தனர். பத்மா டீச்சர் மங்காத்தா விடம் வேகமாக வந்தார்.
மந்த்ராவுக்கு பகீர் என்றது. பிடிலைப் பற்றித் தான் நினைத்ததே மங்காத்தாவின் இந்த பிடில் ஆட்டத்துக்கு காரணம் என்று அவளுக்கு மட்டுமே தெரியும். தன் நினைப்பே மாஜிக்காக செயல்படுவதைப் பார்த்தாள். வியந்தாள் மந்த்ரா.
''கால்களுக்கு சரியாப் போச்சுன்னா வந்து விளையாட்டிலே கலந்துக்க வேண்டியது தானே? இதென்னா கோணங்கித் தனமாக ஆடறே? மட்டையை எடுத்துக்கிட்டு மைதானத் துக்கு வா. வயலின் வாசிச்சது போதும். அடுத்து மிருதங்கம் வாசிக்க வேண்டாமா?'' என்று கடுமையாக கோபித்துக் கொண்டார் பத்மா டீச்சர்.
தான் ஏன் அப்படி பிடில் வாசித்தோம் என்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்த மங்காத்தா, முகம் தொங்கி போய் மைதானத்துக்குள் நடந்தாள்.
மைதானத்தில் மாணவிகள் ஹாக்கி விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். ஹாக்கி பந்தை எதிர் கோஷ்டியிடமிருந்து தட்டிக் கொண்டு போவது மந்த்ராவுக்கு வேடிக்கையாக இருந்தது. உற்சாகமாக விளை யாடிக் கொண்டிருந்தாள். மங்காத்தாவும் தீவிரமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள். ஹாக்கி மட்டை ஏந்தி இங்குமங்கும் பாய்ந்து பாய்ந்து ஓடிக்கொண்டே மந்த்ராவை எப்படி யாவது மட்டந்தட்ட வேண்டுமென்பதே அவள் குறிக்கோளாக இருந்தது. மங்காத்தா, மாணவி களிடையே தன் உடல் பலத்தினால் தலைவி யாக விளங்கினாள். தன் பதவிக்கு மந்த்ராவால் ஆபத்து வருமோ என்று அஞ்சினாள்.
இப்போதே மாணவிகளின் ஒரு கூட்டம் மந்த்ராவின் சாமர்த்தியம் பற்றி கூடிக் கூடிப் பேசுகிறது. இதை வளர விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள் மங்காத்தா.
பந்தை உந்தி உருட்டிக் கொண்டு ஓடிய மந்த்ராவின் கால்களை பின்னாலிருந்து ஒரு ஹாக்கி மட்டை கொக்கி போட்டு இழுத்தது. அப்படி இழுத்தவள் மங்காத்தாதான்! வளைவான ஹாக்கி மட்டையினால் வலிய இழுக்கப்பட்ட மந்த்ரா, மைதானத்தில் தலை குப்புற விழுந்தாள். அதே வேளையில் அவள் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மாணவி, பவுல் பவுல் (குற்றம்) என்று கூச்சலிட்டாள்.
விழுந்த மந்தராவின் மீது பாய இருந்த மங்காத்தாவை, தன் ஹாக்கி மட்டையைக் குறுக்கே நீட்டி தடுத்து நிறுத்தினாள். அடாவடிக் காரியான மங்காத்தா இதைப் பொறுப்பாளா? அந்த மாணவியின் தலைமுடியைக் கொத்தாகப் பற்றி அவளைத் தாக்கலானாள். மங்காத்தாவுக்கு ஆதரவு தரும் கோஷ்டியும், மங்காத்தாவை வெறுக்கும் கோஷ்டியும் வினாடியில் கைகலக்கலாயின. ஹாக்கி மட்டைகள் மோதிக் கொண்டன. மாணவிகள் மைதானத்து மண்ணில் விழுந்து கட்டிப் புரண்டனர். இவர்கள் போராட்டத்தின் நடுவே மந்த்ரா சிக்கிக் கொண்டு திணறினாள்.
விளையாட்டு ஆசிரியை பத்மா பரபரப் போடு ஓடி வந்தாள். சண்டையிடும் மாணவி களை விலக்க, அவர் வாயிலிருந்த விசில், ''வீல் வீல்!'' என்ற அலறியது. ஆனால், மாணவிகள் ஆசிரியையின் எச்சரிக்கை விசிலை லட்சியம் செய்யவில்லை. மோதிக் கொள்ளும் மாணவிகள் நடுவில் சிக்கித் திணறிய மந்த்ரா, ''ஐயோ கடவுளே! இவர்கள் சண்டையிடுவது நிற்க வேண்டும். ஓம் ஹ்ரீம், க்ராம் ஜக்கம்மா... பொம்மக்கா! நிம்மதியும் அமைதியும் நிலவச் செய்!'' என்று மந்திரம் போட்டு வேண்டிக் கொண்டாள். அடுத்த வினாடி... அத்தனை மாணவிகளும் அப்படி அப்படியே அவர்கள் போராடிக் கொண்டிருந்த அதே நிலையில், ஒருவர் மீது ஒருவர் விழுந்து கட்டிப்பிடித்தபடி மயங்கிப் போய் கும்பலாகக் கிடந்தனர். மந்த்ராவின் மந்திரம் பலித்து விட்டது வேறுவிதமாக!
''ஐயையோ மாணவிகள் இப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மயங்கி விழுந்து விட்டார்களே,'' என்று பதறினார் பத்மா டீச்சர்.
அவருக்கு, மந்த்ரா சண்டையை நிறுத்த மந்திரம் போட்டது தெரியாது. மந்த்ரா இதை எதிர்பார்க்கவில்லை.
''நான் இத்தகைய நிம்மதியையும் அமைதியையும் விரும்பவில்லை. எல்லாரும் தூங்கியல்லவா போய் விட்டனர்!'' என்று பரபரப்புடன் வேறு மந்திரம் போட்டாள்.
-மாஜிக் தொடரும்.

